தேர்தல் ஆணையம்: ``இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" - முன்னாள் ஆணை...
சொந்த வீட்டில் சந்தோஷமாய் வாழ 15 ஜோதிட ரகசியங்கள்! விளக்குகிறார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
ஜோதிடத்தில் ‘கிரக யோகம்’ என்று ஒன்று உண்டு. ஒருவருக்கு ஜாதகத்தில் வீடு வாங்கும் கிரக அமைப்புகள் சிறப்பாக இருந்தால், சொந்த வீடு நல்லபடியே அமைந்துவிடும்.
பொதுவாகவே ‘எப்போது வீடு கட்டுவோம்?’ என்று ஏங்குபவர்களும் உண்டு. நிறைய வீடுகளைக் கட்டிக் கொண்டே இருப்பவர்களும் உண்டு.

அப்படிப் பல வீடுகள் கட்டியிருந்தாலும் அவற்றுள் ஒன்றிலும் தங்கியிருக்க முடியாதவர்களும் உண்டு. ஏதோ சூழலின் காரணமாக சொந்த வீட்டை வாடகைக்கு விட வேண்டி வரும். அல்லது உத்தியோக மாறுதலில் போய்விடுவர். இப்படிப் பல பிரச்னைகள் உண்டு. இப்படியான நிலைகளுக்கு ஆளாகாமல் சொந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு, வீடு கட்டத்தொடங்கும் காலத்தைச் சிரத்தையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுபற்றிய ஜோதிட தகவல்களைப் பார்ப்போம்.
அதிர்ஷ்டம் தரும் நட்சத்திரங்களும் ராசிகளும்!

1. ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும் நாள்களில் வீடு கட்ட ஆரம்பிப்பது உத்தமம்.
2. மேற்காணும் நட்சத்திர நாள்கள் வசதிப்படவில்லை எனில், புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். ஆனாலும் இவை மத்திம பலன்களையே தரும்.
3. மேற்காணும் 15 நட்சத்திரங்களைத் தவிர மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம். அவற்றில் வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது.
4. ராசிகளை எடுத்துக்கொண்டால் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை விசேஷமானவை. உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை மத்திமம். மற்றவை கூடாத ராசிகள் ஆகும்.
5. மாதங்களில் ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய ஐந்து மாதங்களில் வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது. ஆனால், இந்த மாதங்களில் வாஸ்து நாட்கள் வரும்போது தொழிற்சாலை கட்ட ஆரம்பிக்கலாம்.
6. வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்யப்போகிறீர்களா... கிரகப் பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிஷம் ஆகியவை விசேஷமானவை.
7. அஸ்தம், அஸ்வினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்ற நட்சத்திரங்களில் கிரகப் பிரவேசம் செய்யக் கூடாது.
அஷ்டம சுத்தியும் விசேஷ லக்ன முகூர்த்தங்களும்!

8. அதேபோல் `அஷ்டம சுத்தி’ என்று ஒன்று உண்டு. எந்த முகூர்த்தத்தில் கிரகப் பிரவேசம் செய்கிறோமோ, அதற்கு எட்டாவது வீட்டில் பாபக் கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியவை இருக்கக் கூடாது. புதன் தனித்திருந்தால் தவறில்லை. சூரியன் அல்லது செவ்வாயுடன் சேர்ந்து இருக்கக் கூடாது. ராகு, கேதுவும் இருக்கக் கூடாது. எந்த முகூர்த்தம் பார்த்தாலும் இந்த அஷ்டம ஸித்தியையும் பார்ப்பர். 8-ஆம் இடத்தில் சுபக் கிரகங்கள் இருக்க வேண்டும். இது குறித்து ஜோதிடரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்.
9. ‘மாதவீயம்’ நூலில் கிரகப் பிரவேச ராசி பலன் என்றொரு விஷயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது சித்திரை மாதம் கிரகப் பிரவேசம் செய்பவர், அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாது. வைகாசியில் குடி புகும் நபர்களுக்குச் சௌக்கியம் ஏற்படும். ஆனியில்-சுகம், ஆடி-நாசம், ஆவணி- ரத்தின விருத்தி, புரட்டாசி - போகம், ஐப்பசி- வியாதி, கார்த்திகை- தனம் (செல்வம்), மார்கழி- துக்கம், தை- ஸித்தி, மாசி- நற்பெயர் ஆகிய பலாபலன்கள் ஏற்படும்.
10. ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால், வீடு அமையும் என்பர். வீட்டு விஷயத்தில் செவ்வாய்க்கு முக்கியமான ஸ்தானம் உண்டு. செவ்வாய்தான் பூமி புத்திரன் ஆயிற்றே! வீடு கட்டும்போது செவ்வாய் புக்தி, செவ்வாய் இருக்கக் கூடிய இடம், செவ்வாயின் தசை ஆகியன கிரக யோகம் தரும். இதெல்லாம் ஒரு வீடு கட்டுபவர்களுக்கான பலன்கள்.
11. மாதவீயம் நூலில் குறிப்பிட்ட முகூர்த்தங்களைப் பற்றிய தகவல்களும் உண்டு. லக்னத்தில் சுக்கிரன், அதிலிருந்து 5-ஆம் இடத்தில் வியாழன், 6-வது வீட்டில் சனி, 3-வது வீட்டில் சூரியன் என்று அமைந்த முகூர்த்த காலத்தில் வாஸ்து நேரம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த முகூர்த்தத்தில் பிரதம ஸ்தம்பம் வைக்க வேண்டும். நிலைகூட வைக்கலாம். அந்த வீடு இருநூறு வருடங்கள் நிலைத்திருக்கும் என்கிறார்கள்.
12. சுக்கிரன் லக்னத்தில் இருக்கும்போது 5-ல் குருவும் இருந்தால் குரு லக்னத்தைப் பார்ப்பார். குரு பார்வை கோடி நன்மை. இந்தக் காலத்தில் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும்.
13. லக்னத்தில் குரு, 4-ஆம் இடத்தில் சுக்கிரன், 7-ஆம் வீட்டில் சந்திரன், 3-ஆம் வீட்டில் சனி, 6-ஆம் இடத்தில் சூரியன் இப்படி அமைந்த சந்தர்ப்பத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால், அந்த வீடு நூறு வருடங்கள் கடந்து இருக்கும்.
14. வியாழன் 4-ஆம் வீட்டில் இருக்க, 10-ஆம் இடத்தில் சந்திரன், 3-ஆம் இடத்தில் செவ்வாயும் சனியும் அமைந்த முகூர்த்தம்... இதில் வீடு கட்டத் தொடங்கினாலும் அது நூறு வருடங்கள் நிலைத்திருக்கும்.
15. சுக்கிரன், லக்னத்தில் உச்சமாக இருக்கும்போது ராசி- மீனமாக இருக்கும். நட்சத்திரம்- பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்று இருக்கும். இந்தக் காலத்தில் 10-ல் வியாழனும், 11-ல் சனியுமாக இருக்கும்போது கட்ட ஆரம்பிக்கப்படும் வீடுகள் காலாகாலத்துக்கும் நிற்கும். ஐஸ்வர்யமும் விருத்தியடையும்.
















