"தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை" - மக்களவையில் திரும...
பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெள்ளகோவில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும் என தெரியவந்தது. பெண்ணின் கை, கால்களில் கல்லால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. முகமும் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் எரிக்கப்பட்டு கருகிய நிலையில் இருந்தது. இதையடுத்து, இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பெண் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா? அல்லது நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து வெள்ளகோவில் போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

கொலையான இடத்தில் கிடைத்த மது பாட்டிலில் இருந்த பார்கோடுகள் வைத்து, அந்த மது எங்கு விற்பனை செய்யப்பட்டது என்றும், வட்டமலை அணையைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், கொலை நிகழ்ந்த 5-ஆம் தேதியன்று அணைக்கு ஒரு ஆணும், பெண்ணும் இருசக்கர வாகனத்தில் வருவதும், திரும்பி ஆண் மட்டும் செல்வது தெரியவந்தது. அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனம் திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கரின் (60) என்பதும், இவர் காவல்துறையில் காவலராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் பதுங்கி இருந்த சங்கரைப் பிடித்து விசாரித்ததில், "காவல்துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றி சங்கர் கடந்த 1998-இல் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 4 மனைவிகள் 7 குழந்தைகள் உள்ளனர். நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த வடிவுக்கரசி என்பவருக்கும் சங்கருக்கும் திருமணத்தைத் தாண்டிய முறையற்ற உறவு இருந்துள்ளது. சங்கர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், வடிவுக்கரசியின் உறவினர்களிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். ஆனால், அரசு வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித் தருமாறு சங்கரிடம் வடிவுக்கரசி வற்புறுத்தி வந்துள்ளார். பணத்தை தரவில்லையென்றால் போலீஸில் புகார் அளிக்கவுள்ளதாகவும் வடிவுக்கரசி சங்கரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சங்கர் கடந்த 5-ஆம் தேதி வெள்ளகோவிலில் எனக்கு பணம் வரவேண்டி உள்ளது. நீயும் உடன் வந்தால் பணத்தை வாங்கிக் கொடுத்துவிடுகிறேன் என்று வடிவுக்கரசியிடம் கூறியுள்ளார். இதை நம்பி வடிவுக்கரசியும் சங்கருடன் பழனியில் இருந்து 5-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் வந்துள்ளார்.
வெள்ளக்கோவில் வந்தபிறகு பணம் தருபவர்கள் வர சிறிது நேரம் ஆகும். அதுவரை அருகில் உள்ள அணையை சுற்றி பார்க்கலாம் எனக் கூறி, வட்டமலைக்கரை அணைக்கு வடிவுக்கரசியை அழைத்துச் சென்றுள்ளார். வட்டமலைகரை அணை ஓடையின் மேல் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். மது மயக்கத்தில் இருந்த வடிவுக்கரசியின் தலை,கை,கால் ஆகிய பகுதிகளில் கல்லைக் கொண்டு சங்கர் தாக்கியுள்ளார். இதில், மயக்கமடைந்த வடிவுக்கரசியின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஏற்கெனவே கொண்டு வந்திருந்த பெட்ரோலை வடிவுக்கரசியின் உடல் மீது ஊற்றி எரித்துள்ளார். வடிவுக்கரசி உயிரிழந்ததை உறுதிப்படுத்திய பின் அங்கிருந்து சங்கர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவால் முன்னாள் காவலரே பெண்ணை எரித்துக் கொலை செய்தது திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















