Railway: ஆதார் இணைக்கவில்லையா? 60 நாள்களுக்கு முன் 'நோ' டிக்கெட் புக்கிங்! இணைப்...
"எங்க நாடகக் கொட்டகையில் 200 ஆண்டுகளாகக் கைத்தட்டல் நிற்கவில்லை"-AI யுகத்தில் ஓர் ஆச்சரியக் கிராமம்!
தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாளை தரிசிப்பார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவில் கண் விழிப்பதற்காக இக்கிராமத்தினர் சரித்தர நாடகங்கள் நடத்துவது வழக்கம். அதில் கிராம மக்களே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வேடமிட்டு நடிப்பது தனி சிறப்பு. கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இப்பழக்கம் அந்த ஊரின் அடையாளமாகி, பாரம்பர்யத்துடன் இந்த ஏஐ காலத்திலும் தொடர்வது ஆச்சர்யம்.

பெரிய திரை, சின்னத்திரை, செல்போன் என டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்திலும் வைகுண்ட ஏகாதசியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவில் சரித்திர நாடகம் போடுவதை சுற்றியுள்ள கிராமத்தினர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். வள்ளி திருமணம், ருக்மாங்கதன், இராமாயணம், சத்தியவான் சாவித்ரி போன்ற சரித்திர நாடகங்கள் தான் இதில் இடம் பெறும். இதே போல் இந்த ஆண்டு ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடி முடித்திருக்கின்றனர். சம்பூர்ண ராமாயணம், ருக்மாங்கதன் உள்ளிட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் கொல்லாங்கரை கிராமத்தினர் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து விடிய விடிய கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரு நாட்கள் சரித்திர நாடகம் போடுவோம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் இருந்து நாடகத்தில் நடிப்பதற்கான பயிற்சி எடுக்க தொடங்கி விடுவோம். இதில் எங்க ஊரைச் சேர்ந்த ஆண்கள், ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பார்கள். இந்த கனவு நிறைவேறுவதற்கு அனைவரும் தவம் கிடப்போம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 பேர் நடிப்பார்கள். ஆனால் இப்போது இதற்கான ஆர்வம் குறைந்தாலும் இதை தொடர்கிறோம்.

தற்போது காலமாற்றத்தால், பலவிதமான பொழுது போக்கு வளர்ச்சி கண் முன்னே இருக்கிறது. இதனால் நாடகம் நடிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் இப்போதும் பத்து பேருக்கு மேல் நடிக்க வருகின்றனர். கையில் உள்ள கைபேசியில் அனைத்து விதமான பொழுது போக்கும் கிடைத்து விடுகின்றன. இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் நாடகங்களை பார்த்து, ரசிப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். எங்கள் முன்னோர்கள் கடைபிடித்த இந்த பழக்கம், எங்கள் அடையாளமாகி விட்டது. இந்த பாரம்பரியத்தை நாங்க கைவிடாமல் தொடர்கிறோம்.
நாடகம் போடுவதற்கு ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்வோம். நாடகத்தில் நடிப்பவர்கள் விரதம் இருந்து நடிப்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களும் நாங்க சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு நாடகம் தொடங்கினால் அதிகாலை 5 மணிக்கு முடியும். எங்க கிராமத்தினர், ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து வழிபடுவோம்.

பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் எங்க கிராம மக்கள் 100 பேராவது கலந்து கொண்டு பாட்டுப்பாடி, தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி திரும்புவதை இப்போதும் கடைபிடிக்கின்றனர். நாங்க பிறவி நடிகர்கள் இல்லை, கலைஞர்கள் இல்லை. ஆனாலும் முழு திறமையை வெளிக்காட்டி நடிக்கும் போது கிராம மக்கள் கைத்தட்டி எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள். எங்க ஊர் நாடக கொட்டகையில் 200 ஆண்டுகளாக கைத்தட்டல் நிற்கவில்லை. நாங்க, எப்போதும் நடிப்பை கைவிட மாட்டோம். அடுத்த தலைமுறைக்கும் இதை கடத்துவோம். ஒவ்வொரு ஏகாதசியிலும் எங்க ஊர் நாடக கொட்டகை சினிமா தியேட்டராக மாறி விடும், எங்களோட நடிப்பில் திருவிழா களைக்கட்டும் என்றார்.

















