மிலான் குளிர்கால ஒலிம்பிக்: 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலி; ஒலிம்பிக் கமிட்டி ...
இலவச சட்ட சேவை பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு; ஆனால் எப்படி? | How To?
'நீதிமன்றம்' என்பது பொதுவானதுதான் என்றாலும், அதன் வாசல் ஏறி நீதி கோருவதற்கு இங்கு பொருளாதாரமும், அறியாமையும் பெரிய தடையாய் இருக்கின்றன. அதன் காரணமாகவே, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கான நம்பிக்கையாய் சட்டப்பணிகள் ஆணையக்குழு உருவானது.
மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படைச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நம் எல்லோருக்குமே இலவச சட்ட சேவை பெறும் உரிமை உண்டு. அதை எப்படி பெறுவது ? என்பது பற்றி தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவினரிடம் கேட்டோம்.
அனைவருக்கும் நீதி:
``இந்திய அரசியலமைப்பின் 39A பிரிவு, பொருளாதார அல்லது பிற குறைபாடுகளின் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதி பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பொருத்தமான சட்டம் அல்லது திட்டங்கள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ இலவச சட்ட உதவியை வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இதன் அடிப்படையில் சட்ட சேவைகள் ஆணையச் சட்டம்,1987 (Legal Services Authorities Act, 1987) இயற்றப்பட்டு அது 09.11.1995 அன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தை நிறைவேற்ற தேசிய அளவில் – புதுதில்லியில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மற்றும் தாலுக்காக்களில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு என்று நீதியை சமூகத்தின் பலவீனப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு முழு அமைப்பு உருவானது.
சட்ட உதவி பெற தகுதிகள்
அதன் விளைவாக இன்று பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள், மலைவாழ் மக்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், சிறைவாசிகள், காவலில் உள்ளவர்கள், மனிதக் கடத்தல், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- வரம்புக்குள் உள்ளவர்கள், மூத்த குடிமகன்கள், முன்னாள் படைவீரர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முற்றிலும் இலவசமாக சட்டம் சார்ந்த அனைத்து தேவைகளையும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் நிறைவேற்றி தருகிறது. மேலும் சமூகத்தின் கடைநிலை நபருக்கும் அவருடைய இருப்பிடத்திற்கே சட்ட உதவி சென்று சேரும் வகையில் மிக சிறப்பாக மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, புதுப்புது திட்டங்கள் வகுத்து மாநில, மாவட்ட, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் “அனைவருக்கும் நீதி” என்ற அரசியலமைப்பு இலக்கை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

சட்ட விழிப்புணர்வு முகாம்கள்
பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், சிறைவாசிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமகன்கள் ஆகியோருக்கு தங்களது உரிமைகள் மற்றும் கடமைகள், அரசின் நல திட்டங்கள் மற்றும் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நல திட்டங்கள், மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், விபத்து நஷ்டஈடு, தொழிலாளர் உரிமைகள், மூத்த குடிமக்கள் உரிமைகள் மற்றும் அனைத்து அடிப்படை சட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது.
சட்ட ஆலோசனை மையங்கள்
சட்ட உதவி தேவைப்படுவோர் நேரடியாக அணுகும் வகையில் அவரவர் பகுதிகளிலேயே “சட்ட உதவி மையங்கள்” நடந்துவருகிறது. இதனால் ஒரு சட்ட ஆலோசனை/சட்ட உதவி பெற நீதிமன்றம் வரை வர வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள சட்ட உதவி மையங்கள் வாயிலாகவே சட்ட உதவியை பெற முடியும். சேலத்தில் சிறைகள், தாலுகா அலுவகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 25 சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
24×7 சட்ட உதவி மையங்கள்
மாண்புமிகு நீதியரசர் M. சுந்தர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முன்னாள் செயல்தலைவர் அவர்களின் முன்னெடுப்பில் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு (NALSA)- வின் பல்வேறு திட்டங்களின் கீழ் 24x7 மணி நேரமும் செயல்படும் சட்ட சேவை மையத்தை (Legal Services Clinics) சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் மாண்புமிகு நீதியரசர் சூர்யகாந்த் அவர்கள் கடந்த 23 ஆகஸ்ட் 2025 அன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
சட்ட தன்னார்வ தொண்டர்கள்
சட்ட உதவி சேவைகள் கிராம மக்களுக்கும் எளிய முறையில் சென்றடைய சட்ட தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கு சட்ட தகவல்களை வழங்கி, தேவையுள்ளவர்களை சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுகின்றனர்.
சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு Legal Aid Defense Counsel System (LADCS)
சிறைகளில் உள்ள கைதிகளுக்கும் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. வழக்கு நிலை, ஜாமீன், மேல் முறையீடு, தண்டனை குறைப்பு போன்ற விவகாரங்களில் இலவச சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு, கைதிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட சமூகத்தின் பலவீனப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு தரமான இலவச சட்ட உதவி வழங்கும் புதிய முறையை மாண்புமிகு தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு “Legal Aid Defense Counsel System - சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு” அதை தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சோதனை முயற்சியாக இரண்டு வருடங்கள் செயல்படுத்தி பார்த்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் Legal Aid Defense Counsel System (LADCS)/சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் அமைப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழக்கறிஞர்களை 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இது மிகச்சீரான, முழுநேர பாதுகாப்பு சேவை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் முதல் நீதிமன்றத்தின் இறுதி நிலை வரை முழுமையான சட்ட உதவி வழங்குவதே இதன் நோக்கம். ஜாமீன், மேல்முறையீடு, விசாரணை, ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரே குழு பொறுப்பேற்கும். இது வழக்குகளில் தகுதியான மற்றும் தரமான சட்ட உதவியை வழங்கி, நீதி, சமத்துவம் நிலைநிறுத்த உதவுகிறது.
நீதியின் கதவைத் திறக்க ஒரே ஒரு உதவி எண் - 15100
உங்களுக்கோ, உங்கள் அருகிலுள்ளவர்களுக்கோ சட்ட உதவி தேவைப்பட்டால்,தயங்காமல் அருகிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவையோ அல்லது அருகிலுள்ள சட்ட உதவி மையத்தையோ அணுகுங்கள்.
நீதியின் கதவைத் திறக்க ஒரே ஒரு உதவி எண்ணை அழைத்தாலே போதும். அது தான் NALSA-வின் 15100 - இந்தியாவில் எங்கிருந்தாலும், எந்த நேரத்திலும், யாரும் இந்த 15100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு இலவச சட்ட உதவி பெறலாம். உங்களுக்கோ, உங்கள் அருகிலுள்ளவர்களுக்கோ சட்ட உதவி தேவைப்பட்டால், தயங்காமல் அருகிலுள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவையோ அல்லது அருகிலுள்ள சட்ட உதவி மையத்தையோ அணுகுங்கள்." என்றனர் விரிவாக.














