செய்திகள் :

காங்கிரஸின் அரசியல் ஸ்டன்ட்? - திமுக கூட்டணியின் 'லட்சுமண ரேகை'யும் அதிரும் 2026 தேர்தலும்!

post image

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு மாதம் குறிக்கப்பட்டுவிட்டதால் விறுவிறுப்பாக தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக கட்சிகளின் கூட்டணி அரசியல் விவாதக் களத்துக்கு வந்துவிட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், வி.சி.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் முக்கிய அங்கம் வகித்தன.

இந்தத் தேர்தலிலும் அதே கூட்டணி வலுவாக இருக்கிறது என தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தெரிவித்துக் கூட்டணியை உறுதிப்படுத்தின.

 ஸ்டாலின் - ராகுல் காந்தி
ஸ்டாலின் - ராகுல் காந்தி

எப்போது நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டதோ, அப்போதே கூட்டணிக் கூடு மெல்ல அசையத் தொடங்கியது. 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேசியது, மாநில அரசியலில் பெரும் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, `வி.சி.க - த.வெ.க'-வை இணைத்து பேசப்பட்டது.

ஆனால், வி.சி.க தலைவர் திருமாவளவன் 'த.வெ.க - வி.சி.க' கூட்டணிக் கூற்றை உறுதியாக தொடர்ந்து மறுத்து வருகிறார்.

ஆனால், கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் விசிக-போல நேர்கோட்டில் அமையவில்லை என்பதை கவனிக்க முடிகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு (அக்டோபர் 10, 2025), காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அளித்திருக்கும் பேட்டியில், "2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் செயற்குழுவில் அவசியம் எடுத்துரைப்பேன். காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காகப் பல தியாகங்களைச் செய்துள்ளது.

எனவே இனி உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. உரிமையைக் கோருவதற்குச் சரியான நேரம் வந்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளுக்காகத் தொடர்ந்து பல தியாகங்கள் செய்ததற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் நினைக்கிறது" என தி.மு.க தலைமைக்கு கறாரான பதில்களைக் கொடுத்திருந்தார்.

தவெக விஜய்
தவெக விஜய்

இதற்குப் பிறகுதான் காங்கிரஸ் தலைமை தரப்பில், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதிலிருந்து 'காங்ங்கிரஸ் - த.வெ.க கூட்டணி' குறித்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகியிருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் என காற்றுவாக்கில் சத்தியமூர்த்தி பவனிலிருந்து தகவல் கசிந்தது. அதை 'ஆம்' என உறுதிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி த.வெ.க தலைவர் விஜய்யைச் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யைச் சந்தித்துப் பேசிய விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ``காங்கிரஸின் அடிமட்டத் தொண்டர்கள் தி.மு.க. மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் தி.மு.க அவமானப்படுத்தியதாகத் தொண்டர்கள் கருதுகிறார்கள். எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள், ஒரு சில பயனாளிகளைத் தவிர யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை.

கூட்டணித் தோழமை எனக் கூறிவிட்டு காங்கிரஸை வேரறுக்கும் வேலையைத்தான் தி.மு.க., செய்தது. தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் தெரியும். கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் தி.மு.க. கூட்டணி கூடாது என்பதாகத்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் காங்கிரஸைத் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கத் தூண்டுகிறது" என வெளிப்படையாகப் போட்டுடைத்தார்.

திருச்சி வேலுசாமி
திருச்சி வேலுசாமி

அதைத் தொடர்ந்துதான், தி.மு.க-வைச் சீண்டும் வகையிலும், கூட்டணிக்கான அடித்தளத்தை அசைக்கும் வகையில் பிரவீன் சக்கரவர்த்தி தன் சமூக வலைதளத்தில், ``அனைத்து மாநிலங்களை விடவும் அதிகக் கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ம் ஆண்டில், உத்தரப்பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகக் கடனுடன் இருந்தது. இப்போது, உ.பி-யை விட தமிழகத்துக்கு அதிகக் கடன் உள்ளது. வட்டிச் சுமையின் சதவிகிதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என தி.மு.க மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிப் பிள்ளையைக் கிள்ளிவிட்டார்.

அப்போதே த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க நினைப்பதால்தான் இது போன்ற கருத்தை பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார் என திமுக கூட்டணி முகாமிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

பிரவீன் சக்கரவர்த்தி என்னதான் தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும், தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையும் பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலளித்து எதிர்க் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின்

ஆனால் பிரவீன் சக்கரவர்த்தி மூட்டிய தீயின் வெப்பம் கூட்டணிக் கூட்டுக்குள் அடங்கியதாகத் தெரியவில்லை. எனவே, ம.தி.மு.கவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பியும் பொதுச் செயலாளருமான து.ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில், "VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடம் 'நடவடிக்கை எடுக்க' கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிய செய்தி படித்தேன். அந்தச் செய்தி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது.

காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொதுக் கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ரவிக்குமார், துரை வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் 'உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்' என்று சொன்னால், அவர்கள் அதைச் சகிப்பார்களா?

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன. பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல, கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணிக் கட்சியின் உள்கட்சிச் செயல்பாடுகளைப் பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும்.

இது கட்சி செயல் வீரர்களின் தன்மான உணர்வைத் தூண்டும். CPI & CPIM தேசியத் தலைமைகள் தங்களது மாநிலச் செயலாளர்களுக்குக் குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், அண்ணன் வைகோ, திருமாவளவன் கூட்டணிக் கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் 'லக்ஷ்மண ரேகை'யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல. ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணித் தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய, அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல" என உடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் மீது கடுமையாகச் சாடியிருக்கிறார்.

செல்வப்பெருந்தகை - பிரவீன் சக்கரவர்த்தி
செல்வப்பெருந்தகை - பிரவீன் சக்கரவர்த்தி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ``எங்கள் கட்சியில் என்ன பிரச்னையோ அதை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பா.ஜ.க-விற்கு ஆதரவாகவோ யாராவது பேசினால், அந்தப் புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் நிச்சயம் எடுப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், எங்களுடைய தோழமைக் கட்சிகளும் இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம். உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன். ஏனென்றால் நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஏற்கெனவே பரிந்துரைத்து விட்டோம். தமிழ்நாட்டு மக்களைத் தலைக்குனிய வைப்பதோ, தமிழ் மண்ணைத் தலைக்குனிய வைப்பதோ, தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்வதோ கூடாது. அப்படிக் கூறினால் காங்கிரஸ் பேரியக்கம் நடவடிக்கை எடுக்கும்" என சாந்தமான குரலில் தொட்டிலை ஆட்டிக்கொண்டிருக்கிறார்.

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய, எம்.பி மாணிக்கம் தாக்கூரின் கருத்துக்குக் கூட்டணிக் கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் மூலம் எதிர்வினையாற்றியிருக்கின்றன.

சிபிஐ (எம்) க. கனகராஜ்:

"காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தேவையில்லாமல் சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளுக்கு, தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி நீண்ட அறிவுரை வழங்கியுள்ளார். அரசியல் மரியாதையையும் ஒழுக்கத்தையும் பேணுவதற்கு அவர் எங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை. அதோடு, பாடம் எடுக்கும் இடத்தில் அவரும், கேட்கும் இடத்தில் நாங்களும் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

ம.தி.மு.க தலைவர் வைகோ:

லக்ஷ்மண ரேகையைத் தாண்டும் வழக்கம் எங்களுக்கு எப்போதும் கிடையாது. நாங்கள் எங்களுடைய எல்லையைத் தாண்டிப் போவது இல்லை. எந்தக் கருத்துக்களையும் சொல்லவோ, கூட்டணித் தர்மம் தழைப்பதற்கும், கூட்டணித் தலைமையை மதித்துச் செயல்படுவதற்கும் இலக்கணமாகச் செயல்படுகிற கட்சி ம.தி.மு.க. அதனால், கூட்டணியில் இருக்கக்கூடிய எந்தக் கட்சியையும் விமர்சிக்கிற வகையிலோ, புண்படுத்துகிற வகையிலோ நாங்கள் எந்தக் கருத்தையும் சொல்லமாட்டோம்.

க.கனகராஜ்
க.கனகராஜ்

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் கருத்துகளும், செயல்பாடுகளும் தேசிய காங்கிரஸில் இருக்கும் உள்கட்சிச் சிக்கலை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக, பலமாக இருக்கும் மாநிலக் கட்சிகளையும் பகைத்துக்கொள்ளும் முடிவை காங்கிரஸ் எடுத்திருக்கிறதா? என அரசியல் வட்டாரத்தில் பேச்சு தொடங்கப்பட்டுவிட்டது.

குறிப்பாக, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறித்து, கட்சியின் தேசியத் தலைமை அனுமதியின்றி இது போன்ற கருத்துகள் வெளியாகியிருக்குமா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

மல்லிகார்ஜுன கார்கே குறித்த ஒரு பதிவுக்காகத் தி.மு.கவில் இருந்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே போன்ற எதிர்பார்ப்பு மற்றக் கட்சிகளுக்கும் இருக்கும் எனவும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

திருச்சி தென்னூரில் வைகோவின் நடைபயணம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் பங்கேற்கத் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.நீ.ம உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ம.தி.மு.க நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

எனவே, கடந்த சில வாரங்களாகத் தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணி தொடர்பான முடிச்சுகளை அவிழ்க்க மேடையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் - முதல்வர் ஸ்டாலினும் கைகோர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொடக்க விழா அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்ததற்கு அதிருப்தி தெரிவித்து, செல்வப்பெருந்தகை நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒருபுறம் கூட்டணிச் சிக்கல் என்றால் இன்னொருபுறம் கட்சிக்குள்ளேயே இருக்கும் அதிருப்தி அலையும் காங்கிரஸைச் சுற்றி வளைத்திருக்கிறது.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தன் எக்ஸ் பக்கத்தில், "எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலைக் கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் - வைகோ
முதல்வர் ஸ்டாலின் - வைகோ

தமிழ்நாடு காங்கிரஸில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறைச் சக்திகளிடமிருந்து எதிர்நோக்கியுள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியைக் குழி தோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பைச் சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாதச் சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக் கூடாது.

எம்.பி ஜோதிமணி
எம்.பி ஜோதிமணி

தமிழ்நாடு காங்கிரஸில், எவ்வித கட்டுப்பாடற்றுத் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலைக் காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்துகொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்றுகொண்டிருக்கிறது.

அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.

ஸ்டாலின் செல்வப்பெருந்தகை
ஸ்டாலின் செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின் அன்பும், மரியாதையும்தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்" என காங்கிரஸ் தொண்டர்களின் அதிருப்தியைக் கட்சி எம்.பியாக முன்வைத்திருக்கிறார்.

இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது கூட்டணிக் கணக்குகளுக்காக காங்கிரஸ் சில மாதங்களுக்கு முன்பே சத்தமில்லாமல் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவே தெரிகிறது. `இத்தகைய செயல்பாடுகளின் மூலம், தி.மு.க-விடம் கூடுதல் தொகுதிகளை பெறமுடியும் எனக் கதர் கட்சி நம்புகிறது' என்ற அரசியல் ஆர்வலர்களின் கருத்தும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.

தேர்தல் நெருங்கும்போது எல்லாம் தெரியும்!

`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' - ஜோதிமணி

"சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்... மேலும் பார்க்க

`ஆன்மிகத்தை வம்பு செய்ய பயன்படுத்துகிறார்கள்; மதவாத அரசியல் போதையைத் தடுக்க வேண்டும்!' - ஸ்டாலின்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா திருச்சி தென்னூர் புலவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் ல... மேலும் பார்க்க

சென்னை: 'மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!' - குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாள்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையரின் வீட்டை... மேலும் பார்க்க

'சோத்தைத் திங்கிரியா..!' - சுசீந்திரம் தேரோட்டத்தில் டென்ஷனாகிய சேகர் பாபு! - என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலைய சுவாமி திரும்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேர... மேலும் பார்க்க

தனக்குப் போட்டியாக வந்த சொந்தக் கட்சி வேட்பாளர்; வேட்பு மனுவைக் கிழித்துத் தின்ற சிவசேனா வேட்பாளர்

புனே மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சிவசேனா சார்பாக 36ஏ வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த உத்தவ் காம்ப்ளே வந்திருந்தார்.அங... மேலும் பார்க்க

"இலவசம்னு சொல்லிட்டு கட்டணம் வசூலிக்கிறாங்க" - விக்டோரியா அரங்க விவகாரமும் மாநகராட்சியின் விளக்கமும்

சென்னையின் தொன்மையான கட்டிடக்கலைக்குச் சான்றாக நிற்கும் விக்டோரியா அரங்கத்தைக் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விக்டோரியா அரங்கத்தைப் பார்வையிட பொதுமக்கள் கட்டணமின்றி அன... மேலும் பார்க்க