செய்திகள் :

அணுசக்தியில் இந்தியாவின் புதிய மைல்கல்! கல்பாக்கம் அதிவேக ஈணுலை சாதனை - இதன் முக்கியத்துவம் என்ன?

post image
உலக அளவில் போர்ப் பதற்றம், இந்திய அளவில் ஐ.பி.எல் கொண்டாட்டங்கள், தமிழக அளவில் தேர்தல் ஜுரம் என மக்கள் பிஸியாக இருக்க, சத்தமே இல்லாமல் ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது நம் விஞ்ஞானிகள் படை!

கடந்த திங்கள் (ஏப்ரல் 6), சரியாக இரவு 8:26 மணிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையமே கொண்டாட்டத்தில் திளைத்தது. காரணம் அங்கே செயல்பட்டு வரும் 500 மெகாவாட் திறன் கொண்ட 'முன் மாதிரி ஈணுலை' (Prototype Fast Breeder Reactor - PFBR) தனது கட்டுப்படுத்தப்பட்ட முதல் தொடர் அணு பிளவு நிலையை (Criticality) வெற்றிகரமாக அடைந்துள்ளது. அணு ஆராய்ச்சியில் முக்கியமானதொரு மைல்கல்லாகப் பார்க்கப்படும் இதற்கு, கூடுதல் பெருமை சேர்க்கும் விஷயம் என்ன தெரியுமா? இந்தச் சாதனை முழுவதுமே இந்திய அறிவால், இந்தியத் தொழில்நுட்பத்தால், இந்திய நிதியால் சாத்தியமாகியிருக்கிறது. இது ஏன் முக்கியமானது, இதனால் என்னென்ன நன்மைகள் கிட்டும்? விரிவாகப் பார்ப்போம்...

கல்பாக்கம் அதிவேக ஈணுலை சாதனை

அணு ஆராய்ச்சி திறன் வாய்ந்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அணு சக்தியை உருவாக்குவதிலும் முன்னோடி வரிசையில் இடம்பிடிக்கும் அளவுக்கு நம்மிடம் அனுபவமிருக்கிறது. இந்தியாவின் அணு சக்தி கனவினை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

PHWRs ----> FBRs ----> Thorium Reactors

முதலில் வருவது அழுத்தம் கூட்டப்பட்ட கனநீர் உலை (pressurised heavy water reactor). இரண்டாவதாக வேக ஈணுலை (Fast Breeder Reactors) எனப்படும் அணு உலைகள். மூன்றாவதாக நம்மிடம் அபரிமிதமாகக் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு செயல்படும் அணு உலைகள்.

இந்த தோரியமானது கேரளம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றின் கடற்கரைப் பகுதிகளிலும், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றின் ஆற்றுப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. இதில் முதல் பகுதியான அழுத்தம் கூட்டப்பட்ட கனநீர் உலை என்பதில் நாம் ஏற்கெனவே நிபுணத்துவம் பெற்றுவிட்ட நிலையில், தற்போது இரண்டாம் நிலையின் முதற்கட்டமும் கைகூடி வந்திருக்கிறது. இது டிரெய்லர்தான் என்றாலும் என்றாலும் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதற்கும், உள்நாட்டு அணு தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும்.

கல்பாக்கம் அதிவேக ஈணுலை சாதனை
500 மெகாவாட் திறன்கொண்ட இந்த வேக ஈணுலை (FBR), செயல்பட புளூட்டோனியம் மற்றும் யுரேனியத்தால் உருவாக்கப்பட்ட கலப்பு ஆக்சைடு (MOX) எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அணு உலையைக் குளிர்விக்க திரவ நிலையிலுள்ள சோடியம் 1750 டன்கள் தேவைப்படுகிறது. இந்த அணு உலை, தற்போது சுத்தமான மின்சாரத்தைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், அளவுக்கு அதிகமாக இருக்கும் யுரேனியத்தை புளூட்டோனியமாக மாற்றும் திறன் கொண்டதாகவும் மாறியிருக்கிறது.

இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இந்த வகை அணு உலையின் மையப்பகுதி யுரேனியம்-238-ஆல் சூழப்பட்டுள்ளது. இந்த உலையின் அதிவேக நியூட்ரான்கள், இந்த வளமிக்க யுரேனியத்தை பிளவுபடக்கூடிய புளூட்டோனியம்-239-ஆக மாற்றுகின்றன. விளைவு? தான் பயன்படுத்தும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் இதற்கு உருவாகியிருக்கிறது. அதைக் கொண்டே அதன் அடுத்த கட்ட சுழற்சியும் தானாக நடைபெறும். அணு உலையின் இத்தகைய நிலையைத்தான் ஆங்கிலத்தில் 'Criticality' என்று அழைக்கிறார்கள்.

Kalpakkam - Madras Atomic Power Station

இந்தத் தனித்துவமான திறன், அணு எரிபொருள் வளங்களின் பயன்பாட்டைக் கணிசமாக மேம்படுத்துவதோடு, நாட்டின் வரையறுக்கப்பட்ட யுரேனியம் இருப்புகளிலிருந்து மிக அதிக ஆற்றலைப் பிரித்தெடுக்கவும் உதவுகிறது. இது எதிர்காலத்தில் தோரியத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தும் முறைமைக்கும் (மூன்றாவது நிலை) வாயிலைத் திறந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் குறைவான கழிவுகள், அதீத சக்தி, கலப்படமில்லாத ஆற்றல் ஆகியவை சாத்தியப்படும். விரைவில் 500 மெகாவாட் திறன் என்ற இலக்கையும் எட்ட உதவுவதோடு, இந்த அணு உலை, எந்த நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்பட்டதோ அதை நோக்கிச் சரியாகப் பயணிக்கிறது என்பதையும் பறைசாற்றுகிறது.

அந்த மூன்றாவது நிலையை அடைய இன்னும் கால அவகாசம் தேவையென்றாலும், தற்போதைய நிலையில் நிறையவே ஆராய்ச்சிகளையும் சோதனைகளும் செய்து பார்த்துவிட முடியும். எனவே அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துடன் ஒப்புதலுடன் இதன் மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு மின்சாரம் கொடுக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்து.
முழுக்க முழுக்க இந்திய ஆராய்ச்சியாளர்களாலும், இந்திய அணுசக்தித் துறையில் கீழ் இயங்கும் பாரதிய நபிகிய வித்யுத் நிகம் லிமிடெட் என்று அழைக்கப்படும் BHAVINI என்கிற பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்களாலும், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) உதவியாலும் இது சாத்தியமாகியிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, "இன்று, இந்தியா தனது மக்கள் பயன்பாட்டுக்கான அணு ஆற்றல் பயணத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்துள்ளது. இது நமது அணு ஆற்றல் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை அடைந்ததற்கான சான்று.

கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட 'முன் மாதிரி ஈணுலை' (Prototype Fast Breeder Reactor) முக்கியத்துவம் வாய்ந்த கிரிட்டிகாலிட்டி (criticality) நிலையை அடைந்துள்ளது.

அதாவது இந்த மேம்பட்ட உலைகலன், தான் நுகர்வதை விட அதிகமான எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மாறியிருக்கிறது. இது நமது அறிவியல் திறனின் ஆழத்தையும், நமது பொறியியல் திறனின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. இது நமது மூன்றாவது கட்ட திட்டத்தின்படி நமது நாட்டின் அபரிமிதமான தோரியம் இருப்புகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

நிச்சயமாக இது இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு தருணம்! நமது அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள்!" என்று ட்வீட் செய்துள்ளார்.

Artemis II: நிலவின் மறுபக்கத்தில் 40 நிமிட திக் திக்! - இணைப்பு தூண்டிக்கப்பட்டு மீண்ட ஆர்டெமிஸ் II

நிலவைச் சுற்றி பயணம் மேற்கொண்டுள்ள ஆர்டெமிஸ் II விண்கலம், நிலவின் மறுபக்கத்திற்குச் சென்றபோது, சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான தொடர்பை இழந்தது.நிலவின் மறைமுகப் பகுதிக்கு விண்கலம் செல்லும்போது சிக்னல்க... மேலும் பார்க்க

Artemis II: முடிவுக்கு வந்த 50 ஆண்டுக்காலக் காத்திருப்பு; மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா

அப்போலோ 17 திட்டத்திற்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் கனவு நனவாகாமல் இருந்தது. நிலவின் தடம் அழிவதற்குள், மீண்டும் அங்கே மனிதர்களின் பாதச்சுவடுகளைப் பதிக்க நாசா... மேலும் பார்க்க