TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர...
‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியிட்டதற்கு பதிலடியாக, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, “கொள்கை எங்கள் வேட்டி, பதவிதான் எங்கள் துண்டு என்று சொல்லி பதவிக்காக வேட்டியை வீசி எறிந்து விட்டு, துண்டோடு திரிந்த கோமாளிகள் எல்லாம் காங்கிரஸ் கொள்கை பற்றியோ, தலைவர் ராகுல் காந்தி பற்றியோ விமர்சிப்பதற்கு எள்ளளவும் தகுதி இல்லை.
நாட்டில் மதவாதம் தலை தூக்கி விடக் கூடாது, மதவெறிக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என்கின்ற ஒற்றை புள்ளியில் தான் உங்களோடு நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் பகுத்தறிவு கொள்கையை மறந்து, உங்கள் கொள்கை வழி தலைவர் பெரியாரை மறந்து நெற்றியிலே குங்குமம் வைத்தால் அது என்ன ரத்தப் பொட்டா? என கேட்டதை மறந்து இன்று கோயில் கோயிலாக திருச்செந்தூர் முருகனையும் பழனி மலை முருகனையும் திருத்தணி முருகனையும் படியேறி வேலோடு வழிபட்டது யார்?
காமராஜரை வீழ்த்துவதற்காக ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோடு கூட்டணி வைத்து பதவி சுகத்திற்காக தெருத்தெருவாக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்த போது உங்கள் கொள்கை பல் இளிக்கவில்லயா? ஆரிய மாயையில் பேச நா இரண்டுடையோய் போற்றி போற்றி என அண்ணா எழுதினாரே அது உங்களுக்காக தானா? நீங்களா காங்கிரஸ் கட்சியின் கொள்கை பல் இளிக்கிறது என பேசுவது? எங்கே போயிற்று உங்கள் கொள்கை?

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடிகளை மிரட்டி காலூன்ற துடித்துக் கொண்டிருக்கிற சூழலில், தமிழக மக்கள், இளைஞர்கள் பெருவாரியாக விஜயை, த.வெ.க-வை ஆதரித்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கு ஒரு சில இடங்கள் தேவை என்பதை பயன்படுத்திக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்த முற்படும் செயலை தடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் த.வெ.க-வை ஆதரிப்பது என காங்கிரஸ் கட்சி நீண்ட ஆலோசனைக்கு பிறகு முடிவெடுத்தது.
இதை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் ஏதோ தேர்தலிலே உங்களோடு கூட்டணி வைத்து விட்டோம் என்பதற்காக, உங்கள் அடிமை என நினைத்துக் கொண்டு எங்களுடைய கொள்கைகளை எங்கள் தலைவர்களை நீங்கள் விமர்சித்து இருப்பது எப்படிப்பட்ட செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
டி.ஆர்.பாலு அவர்களே உங்களுடைய வரலாறு என்ன? நீங்கள் யார்? கப்பல் மந்திரியாக, நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக, சாராய ஆலை அதிபராக எப்படியெல்லாம் இன்றைக்கு உயர்ந்து வந்து உள்ளீர்கள் என்பதை பற்றி பேசலாமா?
எந்த கொள்கையை விற்று இன்றைக்கு நீங்கள் கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே நாங்கள் அமைதி காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களையோ, காங்கிரஸின் சித்தாந்தத்தை, கொள்கையை பற்றியோ நீங்கள் விமர்சித்தால் தேன் கூட்டில் கல் எறிந்த கதையாகிவிடும். இனியாவது யாகாவாராயினும் நாகாக்க என்பதை உணர்ந்து வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














