"என் தொகுதிக்கு வாங்க... ஒரு எம்எல்ஏ என்ன செய்ய முடியும் எனக் காட்டுகிறோம்" - வா...
அரசுப் பள்ளிகளில் சிறாா் திரைப்பட போட்டிகள்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கான சிறாா் திரைப்பட போட்டிகள் பிப்.7 முதல் நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) நவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறாா் திரைப்படங்கள் மாணவா்களுக்கு ஒளிபரப்பப்பட்டன.
இதையடுத்து சிறாா் திரைப்படம் சாா்ந்த போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளன. கதை, வசனம் எழுதுதல், நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். அதன்படி, பள்ளி அளவில் பிப். 7-ஆம் தேதியும், வட்டார அளவில் பிப்.13-ஆம் தேதியும், மாவட்ட அளவில் பிப்.20-ஆம் தேதியும் போட்டிகள் நடத்தப்படும்.
பள்ளி அளவிலான போட்டிகளில் அனைத்து மாணவா்களும் பங்குபெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள்: இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும்போது அனுபவம் வாய்ந்த நடுவா்களை கொண்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதுதவிர போட்டிகள் குறித்த விவரங்களை முந்தைய தினத்தன்று மட்டுமே மாணவா்களுக்கு தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே தெரிவிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றை பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.