Meesaya Murukku 2: "'என்னை அப்பானு கூப்பிடுற உரிமை உனக்கு இருக்கு'னு தேவா சார் ச...
உங்கள் குழந்தைக்கு எந்த நாளில் பெயர் சூட்டுவது நல்லது? - முக்கிய தினங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்!
நம் வாழ்வும் கனவும் நம் பிள்ளைகள்தானே. அவர்களுக்கான முக்கிய தினங்கள் விசேஷமாக அமைவது சிறப்பல்லவா? அவ்வகையில் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகளுக்கான... பெயர் சூட்டுவது, முடிக்காணிக்கை, காது குத்துதல், அன்னப் பிரசனம் போன்ற மிக முக்கிய வைபவங்களை எந்த நாளில் நடத்தலாம்? வழிகாட்டுகிறார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.

குழந்தைக்கு எப்போது பெயர் சூட்டலாம்?
ஆயுள் முழுக்க நாம் சொல்லி அழைக்கப்போகும் பெயருக்கு அதீத ஈர்ப்பும் சிறப்பும் உண்டு. ஆகவே, பெயர் சூட்டல் வைபவமும் முக்கியத்துவம் பெறுகிறது. அன்றைய தினத்தில் தந்தை குழந்தையின் பெயரை அதன் காதில் மூன்று முறை கூறவேண்டும். அப்போது உறவினர்கள் அதை திரும்பச் சொல்லவேண்டும். அந்த தருணத்தில் குழந்தையின் உள்ளங்கையில் தங்கக்காசு ஒன்றை வைப்பார்கள்.
பொதுவாக குழந்தை பிறந்து 10, 11, 12 அல்லது 16-ம் நாளில் பெயர் சூட்டலாம். சில சமூகங்களில் சூழல் சார்ந்து 41-ம் நாளும் பெயர் சூட்டும் வைபவத்தை நடத்துவார்கள்.
பெயர் சூட்ட சுப கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி.
திதி: சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி ஆகியவை தவிர மற்ற திதிகள் அந்த நாளுடன் இணைந்திருந்தால் சிறப்பு.
நட்சத்திரம்: சர, ஸ்திர, துரித, சாது நட்சத்திரங்கள் முறையே புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம், ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அசுவினி, பூசம், அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை, அனுஷம் அல்லது ரேவதி சிறந்தவை.
யோகம்: பெயர் சூட்டும் தினத்தில் விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வ்யாகாதம், வஜ்ரம், வ்யதிபாதம், பரிகம் மற்றும் வைதிருதி ஆகிய யோகங்களைத் தவிர்த்து மற்ற யோகங்கள் பெயர் சூட்டும் தினத்துடன் இணைந்து இருக்கலாம்.
கரணம்: சகுனி, விஷ்டி தவிர மற்ற கரணங்கள் சிறந்தவை.
மேற்கண்ட யோகம் மற்றும் கரணம் அனைத்தும் சுப காரியங்களுக்கும் விலக்கப்பட்டவை. இவை தவிர மற்ற யோகங்கள், கரணங்கள் மற்றும் கிழமைகள் சிறந்தவை.
மேலும் மேற்கண்ட பஞ்சாங்க விஷயங்கள் மட்டுமன்றி, சடங்கு வைக்கும் நாளில் பஞ்சக சுத்தி, ஜாதகரின் ஜாதகத் தன்மை, கிரகண தோஷங்கள், சங்கராந்தி மற்றும் சந்தியாகாலம் போன்றவற்றையும் கவனித்து முகூர்த்தம் குறிக்கவேண்டும்.

அன்ன ப்ராசனம் எப்போது?
இது குழந்தைக்கு முதல் முறையாக திட உணவு ஊட்டும் சடங்கு. ஆண் குழந்தைக்கு 6, 8 அல்லது 10-வது மாதத்திலும்; பெண் குழந்தைக்கு 5, 7, 9 அல்லது 11-வது மாதத்திலும் இந்தச் சடங்கை செய்யலாம்.
திதி: 2, 3, 5, 7, 10, 13 அல்லது பௌர்ணமி சிறந்தது.
நட்சத்திரம்: அனைத்து சர, சாது, ஸ்திர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை.
முடி காணிக்கை எப்போது செலுத்தலாம்?
இது முதல்முறையாக முடி காணிக்கை செலுத்தும் சடங்கு ஆகும். இதை நிகழ்த்துவதற்கு 2, 3, 5, 7, 10, 11 அல்லது 13-ம் திதி சிறந்தது.
நட்சத்திரம்: சர மற்றும் துரித நட்சத்திரங்கள் சிறந்தவை. அதாவது கீழ்க்காணும் நட்சத்திரங்கள் பொருந்தி வரும் நாள் சிறப்பு.
சர நட்சத்திரங்கள்: புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம் சதயம். துரித நட்சத்திரங்கள்: அசுவினி, பூசம், ஹஸ்தம், அனுஷம், திருவாதிரை
காது குத்துதல் எப்போது?
பொதுவாகவே நம் தமிழ் நாட்டில் குழந்தை பிறந்து ஒரு வருடம் கழிந்து வரும் ஜென்ம நட்சத்திர பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அன்றைய தினமோ மறுநாளோ குலதெய்வ கோயிலுக்குச் சென்று முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வழக்கம்.
சிலர், பிறந்த நாளுக்குப் பிறகு விசேஷ தினங்களைத் தேர்வு செய்து காதுகுத்துவார்கள். குறிப்பிட்ட நாள்கள் விசேஷமானவையா என அறிய பின்வரும் விவரங்களைப் பயன்படுத்தலாம்.
திதி: ரிக்தா திதிகள் (4, 9, 14), 8-வது திதி மற்றும் அமாவாசை தவிர மற்ற திதிகள் குறிப்பிட்ட தினத்தில் இருப்பது நன்று.
நட்சத்திரம்: சாது, துரித நட்சத்திரங்கள், புனர்பூசம், திருவோணம் மற்றும் அவிட்டம் சிறந்தவை.

பிறந்த நாள் கொண்டாட்டம்!
நம்மில் பெரும்பாலானோர் ஆங்கில தேதி அடிப்படையில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அதேபோல், குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவதுடன், வீட்டிலும் பிறந்தநாள் கொண்டாடுவது மிகவும் சிறப்பு.
சில தருணங்களில் ஒரே மாதத்தில் இரண்டு முறை ஜென்ம நட்சத்திரம் வரும். அப்போது இரண்டாவது வரும் நாளை ஜென்ம நட்சத்திர நாளாக எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். நமது ஜனன நட்சத்திரம் முதல் நாள் தொடங்கி மறு நாள் வரை இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், எந்த நாளில் சூரிய உதயம் முதற்கொண்டு 2 மணி, 24 நிமிடங்கள் வரை ஜனன நட்சத்திரம் உள்ளதோ, அந்த நாளில் பிறந்தநாள் கொண்டாடவேண்டும்.
பிறந்தநாள் விழா, வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல. அந்த விண்ணுக்கும் நம் உயிருக்கும் உள்ள தொடர்பை புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்கு. இந்த நாளில் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெறுதல், புனித இடங்களுக்குச் சென்று வருதல், தான தர்மம் செய்தல், பறவைகள், விலங்குகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு தானம் வழங்குதல் போன்ற தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் வயிறும் மனமும் குளிர்ந்தால், நமது வாழ்வும் வளமும் வளரும் என்பது உறுதி.
மேலும் இந்நாளில் விநாயகர் பூஜை, விஷ்ணு பூஜை, பகவதி சேவை செய்ய வேண்டும். மாணவர்கள் சரஸ்வதி பூஜை, வித்ய கோபால மந்திர அர்ச்சனை, மிருத்யுஞ் ஜெயன பூஜை செய்யவேண்டும்.!




















