`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!'...
ரேஷன் அரிசி கடத்தல்; தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி சர்வதேச வீராங்கனைமீது தாக்குதல் – பெண் கைது!
சிவகங்கை பையூர் சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், அரிசி கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி குடியிருப்போர் சங்கத் தலைவியும் சர்வதேச விளயாட்டு வீராங்கனையுமான சுபஜாவை, பெண் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவரும் சுபஜாவிடம் நாம் விசாரித்தோம்.
"நான் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி மற்றும் சர்வதேச விளையாட்டு வீராங்கனை. எங்கள் குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளைப் பலர் முறைகேடாக உள்வாடகைக்கு விட்டுள்ளனர். மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து ஆண்களை அழைத்து வந்து தங்க வைத்து, ரேஷன் அரிசியைக் கார்களில் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் தட்டிக் கேட்டால் தொல்லை கொடுக்கிறார்கள். `அதிகாரிகளின் துணையுடன்தான் இந்த ரேஷன் அரசிக் கடத்தல் தொழிலைச் செய்து வருகிறோம். எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது 'என்று அவர்கள் நேரடியாகவே மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் போட்டோ ஆதாரங்களுடன் நேரில் புகார் மனு அளித்தேன். ஆனால், கலெக்டர் ஆபீஸில் உள்ள சில அதிகாரிகள் அந்த ரகசியத் தகவலை எதிர்த்தரப்புக்குக் கசியவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த, தற்காலிக இரவு நேரக் காவலாளியாக வேலை பார்க்கும் மலர்விழி என்பவர் என்னை நேரில் சந்தித்துச் செருப்பாலும் கையாலும் கடுமையாகத் தாக்கினார்.
எனது வலது நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் ரத்தம் கட்டிப் போய்விட்டது. 'முன்னாடிலாம் 90 நாள், இப்போ 45 நாள்ல நான் வெளில வந்துருவேன்' என்று திமிராக அந்தப் பெண் என்னை தாக்கிவிட்டு மிரட்டிவிட்டுச் சென்றார். தற்போது சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகிறேன்; அராஜகத்தையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்டால் இப்படித்தான் தாக்குவார்களா? இதற்கு அரசு அதிகாரிகளும் துணைபோவதுதான் பெருங்கொடுமை..” என்றார்.
சுபஜா அளித்த புகாரின் அடிப்படையில் மலர்விழி கைது செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை போலீஸார் நம்மிடம் தெரிவித்தனர்.
அரசு அலுவலகங்களிலேயே புகார்களின் ரகசியங்கள் கசிவதும், குற்றங்களைத் தட்டிக் கேட்கும் சமூகப் போராளிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதும் சிவகங்கைப் பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தகவலைக் கசியவிட்ட அதிகாரிகள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.














