அமெரிக்கா கிரீன் கார்டு கட்டுப்பாடு: கவலைப்பட வேண்டுமா? இந்தியாவுக்கு காத்திருக்...
அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக-விலிருந்து வெளியேறி தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஐந்து முனைப்போட்டியாக, தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் இறங்கின. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி இரு தொகுதிகளிலும் ஆளும் தவெக அரசே வெற்றிபெற்றிருக்கிறது.
இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக சார்பில் வென்று, பதவிக்காக ராஜினாமா செய்துவிட்டுச் சென்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதனால், மக்களிடம் நியாயம் கேட்டு வந்திருக்கிறேன்" எனப் பிரசாரம் செய்தார். அதேநேரம் இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களுக்கு எதிரான மனநிலையே இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், எடப்பாடியாரின் பிரசார வியூகமும், மக்களின் எதிர்ப்பு மனநிலை என்ற பிம்பமும் கைகொடுக்கவில்லை.
எனவே, அதிமுக தலைமை எங்கு சறுக்கியது என மூத்த ஊடகவியலாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். அவர், ``இந்த இடைத்தேர்தல் முடிவுகளின்படி, அதிமுக இரண்டு தொகுதிகளிலுமே பின் தங்கி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆளும்கட்சியாக இல்லாத நிலையிலும், எவ்வித அதிகார பலமும் இன்றி தி.மு.க. பெற்றிருக்கும் வாக்குகள் மிகப்பெரியவை. விசிக போன்ற கூட்டணிக் கட்சிகள் விலகிய பின்னரும், கட்சி ரீதியாக திமுக இன்னும் பலம்பெற்றிருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவு சான்றாக அமைந்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பலவீனமடைந்திருக்கிறார். இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விசிக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திமுக-வையே முதன்மையான சக்தியாகப் பார்க்கத் தொடங்கும். தவெக-விடம் திமுக-வை ஒரு மாற்றுத் தேர்வாகக் காட்ட முயலும்.

தட்டாஞ்சாவடியில் தவெக தன் 24 சதவிகித வாக்குகளையும் காங்கிரஸுக்கு முழுமையாக மாற்ற இயலவில்லை. தவெக-வுக்கு மாற்றுச் சக்தி அதிமுக என்ற நிலையிலிருந்து எடப்பாடியார் கீழ் இறங்கியிருந்தாலும், அவர் ஒரு முக்கியமான அரசியல் சக்தி என்பதையும் இந்தத் தேர்தலில் பெற்றிருக்கும் 15 - 20 சதவிகித வாக்குகள் மூலம் நிரூபித்திருக்கிறார். ஏனென்றால் இந்த வாக்குகள் அவருக்கு விழுந்த வாக்குகள். ஆனால், 25 எம்.எல்.ஏ-க்கள் இழந்ததால் கட்சி பலவீனமடைந்திருக்கிறது. அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினமா செய்து தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க பலமில்லாத இடங்களில் தி.மு.க வெற்றிபெறும்.
ஏனென்றால், அதிமுக பலமில்லாத சூழலில் எடப்பாடி பழனிசாமியை தலைமையாக ஏற்றவர்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயங்கமாட்டார்கள். அதிமுக-வின் பெண்கள் வாக்கு அப்படியே தவெக-வுக்கு மாறியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி மாறியிருந்தால் தவெக 50 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கும். இப்போது தவெக-வுக்குச் சென்ற வாக்குகள் எல்லாம் பா.ம.க-வின் ஆதரவு வழங்காததால் வந்த 10 சதவிகித வாக்கு இழப்பும், எடப்பாடி தலைமையை ஏற்காதவர்களின் 5 சதவிகிதத்தினரின் வாக்கும்தான் சென்றிருக்கிறது. அ.தி.மு.க-வைத் தவிர்த்துவிட்டு தி.மு.க-வைத் தனித்து வீழ்த்துவது எந்தக் கட்சிக்கும் சுலபமல்ல என்பது அ.தி.மு.க-வுக்கு இருக்கும் ஒரு சாதகமான அம்சம். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலின் போதுதான் அதிமுக தனது அடுத்தகட்ட முடிவை எடுக்கும்." என்றார்.















