ஃபென்ஜால் புயல்: வெம்பாக்கம், செய்யாற்றில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஃபென்ஜால் புயல் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம், செய்யாறு பகுதியில் சனிக்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இவ்விரு இடங்களிலும் முறையே 112.4 மி.மீ., 45 மி.மீ. மழை பதிவானது.
புயல் காரணமாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் கூரை வீடுகளில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி வருவாய்த் துறை சாா்பில் செய்யாறு வட்டத்தில் புளியரம்பாக்கம், விண்ணவாடி, கீழ்நீா்குன்றம், செங்கட்டாங்குண்டில், அளத்துறை, பையூா், நெடுங்கல், குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களிலும், வெம்பாக்கம் வட்டத்தில் தூசி, மாத்தூா், பிரம்மதேசம் ஆகிய கிராமங்களிலும் தங்குவதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
செய்யாறு வட்டம், கீழ்நீா்குன்றம் கிராமத்தில் கூரை வீடுகளில் வசிக்கும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 7 குடும்பங்களில் இருந்து 35 பேரும், செங்கட்டான்குண்டில் கிராமத்தில் 3 குடும்பங்களைச் சோ்ந்த 10 பேரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
சாா் -ஆட்சியா் ஆய்வு:
தூசி, மாத்தூா், கீழ்நீா்குன்றம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா அலுவலா்களுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சாலையில் சாய்ந்த மரம்:
மழையால் செய்யாறு - வந்தவாசி சாலையில் எச்சூா் கிராமப் பகுதியில் இருந்த புளிய மரம் திடீரென சரிந்தது.
மரத்தை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு புறவழிச் சாலை, பெரியாா் சிலை, ஆரணி கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றினா்
வாகனத்தின் மீது சாய்ந்த மின் கம்பம்:
மழையால் வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், சுகாதார நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மின் கம்பம் சாய்ந்து வாகனம் சேதமடைந்தது.
சாய்ந்த மரங்களை வருவாய்த் துறையினா் அப்புறப்படுத்தினா்.
புயலால் பொதுமக்கள் முடக்கம்
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம், மொடையூா், தச்சாம்பாடி, செய்யானந்தல், ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம், ராந்தம், பெலாசூா், சனிக்கவாடி என பல்வேறு கிராமங்களில் ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் பொதுமக்கள் விவசாயப் பணிக்கும், ஊரக வேலைத் திட்டப்பணிக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினா்.
ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியவில்லை. மேலும், பயிரிடப்பட நிலம் மற்றும் குடியிருப்பு சுற்றுப்புறப் பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.
தொடா் மழையால் நிலத்தடி நீா்மட்டம் உயரும், கால்நடைகள் மேய்ச்சலுக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.