சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ர...
அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ & சாட் - இளம்பெண் பாலியல் புகாரால் தலைமறைவான பாலக்காடு காங்கிரஸ் MLA
கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாலக்காடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் வடகரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனதைத்தொடர்ந்து கடந்த நவம்பரில் நடந்த பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ ஆனார்.
இதனிடையே திருமணம் செய்துகொள்வதாக இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்து கர்ப்பமாக்கியதாக ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக இளம் பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். தன்னை கர்ப்பமாக்கியதுடன், கருவை கலைக்கும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இளம் பெண் கூறிய குற்றச்சாட்டு சம்பந்தமான போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் அந்த சமயத்தில் வெளியானது.
மேலும், நடிகை ரினி ஆன் ஜார்ஜ், ஒரு திருநங்கை உள்ளிட்டோரும் பாலியல் புகார் கூறினர். அந்த புகார்களை முதலில் மறுத்த ராகுல் மாங்கூட்டத்தில், நெருக்கடி முற்றியதால் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக மற்றொரு ஆடியோ மற்றும் வாட்ஸ் அப் சாட் ஆகியவை சில நாட்களுக்குமுன் வெளியாகியது.
`கர்ப்பிணி ஆக தயாராக இருக்கும்படி’ ராகுல் மாங்கூட்டத்தில் கூறுவது வாட்ஸ் அப் சாட்டில் இடம் பெற்றிருந்தது. அந்த ஆடியோவில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுவதுடன், கடுமையான உடல் நலப்பிரச்னையால் அவதியுறுவதாகவும் இளம் பெண் கூறுவதும் பதிவாகியிருந்தது.
அதே சமயம் இது புதிய ஆடியோ அல்ல எனவும், தனக்கு தெரிவிக்க வேண்டியதை விசாரணையின்போது கோர்ட்டில் கூறுவேன் எனவும் ராகுல் மாங்கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் நேற்று முதல்வர் அலுவலகத்துக்கு நேரில் சென்று டிஜிட்டல் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையடுத்து திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி கே.எஸ்.சுதர்சன் அந்த இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்.

பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பத்தை கலைக்க வலியுறுத்தியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் இளம் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முன் ஜாமின் பெறும் முயற்சியில் ராகுல் மாங்கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தாலும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ராகுல் மாங்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வந்தார். நேற்று பாலக்காடு தொகுதிக்குட்பட்ட கண்ணாடி என்ற பகுதியில் ராகுல் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தபோது தான் இளம் பெண் புகார் அளித்த தகவல் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து மொபைல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
பாலக்காடு எம்.எல்.ஏ அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாலக்காடு எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ராகுல் மாங்கூட்டத்தில் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் எந்த குற்றமும் செய்யவில்லை. மக்கள் நீதிமன்றத்தில் உண்மையை தெளிவுபடுத்துவேன்" என தெரிவித்துள்ளார்.




















