அரகஜா திலகம் `டு' ஜெயில் பரிகாரம்... முதல்வர் விஜய்யைச் சுற்றும் ஜோதிட சர்ச்சைகள...
அரகஜா திலகம் `டு' ஜெயில் பரிகாரம்... முதல்வர் விஜய்யைச் சுற்றும் ஜோதிட சர்ச்சைகள்!
அரகஜா திலகம் :
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது கோட் ஷூட் அணிந்தது எந்தளவுக்கு பேசுபொருளானதோ அதைவிட, அவர் நெற்றியில் வைத்திருந்த கருப்பு நிற பொட்டு பேசுபொருளானது. அந்த கருப்பு மை போன்ற திலகம் அரகஜா என்றும் சொல்லப்பட்டது. புனுகு, கோரோஜனை, அத்தர், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது உள்ளிட்ட பொருள்களால் இது செய்யப்படுவது. இந்த மையை புருங்களில் தடவிக்கொள்ளலாம். அல்லது நெற்றியில் பொட்டாகவும் வைத்துக்கொள்ளலாம். எதிர்மறை ஆற்றல்கள் அண்டாமல் இருக்கவும் நேர்மறையான விஷயங்களை உருவாக்கக்கூடிய ஆற்றல் இதற்கு இருப்பதாகவும் ஆன்மிக முறைப்படி நம்பப்படுகிறது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எழும் எதிர்ப்புகள் குறைய இது பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. முதல்வர் விஜய் அரகஜா திலகம்தான் வைத்திருக்கிறார் என்கிற தலவல்கள் வெளியானதும், அது குறித்த தேடல் அதிகமானதுடன் அரகஜா விற்பனை கொடிகட்டிப் பறந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை பட்டுவேஷ்டி சட்டை :
வழக்கமாக வெள்ளை சட்டை, காக்கி நிற பேன்ட், முதல்வரானதும் கோட் ஷூட் சகிதம் வலம் வந்த முதல்வர் விஜய், மே 29 அன்று பட்டு வேஷ்டி–சட்டையில் தலைமைச் செயலகம் வந்தார். அன்று மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமியின் இல்ல விழாவில் கலந்துகொண்டுவிட்டு வந்ததால் பட்டு வேஷ்டி சட்டையில் வந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஜூலை 17-ம் தேதி, எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் ஆய்வு செய்தார் முதல்வர் விஜய். அப்போதும் பட்டு வேஷ்டி சட்டையிலேயே வந்திருந்தார்.

தொடர்ந்து, ஜூலை 31-ம் தேதி தலைமைச் செயலகத்துக்கும் பட்டு வேஷ்டி சட்டையிலேயே வந்திருந்தார். ஜோதிட ரீதியாக வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உரிய நாளாகப் கருதப்படுகிறது. சுக்கிரனுக்கு வெண்மையான, பளபளக்கும் பட்டு உகந்ததாக நம்பப்படுகிறது. அதனாலேயே முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக ஆடி மாதத்தில் வேட்டி சட்டை அணிவதாகச் சொல்லப்படுகிறது. அதேவேளை, முக்கியமான விழாக்களிலும் வேட்டி, சட்டை அணிவதை முதல்வர் விஜய் வழக்கமாக வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் புதிய அலுவலகம் :
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வரின் அலுவலகம் மாற்றப்படவிருக்கிறது. அதற்கான வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் அலுவலகத்தில் நிலவும் இட நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர், கடலைப் பார்த்தபடி உயரமான இடத்தில் அமர்ந்து பணியாற்றினால், தடைகள் நீங்கி, நல்ல பலன் கிடைக்கும் என ஆலோசனை கூறியதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்கிற தகவல்களும் வெளியானது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடி முதல்வருக்குப் பிடித்திருந்ததால், அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி வேலையைத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஜெயில் பரிகாரம் :
சமீபத்தில் முதல்வர் விஜய் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை, வசதிகள் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னை சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடம், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்வர் நேரில் ஆய்வு நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, M3 காவல் நிலையத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், காவல் நிலைய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். வழக்கமாக அரசு அலுவலகங்களில் திடீர் என ஆய்வு செய்வதை முதல்வர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதனடிப்படையிலேயே இந்த ஆய்வுகள் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. அதேவேளை, ‘சதய நட்சத்திரம் முதல்வரின் ராசிக்குப் பிரச்னையை உண்டாக்கப்போகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பெருமழை பெய்யும். அது த.வெ.க அரசுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தும்’ என்று கணித்திருக்கிறார்கள். அதற்குப் பரிகாரமாக, ‘சிறையில் அமர்ந்து சிறை உணவைச் சாப்பிட வேண்டும்’ என்று ஜோதிடர்கள் ஆலோசனை சொல்ல, அதனாலேயே புழல் சிறைக்கு `விசிட்’ அடித்திருக்கிறார் முதல்வர் விஜய் என்கிற தகவல்களும் வெளியானது. அதுமட்டுமல்ல, ‘சேது பெயர்கொண்ட அதிகாரியிடம் பேச வேண்டும்’ என்ற ஜோதிடர்களின் சொல்படி, புழல் காவல் நிலையத்துக்குள் திடீரென நுழைந்து, இன்ஸ்பெக்டர் சேது வசந்த் ராஜாவை அவரின் இருக்கையில் அமரவைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர் என்கிற அளவுக்கு தகவல்கள் வெளியானது.
இவை மட்டுமல்ல, முதல்வர் விஜயின் கொல்லூர் மூகாம்பிகை வழிபாடு, 717 (நியூமராலஜிபடி) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது, அவர் கையில் கட்டியிருக்கும் சிகப்புக்கயிறு, கையில் அணிந்திருக்கும் காப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் ஜோதிடத்தோடு முடிச்சு போடப்பட்டு தகவல்கள் வெளியாகின்றன. தற்போது மட்டுமல்ல, கடந்த காலத்தில் திரைத்துறையில் இருந்தபோதே, டீசர், டிரெயிலர், ஷூட்டிங் என ஒவ்வொரு தொடக்கத்தின்போதும் அவரின் ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படியே செயல்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.

விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரும் கட்சியின் பெயர் தொடங்கி அவருடைய அறிவுரைப்படியே பல்வேறு விஷயங்கள் நடந்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவர், 'ஆறு மணிக்கு மேல் லஷ்மி வாசம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் இருக்கக் கூடாது. குறிப்பாக திமுகவைப் பற்றி நினைக்கக் கூடாது, நீங்கள் முதல்வராக உறுதிமொழி எடுப்பதுபோல நினைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வரிடம் ஆலோசனை கூறியதாகச் சொல்ல, அதனால்தான், ஆறு மணிக்கு மேல் முதல்வர் வெளியில் வர மறுக்கிறாரா?' என்கிற கேள்விகளையும் ஒருசிலர் எழுப்பி வருகின்றனர்.
ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து த.வெ.கவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் கேட்க, ``இட நெருக்கடி காரணமாக நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளையும் வேஷ்டி சட்டை அணிவது போன்ற அவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்களையும் ஜோதிடத்தோடு முடிச்சு போடத் தேவையில்லை'' என்கிறார் ஆணித்தரமாக.













