செய்திகள் :

"இலவசம்னு சொல்லிட்டு கட்டணம் வசூலிக்கிறாங்க" - விக்டோரியா அரங்க விவகாரமும் மாநகராட்சியின் விளக்கமும்

post image

சென்னையின் தொன்மையான கட்டிடக்கலைக்குச் சான்றாக நிற்கும் விக்டோரியா அரங்கத்தைக் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விக்டோரியா அரங்கத்தைப் பார்வையிட பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி அறிவித்திருந்தது.

விக்டோரியா அரங்கம்
விக்டோரியா அரங்கம்

அதன்படி ஒரு சில நாட்களுக்குக் கட்டணமின்றி பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், திடீரென நேற்று முதல் விக்டோரியா அரங்கைப் பார்வையிட பொதுமக்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

சென்னை விக்டோரியா அரங்கம் 1887 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவுகூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கத்தைப் புனரமைக்க மாநகராட்சி சார்பில் 32.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் டிசம்பரில் முடிவடைந்தன. விக்டோரியா அரங்கத்தின் உள்ளே நீதிக்கட்சியின் வரலாறு, சென்னை மாநகரத்தின் வரலாறு, சமூக சிந்தனையாளர்களின் வரலாறு போன்றவற்றை கண்காட்சியாக மக்களுக்குக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

சென்னை விக்டோரியா ஹால்
சென்னை விக்டோரியா ஹால் (victoria hall)

இதை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த அரங்கத்தை பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாகப் பார்வையிடலாம் என்றும் அறிவித்தனர். ஆனால், முதல் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முதல் பொதுமக்களுக்கு 25 ரூபாயும், மாணவர்கள் மற்றும் மூத்தக்குடிமக்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையின் தொன்மையான வரலாற்றை அறிவதற்கான முக்கிய சாட்சியாக விளங்கும் விக்டோரியா அரங்கத்தைப் பார்வையிட கட்டணம் வசூலிப்பது, மக்களின் வருகையைக் குறைக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முதலில் இலவசம் என அறிவித்துவிட்டு ஒரு சில நாட்களிலேயே கட்டணம் வசூலிக்கக் காரணம் என்ன என மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.

"காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஒவ்வொரு ஒன்றரை மணி நேர ஸ்லாட்டுக்கும் 60 பேர் என ஒரு நாளைக்கு 360 பேரை இலவசமாக அனுமதிக்க திட்டமிட்டிருந்தோம்.

பார்வையாளர்கள் அதற்கு இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் பதிவு செய்யும் பார்வையாளர்களில் பலர் நேரில் பார்வையிட வருவதில்லை.

அதனால் உண்மையிலேயே பார்க்க விரும்புவோரால் பார்க்க முடியாமல் போகிறது. அதனால்தான் குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம். கட்டணம் கொடுத்து பதிவு செய்பவர்கள் தவறாமல் பார்வையிடவும் வருவார்கள்" என்றனர்.

கட்டண விவரம்
கட்டண விவரம்

"மாநகராட்சி அதிகாரிகளின் விளக்கம் முறையானதாக இல்லை. சென்னை மெரினாவில் கலைஞர் உலகம் என்கிற மையமும் இலவசமாக இணையத்தில் பதிவு செய்து பார்வையிடும்படிதான் இயங்குகிறது. இத்தனை ஆண்டுகளாக அந்த நினைவிடம் இயங்குகையில், இந்த விக்டோரியா அரங்கை மட்டும் ஒரு சில நாட்களில் கட்டணமாக மாற்றுவதன் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அரங்கம் இப்போதுதான் திறக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விளம்பரம் செய்து மக்களை உள்ளே இழுக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. மேலும், தொடக்கத்தில் ஒரு சில நாட்களில் வரவேற்பு இல்லை எனக் கட்டணமாக மாற்றுவதும் முறையற்றது.

இனிதான் பொங்கல் விடுமுறையெல்லாம் வருகிறது. அப்போது அதிகப்படியான மக்கள் விக்டோரியா அரங்கைப் பார்வையிட நினைப்பார்கள். அந்தச் சமயத்தில் கட்டணம் வசூலித்தால் அது மக்களின் வருகையைக் குறைக்கத்தான் செய்யும்" என வருந்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

யோசிக்குமா மாநகராட்சி?

தனக்குப் போட்டியாக வந்த சொந்தக் கட்சி வேட்பாளர்; வேட்பு மனுவைக் கிழித்துத் தின்ற சிவசேனா வேட்பாளர்

புனே மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சிவசேனா சார்பாக 36ஏ வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த உத்தவ் காம்ப்ளே வந்திருந்தார்.அங... மேலும் பார்க்க

"நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைப்பேன்" - உமர் காலித்திற்கு நியூயார்க் மேயரின் குறிப்பு

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் சிறையில் இருந்து வருகிறார் மாணவச் செயற்பாட்டாளர் உமர் காலித்.டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடந்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளைச் செய்த கும்பலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.அந்தப் போலி மருந்த... மேலும் பார்க்க

”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி ... மேலும் பார்க்க