Career: டிகிரி படித்திருந்தால் போதும் RBI-ல் வேலை; ஆரம்ப சம்பளமே ரூ.78,000!
அமெரிக்கா: 176 பட்டதாரிகளின் கல்விக் கடன்களைத் திருப்பி செலுத்திய இந்திய வம்சாவளி அனில் கோச்சர்!
அமெரிக்காவில் நடைபெற்ற வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தின் வில்சன் காலேஜ் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் பட்டமளிப்பு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் கோச்சர் மற்றும் அவரது மனைவி மரிலின் மாணவர்களுக்கு வாழ்நாள் நினைவுப் பரிசை வழங்கினர்.
அவர்கள், 176 பட்டப்படிப்பு மாணவர்களின் இறுதி ஆண்டுக் கல்விக் கடன்களை முழுமையாகச் செலுத்துவதாக அறிவித்தனர். கூடுதலாக, 26 முதுநிலை மாணவர்களும் இந்த உதவியால் பயனடைகிறார்கள்.
அறிவிப்பு வெளியாகியவுடன், அரங்கமே எழுந்து நின்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தது. இந்த உதவி, அனில் கோச்சரின் தந்தை பிரகாஷ் சந்த் கோச்சர் அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.
அனில் கோச்சர் தனது உரையில், ``என் தந்தையை நினைவுகூரும் வகையில், உங்கள் இறுதி ஆண்டுக் கல்விக் கடன்களை நாங்கள் செலுத்துகிறோம்.

நீங்கள் பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கனவுகளை அடைய கடினமாக உழைத்து சுதந்திரம் பெற வேண்டும். எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளைஞர் (அனில் கோச்சரின் தந்தை) நம்பிக்கையையும் உறுதியையும் தவிர வேறு எதுவும் இல்லாமல், இந்தியாவிலிருந்து ராலேவுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்தார்.
அந்தப் பயணம் எங்கு அழைத்துச் செல்லும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது உருவாக்கும் வாழ்க்கையையோ, அல்லது ஒரு நாள் தன் மகன், தன்னை வரவேற்ற அதே கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற இங்கே நிற்பான் என்பதையோ அவர் கற்பனை கூட செய்திருக்க முடியாது" என்பதை கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.
அனில் கோச்சரின் தந்தை பிரகாஷ் சந்த் கோச்சரின் பின்னணி என்ன?
பஞ்சாப்பில் பிறந்த இவரது தந்தை 1946-ல் வில்சன் ஜவுளிக் கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது இந்திய மாணவர் ஆவார். 1950-ல் இளங்கலைப் பட்டத்தையும், 1952-ல் முதுகலைப் பட்டத்தையும் பெற்று ஜவுளித் துறையில் சேர்ந்தார்.
கோச்சர் குடும்பம் அமெரிக்காவைத் தங்கள் வசிப்பிடமாக ஆக்கி கொண்டு சமூகத்திற்குத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செலுத்தியது.
1985-ல் பிரகாஷ் சந்த் கோச்சார் இறந்த ஓராண்டுக்குப் பிறகு, வட கரோலினா கல்லூரி நிர்வாகத்தை அணுகிய அவரது மனைவி கிறிஸ்டின் ஹேய்ஸ் கோச்சார், பல்கலைக்கழகத்திற்காக பிரகாஷ் சந்த் கோச்சார் நினைவு ஜவுளிக் கல்வி உதவித்தொகையை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

அனில் கோச்சர் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர், பிரகாஷ் சந்த் கோச்சரின் மரபைச் சிறப்பிக்கும் வகையில், வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் வில்சன் ஜவுளிக் கல்லூரியில் மூன்று முக்கிய நன்கொடைகளை அறிவித்துள்ளனர்.
பிரகாஷ் சந்த் கோச்சர் முதல்வர் இருக்கைக்கான நன்கொடை.
பிரகாஷ் சந்த் கோச்சர் ஆசிரியர் மேம்பாட்டு நிதி.
பிரகாஷ் சந்த் கோச்சர் முதுகலை மாணவர் ஆதரவு நிதி.
அனில் கோச்சரின் திடீர் அறிவிப்பிற்குப் பிறகு, மாணவர்களின் கல்வி கடன் மொத்த மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகவும், வளாக அலுவலகங்களுடன் கலந்தாலோசித்து அதன் விவரங்களை இறுதி செய்யும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.















