நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சி...
நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!
நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.
வீட்டுக்குள் கார் நிறுத்த இடவசதி இல்லாததால், இரவு நேரத்தில் வீட்டின் முன்பகுதியில் தெருவிலேயே காரை நிறுத்துவது வழக்கம். அதன்படி காரை பார்க்கிங் செய்து விட்டுச் சென்ற அவர், காலையில் பார்த்தபோது காரை காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று இளைஞர்கள், காரை திருடிச் செல்வது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர்கள், டவுன் பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் (22), விளாகம் முத்துராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த பாலசதீஷ் (20), டவுன் அண்ணா தெருவில் வசிக்கும் முத்துராஜ் (21) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மூவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
போலீஸ் விசாரணையின்போது மூவரும் காரை எடுத்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அத்துடன், தாங்கள் காரைத் திருட வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லவில்லை எனத் தெரிவித்தனர்.

சூர்ய சரவணன், காருக்குள் மது பாட்டில்களை வைத்திருப்பது தங்களுக்குத் தெரியும் என்பதால், காரின் கதவு கண்ணாடியை உடைத்து, உள்ளே இருக்கும் பாட்டில்களை எடுக்கச் சென்றபோது, காரின் சாவியை அவர் மறந்து விட்டுச் சென்றதைப் பார்த்ததால் காரையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதிக்குச் சென்று மது குடித்ததும் மூவருக்கும் போதை தலைகேறியதால் அங்கேயே சிறிது நேரம் தூங்கிவிட்டு, போதை தெளிந்ததும் நடந்தே வீட்டுக்குச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். காரை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்த நெல்லை டவுன் போலீஸார், மூவரையும் கைதுசெய்தனர். போதைக்காக மது பாட்டில் திருடச் சென்ற இடத்தில், காரை கடத்திச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















