செய்திகள் :

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், ``இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டுடைய நிரந்தர டிரெண்ட் கருப்பு - சிவப்பு தான். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான். ஏழாவது முறையும் தி.மு.க ஆட்சிதான். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை; ரொம்ப அடக்கத்தோடு, மிகுந்த பணிவோடு நம் அரசு செய்திருக்கின்ற சாதனைகள்மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். எல்லாவற்றுக்கும்மேலாக உடன் பிறப்புகளாகிய உங்கள் மீதான நம்பிக்கையிலும் சொல்கிறேன்.

வெற்றியைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. உங்களை வழிநடத்தி உங்களுக்கான டாஸ்க்கை ஒப்படைத்தாலே போதும். மீண்டும் உதயச்சூரியன் ஆட்சி உறுதி. இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதியும் தி.மு.க கோட்டை என்று நிரூபித்துக் காட்ட வேண்டும். 2026-ல் தி.மு.க-வின் வெற்றி என்பது, இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் பூத்கள் இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு பூத்திலும் நாம் செட் செய்திருக்கக்கூடிய மினிமம் டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நாம் அச்சிவ் செய்தாலே 2.60 கோடி வாக்குகளுக்குமேல் நாம் வாங்கிவிடுவோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தத் தேர்தலில், 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கியே ஆக வேண்டும். இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. 2 கோடியே 50 லட்சமா? என்று யாரும் மலைக்க வேண்டாம்; யோசிக்கவும் வேண்டாம். இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருத்தவரும் தலா 40 அல்லது 50 வாக்குகள் பொறுப்பேற்றுக்கொண்டால் அவ்வளவுதான். சிம்பிள். ஒவ்வொருத்தவரும் அவர்களுக்கு அசைன் செய்திருக்கின்ற 50 வாக்குகளைப் பெற்று தந்தாலே போதும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கிறது தான் நம்முடைய லட்சியம். அதற்காக, 2 மாதங்கள் ஓய்வை மறந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருத்தரும் 100 வாக்காளர்களை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும். என்னதான் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்று புதுபுது ஊடகங்கள் வந்தாலும், மக்களை நேரில் சந்தித்து பணிவாக வாக்கு கேட்கின்ற பிரசாரத்துக்கு ஈடாகாது. அதனால்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். பரம்பரைப் பரம்பரையாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கின்ற குடும்பங்களாக இருந்தாலும் சரி. இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பங்களாக இருந்தாலும் சரி. பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்க வேண்டும். இதை நீங்கள் ரிப்பீட்மோடில் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ரிப்பீட் ஆகும்.

2021-ல் இருந்ததைவிட நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலின்போது, இதையெல்லாம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம். இப்போது, சொன்னதையும் தாண்டி செய்துகொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன்னாடி வந்து நிற்கிறோம். எனவே, மெத்தனமாக இருக்காமல், களத்தில் தொடர்ந்து உழைத்தால் சென்ற முறையைவிட பெரிய வெற்றி 100 சதவிகிதம் சாத்தியம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதி வாரியாக பார்த்தாலே, மிகத்தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 200 தொகுதிகளுக்குமேல் நாம்தான் வெல்லப் போகிறோம். நேற்று காலை விடிந்ததும், 1.31 கோடி பெண்கள் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்திருக்கிறோம். அவர்கள் காலையில் கேட்ட முதல் ரிங்டோன், `5 ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அக்கௌண்ட்டில் வந்திருக்கிறதா?’ என்கிற மெசேஜ் டோன் தான். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, `தேர்தல் நெருக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும்’ என்று திட்டம் போட்டார்கள். ஒன்றிய பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார்கள். நல்லது செய்பவர்களையும் செய்யவிடமாட்டார்கள். தமிழ்நாட்டு மகளிருக்காக நான் கொடுத்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. அதற்கு தடைப்போட நான் விட்டு விடுவேனா? அதனால்தான் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்தோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல்.

மாநாடு

ஓரவஞ்சனைக்கும், வஞ்சகத்துக்கும் உருவகம் இருந்தால், அதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. இதுவரை தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டம் ஏதாவது அறிவித்திருக்கிறார்களா? நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். முறையாக பதில் சொல்ல, இதுவரையில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வரவில்லை. அதற்குப் பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. பா.ஜ.க-வின் தலைமையில் இருந்தும் பதில் வரவில்லை. பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக இருக்கிற பழனிசாமியிடம் இருந்தும் பதில் வரவில்லை. ஆமாம், பா.ஜ.க-வின் கிளைக் கழகமாக மாறிவிட்டது அ.தி.மு.க. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் பேசுவதற்குத் துணிவில்லாமல், முதுகெலும்பு இல்லாமல், கொத்தடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிற பழனிசாமி எனக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கும் ஒரு அரசியல்வாதி எப்படி எல்லாம் இருக்கக்கூடாது? என்பதற்கு அடையாளமாக சோஷியல் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. மாண்புமிகு பழனிசாமி அவர்களே, தவழ்ந்து தவழ்ந்து ஊழல் குற்றவாளியான அம்மையார் சசிகலா காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, காலை வாரிவிட்டுவிட்டு, `நீ எனக்குப் பதவி கொடுத்தியா?’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கேட்டீர்களே, மறுக்க முடியுமா?

சட்டம் - ஒழுங்குப் பிரச்னைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமையாவது இருக்கிறதா? உங்கள் கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள்... இதையெல்லாம் மறக்கடித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? பொல்லாத ஆட்சி பழனிசாமியின் ஆட்சி என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளே சாட்சியாக, ஆறாத வடுவாக இருக்கிறதே. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று அமைதியாக ஊர்வலம் சென்ற அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொல்லிவிட்டு, `டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று நாடகம்போட்டது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது, `அவர்கள் உடல்நலம் இல்லாமல் இறந்ததாக’ கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் சொன்னீர்களே, உங்களின் கல் மனதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்தீர்களா? பா.ஜ.க-வின் டப்பா என்ஜின் முன்னாடி நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் ஒருபோதும் தலைகுனியாது.

அண்மையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் வெளியிட்டார்களே. அதில் தமிழ்நாட்டுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் அறிவித்தார்களா? இதை தட்டிக்கேட்கிற துணிச்சலோ, தைரியமோ பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரைப் பொறுத்தவரைக்கும் `தோப்புக்கரணம் போடு’ என்று சொன்னால், `ஸ்டாப்’ சொல்கிற வரைக்கும் `நான் ஸ்டாப்’பாக பல்டி அடிப்பார். எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, `கூட்டணி தர்மத்துக்காகத்தான் தமிழ்நாடு உரிமைகளை அடகு வைத்தேன்’ என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்வார். இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் அவரின் தலைமையை, அவரின் கூட்டணியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் ஒரிஜினல் ஓனரான பா.ஜ.க-விடம் நேரடியாக சரண்டராகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், தமிழ்நாட்டுக்குள் வந்தால் அவர்களின் சதி திட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று மக்களிடம் நீங்கள் புரிய வைக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க

`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?

மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை புகுவிழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "நயினார் நாக... மேலும் பார்க்க

ஏழைகளின் இறைச்சி முதல் தீபாவளி பருப்பு வரை! - புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் டாப் 6 பருப்புகள்

உணவுப் பயிர்கள், கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பர்ய தயாரிப்புகள், தோட்டப்பயிர்கள், மசாலாக்கள் போன்றவற்றிற்குப் பொதுவாக புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த புவிசார் குறியீடு இருந்தால் ... மேலும் பார்க்க