ஆங்கர்னா இப்படித்தான் இருக்கணுங்கிறதை உடைச்சதே மாகாபா தான்! - Ma Ka Pa Anand | D...
மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!
'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர் மனைவி மிஷேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், பிரபலங்கள் வசிக்கும் பிரெண்ட்வுட் என்ற பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இந்தப் பகுதியிலிருந்து அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்திருக்கிறது. உடனே காவல்துறையும், தீயணைப்புத் துறையும் அழைப்பு வந்த பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுதான் இயக்குநர் ராப் ரெய்னரும், அவரின் மனைவி மிஷேலும் சடலமாக மீட்கப்பட்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர், ``லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் கொள்ளை மற்றும் கொலைப் பிரிவு துப்பறிவாளர்கள் அந்த வீட்டிற்குச் சென்று, கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்." என்றார்.
ராப் ரெய்னரின் குடும்ப செய்தித் தொடர்பாளர் அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், ``மிஷேல் மற்றும் ராப் ரெய்னரின் துயர மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறோம்.
இந்தத் திடீர் இழப்பால் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை அவர்கள் கொலை செய்யப்பட்ட விதம், அல்லது கொலைக்கான காரணம் என எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை. மேலும், இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய யாரையும் கைது செய்யவில்லை.
இது குறித்துப் பேசிய காவல்துறை, ``மரணத்திற்கான காரணம் லாஸ் ஏஞ்சல்ஸ் பிரேதப் பரிசோதனை அலுவலகத்தால் ஆராய்ந்து அறிவிக்கப்படும். அதுவரை ஒத்துழைக்க வேண்டும்." எனக் கேட்டிருக்கிறது.


















