O.M: "அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு விளக்கமளித்த தனுஷ்
`அண்ணாமலையாருக்கு அரோகரா’ - கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீப விழா; ஏற்பாடுகள் என்னென்ன?
திருவண்ணாமலையில் `திருக்கார்த்திகை தீபத்திருவிழா’ இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்துவந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில், விடியற்காலை 6.05 மணிக்குமேல் 7.35 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளி அருள்பாலித்தனர். இந்த மங்களகரமான கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று விண்ணதிர முழங்கி, மனமுருகி வேண்டிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தனர். இன்று இரவு சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகிறார்கள். நாளைக் காலையில் தங்க சூரிய பிரபை வாகனத்திலும், நாளை இரவு வெள்ளி இந்திர வாகனத்திலும் பவனி நடக்கிறது.

இப்படியே, அடுத்த 10 நாள்களுக்கும் தீபப் பெருவிழா களைகட்டும். 24-ம் தேதி நடைபெறும் பத்தாம் நாள் திருவிழா மிக முக்கியமானது. அன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயில் பின்புறத்தில் உள்ள 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக ஆவின் நிறுவனத்திடம் இருந்து ரூ.39 லட்சத்துக்கு முதல் தரத்திலான 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக நெய் காணிக்கை தொகையை ரொக்கமாக செலுத்தவும், நேரடியாக நெய்யாகச் செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது. மகா தீபத்தைத் தரிசித்தபடி கிரிவலம் வந்தால், கோடி பலன்கள் கிடைக்கும்; இப்பிறவியிலான அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணிய பலனைப் பெறுவார்கள் என்கின்றன புராணங்கள். இந்த ஆண்டு, மகா தீபத்தைத் தரிசிக்க சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் வரை திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் தீபத்திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு மண்டல ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜி-க்கள் மற்றும் 42 எஸ்.பி-க்கள் மேற்பார்வையில் மொத்தம் 15,500 போலீஸார் பலத்த கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், 21-ம் தேதி நடைபெறும் மகா தேரோட்டத்தின்போது மட்டும் 4,563 போலீஸார் பிரத்யேகமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். யாசகம் கேட்பது, இடையூறு செய்வது, போலி சாமியார்களின் தொல்லை உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 440 போலீசார் கொண்ட 88 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மூன்று ஷிப்டுகளாகப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

திருக்கோயில் வளாகம், நகரின் முக்கியப் பகுதிகள், கிரிவலப் பாதை மற்றும் புறவழிச் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் 12 டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக, 5 சிறிய கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அடையாள கைக்கட்டுகள் வழங்கப்படுகின்றன. பக்தர்களுக்கு உதவவும், தேவையான தகவல்களை வழங்கவும் 65 இடங்களில் `May I Help You’ உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முதன்முறையாக மாநில குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் 22 முக அடையாளம் கண்டறியும் கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த கேமராக்கள் குற்றப் பின்னணி கொண்ட சுமார் 20 லட்சம் நபர்களின் விவரங்கள் அடங்கிய தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்களை அடையாளம் காணும் வகையில் செயல்படும்.
மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு பல்வேறு சாலைகளில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பக்தர்கள் எவ்வித நெரிசலும் இன்றி பாதுகாப்பாக வெளியேறுவதற்கான விரிவான போக்குவரத்து மேலாண்மைத் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளன.




















