பெருங்குடி: பிரமாண்டமாக உருவாகும் காசாகிராண்டு ஸ்கைடெக்! 4.28 ஏக்கரில் பிரீமியம்...
ஆயுர்வேதா, சித்தா மருந்து எடுக்கப்போறேன்; அதனால், அலோபதி மருந்துக்கு 'Bye' - சரியான அணுகுமுறையா?
கடந்த மாதம், எழுத்தாளர் ராஜேஷ் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதன் சாராம்சம் இது தான்...
"ராஜேஷ் குமாருக்கு தெரிந்த ஒருவருக்கு பி.பி, சுகர் இருந்திருக்கிறது. இவர் ஒரு நாள் நலம் விசாரிக்கையில், 'மாத்திரைகளையெல்லாம் விட்டு ஒரு மாசம் ஆச்சு. அதுக்கு பதிலா இப்போ ஆயுர்வேத மருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கேன்' என்று கூறியிருக்கிறார்.
"ஆயுர்வேத மருந்து சாப்பிட்டாலும் கூடவே ஆங்கில மருந்துகளையும் எடுத்துக்கணும். அந்த ஆயுர்வேத வைத்தியர் உங்ககிட்ட சொல்லலையா? என்று ராஜேஷ் குமார் கேட்டிருக்கிறார்.
"அந்த வைத்தியர் சொன்னார். இருந்தாலும் நான் எடுத்துக்கலை. இந்த ஆயுர்வேத மருந்தே போதும். எதுக்கு அலோபதிக்கு தண்டச் செலவு" என்று அந்த நபர் பதிலளித்திருக்கிறார்.
அடுத்த சில நாள்களிலேயே, அந்த நபர் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் ஏற்பட்டு கோவையில் உள்ள ஒரு மிகப்பெரிய மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் செலவு ஆகியிருக்கிறது.
இதே தவறைப் பலரும் செய்து வருகிறார்கள். 'எதுக்கு ரெண்டு செலவு?', இரண்டு மருந்துகளில் ஒன்றை 'வீண் மருத்துவம்' என்றெல்லாம் நினைக்கிறார்கள்.
இது சரியான எண்ணமா... இந்த எண்ணத்தால் என்ன ஏற்படலாம் என்பதை சித்த மருத்துவர் சங்கீதா விளக்குகிறார்.
"அலோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, சித்தா அல்லது ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவ முறைகளைத் தேர்வு செய்பவர்கள் பெரும்பாலும் சர்க்கரை அல்லது அதிகுருதியழுத்தம் உள்ளவர்கள் தான்.
இதில் பலர் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முதலில் அலோபதி மருந்துகளை எடுக்கின்றனர். அது ஓரளவு ஆனதும், அலோபதி மருந்துகளை முற்றிலும் நிறுத்திவிட்டு, மாற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஆனால், இது சரியான நடைமுறை இல்லை. சித்தா, ஆயுர்வேதா போன்ற மாற்று மருந்துகள் பல சமயங்களில் உடலில் செயல்படுவதற்கு அதிக நேரம் எடுக்கக்கூடும். அதனால், அலோபதி மருந்துகளை திடீரென நிறுத்துவது நோயை மீண்டும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது.
நீண்ட காலம் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நோய்களுக்கு அலோபதி மருந்துகளை எடுத்தால் கல்லீரல் அல்லது சிறுநீரகம் பாதிக்கப்படும். ஆகையால், 'பக்க விளைவுகள் இல்லாதது' என்று மாற்று மருத்துவ முறைகளை நாடுகின்றனர்.
ஆனால், எந்த மருந்தாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்தால் பின்விளைவுகள் ஏற்படும் என்பது தான் உண்மை.
ஒரு மருந்தை திடீரென விடுவதால் வரும் ஆபத்துகள்...
நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்தின் செயல்பாட்டிற்கு உடல் பழகியிருக்கும். அதை திடீரென நிறுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
குறிப்பாக, ஸ்டீராய்டு போன்ற மருந்துகளை திடீரென நிறுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையின்படி மெதுவாக அளவை குறைத்து நிறுத்த வேண்டும்.
அதிகுருதியழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருந்தை திடீரென நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்... குருதியழுத்தம் அதிகரிக்கக்கூடும்.
இதனால் மயக்கம், டயபெட்டிக் கோமா, ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்ற ஆபத்தான நிலைகள் உருவாகலாம்.
மேலும் இருதய நோய்க்கான மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளாததினால் அல்லது திடீரென நிறுத்துவதால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இரண்டு வகை மருந்துகளை ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா?
அலோபதி மற்றும் மாற்று மருந்துகளை ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமானால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.
பொதுவாக ஒரு மருந்தை உணவிற்கு முன்னும், மற்றொரு மருந்தை உணவிற்கு பின்னும் எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், இரண்டு மருந்துகளுக்கும் இடையில் குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு மருந்துகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை, மருந்தின் செயல்திறன் குறைதல், நச்சுத்தன்மை உண்டாதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நோயை கட்டுப்படுத்த வாழ்வியல் முறையின் முக்கியத்துவம் :
உலக சுகாதார நிறுவனம் கூறுவதாவது... "பிறந்த குழந்தைகள் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் பெறவில்லை என்றால் அவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது".
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் உடல் உழைப்பு குறைவாக உள்ள வேலைகளே அதிகமாக உள்ளன. மேலும் சரியான தூக்கம் இல்லாமை, அதிகமான மனஅழுத்தம் போன்ற காரணங்களால் உடலின் அன்றாட உடல் இயக்க சுழற்சி (சர்க்காடியன் இசைவு) பாதிக்கப்படுகிறது. இவையே குருதியழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை உருவாக முக்கிய காரணமாகிறது.

மேலும் தற்காலத்தில் மாவுச்சத்து மற்றும் கெட்ட கொழுப்பு (நிறைவுற்ற கொழுப்பு), அதிக உப்பு, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உண்பதால் சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், இதய நோய் போன்ற பிரச்னைகள் எளிதில் உருவாகின்றன.
மருந்துகள் மட்டுமே நோய்களை குணப்படுத்தும் என்ற எண்ணம் தவறானது.
சரியான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் மனஅழுத்தம் குறைந்த வாழ்க்கை முறை ஆகியவை இருந்தால் பல நோய்களைத் தவிர்க்க முடியும்.
ஒரு மருந்தை நிறுத்தி மற்றொரு மருந்தை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று ரத்தப் பரிசோதனை, உடலின் நிலை, நோயின் தீவிரம், மருந்தை நிறுத்தினால் ஏற்படும் விளைவுகள் போன்ற அனைத்தையும் பரிசீலித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும்.
சுய மருத்துவம்... சுய பரிசீலனை தவிர்ப்பதே பாதுகாப்பான வழியாகும்" என்றார்.


















