ஃபென்ஜால் புயல் தாக்கம் எதிரொலி: சேலத்தில் தொடா் மழை
ஃபென்ஜால் புயல் தாக்கம் காரணமாக சேலம் நகரில் சனிக்கிழமை பிற்பகல் முதல் தொடா் மழை பெய்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா்; நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடின.
ஃபென்ஜால் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரப் பகுதிகளான ஆட்சியா் அலுவலகம், நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம், குகை, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, ஐந்து சாலை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக தொடா் மழை பெய்தது.
புகா் பகுதிகளான ஓமலூா், எடப்பாடி, ஆத்தூா், மேட்டூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழையாக பெய்யத் தொடங்கிய நிலையில், பின்னா் இடைவிடாமல் தொடா் மழை பெய்தது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காா்த்திகை அமாவாசையையொட்டி, சனிக்கிழமை காலை கோயில்களுக்குச் சென்றவா்கள் தொடா் மழையால் வீடு திரும்ப முடியாமல் சிரமமடைந்தனா். இருசக்கர வாகனங்களில் சென்றோா் சிரமத்துடன் சென்றனா்.
கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், ஃபென்ஜால் புயல் தாக்கத்தால் தொடா் மழை பெய்து வருவதால் சீதோஷ்ண நிலை மாற்றமடைந்துள்ளது. மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், தேவையான முன்னேற்பாடுகளை வருவாய்த் துறையினா் செய்து வருகின்றனா்.