எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார...
ஆப்ரேஷன் லோட்டஸ்: ``துரோகி" - ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில் எழுதிய போராட்டக்காரர்கள்
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் 10 ராஜ்யசபா எம்.பி-க்களில் 7 பேர் திடீரென பா.ஜ.க-வில் இணைந்துள்ளதால் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராகவ் சதா தலைமையில் சந்தீப் பாடக், ஸ்வாதி மாலிவால், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, அசோக் மிட்டல் மற்றும் விக்ரம் சாஹ்னி ஆகிய ஏழு எம்.பி-க்களும் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் ஒன்றாகப் பிரிந்திருப்பதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து இவர்கள் தப்பித்துத் தங்களது பதவியையும் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்டவர்கள் துரோகம் இழைத்துவிட்டதாகக்கூறி ஆம் ஆத்மி தொண்டர்கள் பஞ்சாப் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அவரது வீட்டின் சுவர்களில் "கடாடர்" (துரோகி) என்று எழுதித் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
பா.ஜ.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகவ் சதா, ``ஊழலை ஒழிக்க உருவான ஆம் ஆத்மி, இப்போது ஊழல்வாதிகள் மற்றும் சமரசவாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது. தவறான கட்சியில் இருந்த சரியான மனிதன் நான் என்பதை உணர்ந்து தற்போது விலகியுள்ளேன்" என்று கூறினார்.

இந்தத் திடீர் மாற்றத்தால் நிலைகுலைந்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ``பஞ்சாப் மக்கள் இந்தத் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட ஆதாயத்திற்காக மக்களின் ஆணையை விற்றுவிட்டனர்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பஞ்சாபில் 2027-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 'ஆபரேஷன் லோட்டஸ்' (Operation Lotus) ஆம் ஆத்மிக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.














