செய்திகள் :

V2V: `இனி கார்கள் பேசிக்கொள்ளும்' - மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய தொழிற்நுட்பம்! | ஓர் அலசல்

post image

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்தின் எண்ணிக்கையும், அதனால் பறிபோமும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2025-ம் ஆண்டில், இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது 2024-ம் ஆண்டை விட சுமார் 6,000 உயிர்பலிகள் அதிகம். எனவே, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளாலும் பெரிதளவில் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியவில்லை. எனவே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (MoRTH) ஒரு புதிய பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.

V2V
V2V

அதுதான் 'வாகனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு அமைப்பு' (Vehicle-to-Vehicle communication system - V2V). இந்தத் தொழில்நுட்பம் மூலம் கார்கள் தங்களுக்குள் வயர்லெஸ் முறையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. அதன் மூலம், சாலையில் வரவிருக்கும் விபத்து ஆபத்துகளைப் பற்றி ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும்.
இதற்காக, மத்திய மோட்டார் வாகன திருத்த விதிகள் 2026-ன் வரைவு அறிக்கையை ஜூலை 22 அன்று அரசு வெளியிட்டது.

பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கேட்க அளிக்கப்பட்ட 30 நாள் அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அந்தப் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை காரில் இருக்கும் கேமரா மற்றும் சென்சார்களை (ADAS) மட்டுமே நம்பியிருந்த நிலையை மாற்றி, இரண்டு வாகனங்களை நேரடியாகத் தொடர்புகொள்ள வைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். சாலைக்கு வரும் முன் V2V கருவி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த வரைவு விதிகள் கட்டாயமாக்குகின்றன.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

மேலும், தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அமைப்பை வாகனங்களில் பொருத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படும். அக்டோபர் 1, 2027 அன்று அல்லது அதற்குப் பிறகு தயாரிக்கப்பட்டு V2V அமைப்பு பொருத்தப்படும் L (இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்கள்), M (கார்கள், பேருந்துகள்) மற்றும் N (சரக்கு வாகனங்கள்) ஆகிய அனைத்து வாகனங்களும் 'AIS-230' தரநிலைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், அக்டோபர் 1, 2028 முதல் தயாரிக்கப்படும் இந்த வகையான அனைத்து புதிய வாகனங்களிலும் AIS-230 தரத்திலான V2V தொடர்பு அமைப்பு கட்டாயமாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

'AIS-230' (Automotive Industry Standard-230) என்பது இந்த V2V அமைப்பிற்கான ஒரு முதன்மை தொழில்நுட்ப வழிகாட்டியாகும். இதில் ரேடியோ திறன், அலைவரிசை நிலைத்தன்மை, ரிசீவர் உணர்திறன், இணையப் பாதுகாப்பு (Cyber security), தகவல் தொடர்பு பாதுகாப்பு, செயற்கைக்கோள் வழிசெலுத்தல் (GNSS) போன்ற பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், அவசர காலத்தில் பிரேக் பிடிக்கும் எச்சரிக்கை, முன் காரில் மோதாமல் இருக்க எச்சரிக்கை, தவறான பாதையில் வாகனம் வருவதைக் கண்டறிதல், மற்றும் அவசர கால வாகனங்கள் (ஆம்புலன்ஸ் போன்றவை) வருவதை எச்சரித்தல் ஆகிய வசதிகளும் இதில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

V2V வசதிக்காக, 'ஆன் போர்டு யூனிட்' (On Board Unit - OBU) என்ற ஒரு சிறப்புச் சாதனம் வாகனங்களில் பொருத்தப்படும். இது மற்ற வாகனங்களுடன் வயர்லெஸ் முறையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும். இதற்காக 5.875 GHz முதல் 5.925 GHz வரையிலான அலைவரிசையில் இயங்கும் C-V2X (Cellular Vehicle-to-Everything) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அலைவரிசையைப் பயன்படுத்துவதற்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று தொலைத்தொடர்புத் துறை ஜூன் 10, 2026 அன்று விலக்கு அளித்துள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அலைவரிசையைப் பயன்படுத்தி புதிய வாகனங்களில் V2V சாதனங்களைப் பொருத்த முடியும்.

V2V சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்கள், முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால், ஆபத்தான வளைவுகள் இருந்தால், பாதுகாப்பற்ற முறையில் லேன் மாறினால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் குறுக்கே இருந்தால், அடர்ந்த பனிமூட்டம் அல்லது மோதல் ஆபத்துகள் இருந்தால் ஓட்டுநருக்கு உடனடியாக எச்சரிக்கை மணி அடிக்கும்.

விபத்து

உதாரணமாக, உங்களுக்கு முன்னால் செல்லும் ஒரு கார் திடீரென்று பிரேக் போட்டால், அது உங்கள் கண்ணுக்குத் தெரிவதற்கு முன்பே, உங்கள் காரில் இருக்கும் சாதனம் உங்களை எச்சரித்து வாகனத்தின் வேகத்தைக் குறைக்கச் சொல்லும். வழக்கமாக இந்த V2V கருவிகள் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வாகனங்களைக் கண்டறிந்து செயல்படும் திறன் கொண்டவை. இந்த OBU சாதனத்தின் விலை ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக இது புதிய வாகனங்களில் மட்டுமே பொருத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது கார்களில் இருக்கும் கேமரா சார்ந்த ADAS போன்ற சாதாரண பாதுகாப்பு அம்சங்கள், ஓட்டுநரின் கண்ணுக்கு அல்லது கேமராவிற்குத் தெரியும் தூரம் வரை மட்டுமே (Line of sight) செயல்படும். ஆனால், V2V அமைப்பு கண்ணுக்குத் தெரியாத வளைவுகள் (Blind corners) அல்லது பெரிய லாரிகளுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளை குறிப்பிடும் வகையில் செயல்படும். எனவே, இது ADAS அமைப்பிற்குத் துணையாக இருந்து விபத்துகளைத் தடுக்கும். வாகனங்கள் தங்களின் வேகம், இருக்கும் இடம், செல்லும் திசை போன்ற தகவல்களை இடைவிடாமல் ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொண்டே இருக்கும்.

இந்த அமைப்பு விமானத் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் போன்றது. விமானங்களின் வேகம், பறக்கும் உயரம் மற்றும் இருப்பிடத்தை அருகிலுள்ள மற்ற விமானங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளுக்குத் தொடர் சமிக்ஞையாக அனுப்புவது போல இது செயல்படுகிறது. விமானத் துறையில் இது உலகளவில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், சாலைப் போக்குவரத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா போன்ற சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே இது தற்போது பயன்பாட்டில் உள்ளது.

V2V அமைப்பு விபத்துகளைக் குறைக்க உதவும் ஒரு சிறந்த நவீனத் தீர்வாக இருந்தாலும், இதில் சில பாதுகாப்பு அச்சங்களும் உள்ளன. இந்த அமைப்பு வாகனங்களின் இருப்பிடம் மற்றும் பயண விவரங்கள் போன்ற பெருமளவிலான தகவல்களைச் சேமித்து வைப்பதால், இணையவழித் தாக்குதல்களுக்கு (Cyber attacks) ஆளாகும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க கடுமையான விதிகள் மற்றும் பாதுகாப்புகள் அவசியம் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்

மேலும், ஒதுக்கப்பட்ட அலைவரிசை சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியும் உள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளால் தவறான தகவல்கள் பரிமாறப்பட்டால், அதுவே விபத்துகளுக்குக் காரணமாகிவிடக் கூடாது என்பதும் கவனிக்கத்தக்கது.

அதேநேரம், இந்த திட்டம் செயல்படுத்தும்போதுதான் அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலை நிவர்த்திச் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

TIME100: சென்னை IIT-ல் படித்தவர்... இன்று உலக AI ஆராய்ச்சியின் முக்கிய குரல்! Anima Anandkumar யார்?

சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர், இன்று உலக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் மிக முக்கியக் குரலாகவும் கவனம் ஈர்க்கும் விஞ்ஞானிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். கால்டெக் பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன், இன்டர்நெட் இல்லையா? இனி கவலை வேண்டாம் - பட்டன் போனிலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்!

ஸ்மார்ட்போன் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது என்ற நிலையை மாற்றகூடிய வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே பணம் அனுப்பவும், கடைகளில் பணம் செலுத்தவும் உதவும் ‘PhonePe UPI 123Pay’ என்ற புதிய சேவையை ... மேலும் பார்க்க

AI கண்காணிப்பு... லேசர் தாக்குதல்: கொசுக்களை விரட்ட அதிநவீன 'அயர்ன் டோம்'!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் 'வெஸ்ட் நைல் வைரஸ்' (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தை... மேலும் பார்க்க

Roman Telescope: பிரபஞ்சத்தின் இருண்ட ரகசியங்களைத் தேடும் நாசாவின் $4 பில்லியன் ‘ரோமன்’ டெலஸ்கோப்!

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மர்மமான 'டார்க் மேட்டர்' (Dark Matter), 'டார்க் எனர்ஜி' (Dark Energy) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாசா (NASA) தயாரித்துள்ள 'நான்சி கிரேஸ் ரோமன் ஸ்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களுக்கு 1 வருடம் இலவச Gemini — Google-ன் புதிய AI சலுகை: யார்... எப்படி பெறலாம்?

கல்லூரி மாணவர்களின் படிப்பை AI மூலம் எளிதாக்கும் வகையில், Google தனது Gemini AI plans-ல் சிறப்பு student offer-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தகுதியுள்ள கல்லூரி மாணவர்கள் Google AI Plus subscri... மேலும் பார்க்க

Claude-ன் கண்ணுக்குத் தெரியாத Watermark: “AI எழுதியதை இனி மறைக்க முடியாதா?”

Anthropic நிறுவனம் தனது Claude AI மூலம் உருவாக்கப்படும் text-ல் மனிதர்களால் எளிதில் கண்டறிய முடியாத “Invisible Watermark” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2, 2026 முதல் Claude models-ல் இந்த water... மேலும் பார்க்க