காங்கிரஸின் அரசியல் ஸ்டன்ட்? - திமுக கூட்டணியின் 'லட்சுமண ரேகை'யும் அதிரும் 2026...
நள்ளிரவு 12 மணி; 12 வினாடிகள்... 12 திராட்சைகள் - இந்தியாவில் கவனம் ஈர்த்த ஸ்பெயின் கலாசாரம்!
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களைச் சாப்பிட்டு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் இந்த வினோதமான சடங்கு, தற்போது இளைஞர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் "Las doce uvas de la suerte" என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அடிக்கும்போது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு திராட்சை வீதம் 12 திராட்சைகளைச் சாப்பிட வேண்டும் என்பது இதன் விதி.
இவ்வாறு சரியாகச் சாப்பிட்டு முடித்தால், அந்த ஆண்டின் 12 மாதங்களும் அதிர்ஷ்டமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கை. இதனால், கடந்த புத்தாண்டு இரவில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மேஜைக்கு அடியில் அமர்ந்து திராட்சை சாப்பிடும் வீடியோக்களைப் பகிர்ந்து, இந்தச் சடங்கை ஒரு சர்வதேச 'டிரெண்ட்' ஆக மாற்றினர்.

இந்த வினோதமான கலாசாரம் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில், புத்தாண்டு இரவில் திராட்சை பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நள்ளிரவு நெருங்கும் வேளையில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் திராட்சை வாங்கக் கடைகளில் குவிந்தனர்.
ஒரு குறிப்பிட்ட பழக்கடையில் மட்டும் சுமார் 200 முதல் 300 வாடிக்கையாளர்கள் திராட்சை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகக் கடைக்காரர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் டெலிவரி தளங்களிலும் சில நிமிடங்களிலேயே திராட்சை இருப்பு தீர்ந்துபோனது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தச் சடங்கின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவலும் உண்டு. 1900-களின் தொடக்கத்தில் ஸ்பெயினில் திராட்சை விளைச்சல் மிக அதிகமாக இருந்தபோது, தேங்கிப்போன பழங்களை விற்பனை செய்வதற்காகப் புத்திசாலி விவசாயிகள் உருவாக்கிய ஒரு 'மார்க்கெட்டிங் தந்திரம்' தான் இது என்றும் சொல்லப்படுகிறது.
அன்று லாபத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம், இன்று பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும், ஒரு ஜாலியான சடங்காகவும் மாறியிருப்பது வியப்பிற்குரியது.
இருப்பினும், இந்தச் சடங்கைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மிகக்குறுகிய நேரத்தில், அதாவது 12 வினாடிகளில் 12 திராட்சைகளை அவசரமாக விழுங்க முயற்சிக்கும்போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.



















