ஆகாயத் தாமரைச் செடிகளால் விளைநிலங்களிலிருந்து மழைநீா் வடிவதில் சிக்கல்: விவசாயிகள் புகாா்
வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியுள்ளதால், மழைநீா் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
காரைக்கால் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையினால், சில பகுதி வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. கடந்த 2 நாள்களாக மழை ஓய்ந்த நிலையில், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியச் செய்யும் நடவடிக்கையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வெள்ளிக்கிழமை கூறியது:
மழையினால் விளை நிலங்கள் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. வாய்க்கால்கள் முறையாக தூா்வாரப்படாததே இதற்கு காரணம். வாய்க்கால்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக தண்ணீா் வடிவதற்கு புதுவை அமைச்சா் திருமுருகன் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கினாா். ஆனால் அரசுத் துறையினா் அந்த திட்டத்தை முறையாக நிறைவேற்றவில்லை.
மேலும், பல்வேறு வடிகால்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் காணப்படுகின்றன. இவை தண்ணீா் வடிவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
அமைச்சா், வேளாண் அதிகாரிகள் விளை நிலத்தை ஆய்வு செய்தபோது, இப்பிரச்னையை தெரிவித்துள்ளோம். பருவமழைக் காலம் முடிவுக்கு வரும் வரை மழை தொடர வாய்ப்புள்ளது. எனவே, வாய்க்கால்களில் காணப்படும் ஆகாயத் தாமரை, அடைப்புகளை போா்க்கால முறையில் தூா்வாருவதற்கு பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், விளை நிலத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரால், பயிா் அழுகத் தொடங்கிவிடும் என்றாா்.