கையில் கட்டுடன் வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரியில் ராகுல்காந்தி பிரசாரம்
’மாணிக்கமாக இருந்த எங்களை பாஜக, பாட்ஷாவாக மாற்றிவிட்டது’ – மு.க.ஸ்டாலின் காட்டம்
கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் தமிழ்நாட்டு மக்களான உங்களையே சேரும் என்று மகிழ்ச்சியாக நான் பாடும் அளவிற்கு, மிகப்பெரிய வெற்றிச் செய்தியைப் பெற்ற மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன். தொகுதி மறுவரையறை என்பது முழுக்க முழுக்க பா.ஜ.க. என்ற ஒரு கட்சிக்குச் சாதகமான சட்டம் என உணர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளமும், சமாஜ்வாதி கட்சியும் அந்தச் சட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூர் மக்கள் செந்தில் பாலாஜியைப் புறக்கணித்த காரணத்தால், கோவை தெற்குத் தொகுதிக்கு வந்து போட்டியிடுகிறார் என மிஸ்டர் பழனிசாமி பேசியிருக்கிறார். செந்தில் பாலாஜி அவராகக் கோவைக்கு வரவில்லை. நான்தான் வரவழைத்திருக்கிறேன். கரூரில் கழகத்தின் வெற்றி கன்ஃபார்ம். கோவையிலும் வெற்றியை கன்ஃபார்ம் பண்ணச் சொல்லி, நான்தான் அவருக்குக் கோவையில் டியூட்டி போட்டிருக்கிறேன். இதனால்தான் பழனிசாமி, இப்போது பயந்தசாமியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார். கோவையில் 2021-ஆம் ஆண்டு நடந்தது, நிச்சயமாக இந்த முறை நடக்காது. கோவை முழுவதும் இந்த முறை நாங்கள்தான் வெல்வோம், நாங்கள் மட்டும்தான் வெல்வோம்.

வேலுமணி யாருடைய ஸ்பை?
கோவை உங்கள் கோட்டை என்று நினைக்கும் நினைப்பில் எப்போதோ ஓட்டையைப் போட்டுவிட்டோம். பழனிசாமியுடன் இருக்கும் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஊழலாட்சித் துறை அமைச்சர் என அனைவரும் சொன்னார்கள். பழனிசாமியாவது தன்னுடைய சம்பந்திக்கு டெண்டர்களை வாரி வாரி வழங்கினார். வேலுமணி தன்னுடைய குடும்பத்துக்கே வழங்கினார். பல பேருக்குத் துரோகம் செய்து வேட்டு வைத்த பழனிசாமிக்கே வேட்டு வைக்கப் போகும் ‘ஸ்பை’, வேலுமணிதான். யாருடைய ஸ்பை? உங்களின் கணிப்புக்கே விடுகிறேன். இவர்கள் கோவைக்கு செய்ததெல்லாம் வெறும் துரோகம்தான். தொழில், வர்த்தக மையமான கோவைக்குப் பா.ஜ.க. அரசு மெட்ரோ கிடையாது எனக் கையை விரித்தது, கோவை மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா? தி.மு.க.வின் சூப்பர்ஸ்டாரான தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசி திட்டத்தில் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பிலேயே, நம்முடைய எதிரிகள் எல்லாம் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தால் என்ன செய்ய முடியும் என்று, நேற்றுகூட பார்லிமென்ட்டில் காட்டியிருக்கிறோம். 5 நாளில் தேர்தலை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தார்கள். தேர்தல் பிரசாரம் எல்லாம் நெக்ஸ்ட்டுதான், தமிழ்நாட்டு உரிமைகள்தான் எங்களுக்கு முக்கியம் என களத்தில் இறங்கிச் சாதித்துவிட்டோம். கருப்புக் கொடி ஏற்றினால் தொகுதி மறுவரையரை நின்றுவிடுமா? கருப்புச் சட்டை போட்டால் நின்றுவிடுமா? என கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து, இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது. தொகுதி மறுவரையறைக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி பேசி பழனிசாமி முட்டுக் கொடுத்தார். கடைசியில் என்ன ஆனது? பழனிசாமி இனிமேல் பா.ஜ.க.வுக்கு முட்டுக் கொடுக்கும்போது, கொஞ்சம் பார்த்துப் பக்குவமாக கொடுங்கள். இல்லை என்றால் இப்படித்தான் ஆகும். பா.ஜ.க.வை நம்பினால் உங்களுக்கு இந்த கதிதான்.

மாணிக்கத்தை பாட்ஷாவாக்கிவிட்டார்கள்!
இந்திய அளவில் தி.மு.க. ஹீரோ ஆகிவிட்டது. ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் போன்று, நாம் அமைதியாகத் தேர்தல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சொல்லச் சொல்லக் கேட்காமல், தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக சட்டம் கொண்டுவரப் பார்த்தார்கள். தேவையில்லாமல் நம்மைச் சீண்டிப் பார்த்து, நமக்குள் இருந்த பாட்ஷாவை வெளியில் கொண்டு வந்துவிட்டார்கள். அதாவது 50, 60-களில் இருந்த தி.மு.க.வைத் திரும்ப வர வைத்துவிட்டார்கள். இனி எங்களை யாராலும் தடுக்க முடியாது.
கோவையில் பேசிய பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீட்டை தி.மு.க. நேற்று தடுத்துவிட்டது என்று பேசியிருக்கிறார். அவரே அதற்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை 2023–ஆம் ஆண்டே நிறைவேற்றிவிட்டோம் என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால், நேற்று அவர்கள் நிறைவேற்ற நினைத்த சட்டத்திற்கும், மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் என்ன தொடர்பு? எந்தத் தொடர்புமில்லை என்று அவர் வாயாலேயே ஒத்துக் கொண்டுவிட்டார். நமக்காக நன்றாக பிரசாரம் செய்யும் பிரதமருக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள்” என்றார்.



















