TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர...
RB Choudary: ஏற்றுமதி பிசினஸ் டு சினிமா; 35 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை - தெரியாத கதைகள்!
தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மரணம்.
'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஜில்லா' உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்து பெரும் புகழ் பெற்றவர்.

இவரின் மகன் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் நடிகர்கள். கடந்த செவ்வாய்கிழமை, பிற்பகல் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.
இந்த விபத்தில் இவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, இவருடைய உயிரும் பிரிந்திருக்கிறது. நேற்று, ஆர்.பி.செளத்ரியுடைய உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக இவருடைய உடல், மயிலாப்பூரிலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆர்.பி. செளத்ரி குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ!
1.தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 35 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், ராஜகுமாரன், எழில், லிங்குசாமி, பேரரசு என அந்தப் பட்டியல் நீள்கிறது.
2. ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஆரம்பத்தில் இரும்பு ஏற்றுமதி மற்றும் நகை தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவரது முழுப்பெயர் ரத்தன்லால் பகத்ராம் செளத்ரி. தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் மூன்று படங்களை மலையாளத்தில் தயாரித்திருக்கிறார்.
3. தமிழில் முதல் படமாக இவர் தயாரித்தது புது வசந்தம் திரைப்படம். முரளி கதாநாயகனாக நடித்த இந்தப் படம்தான் இயக்குநர் விக்ரமன் இயக்கிய முதல் படம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. Super Good Films என தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை வடிவமைத்ததும் இயக்குநர் விக்ரமன்தான்.

4. இவர் தயாரிப்பில், லிவிங்ஸ்டன் - கெளசல்யா நடிப்பில் வெளியான 'சொல்லாமலே' படம் தமிழில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதைத் தொடர்ந்து, அதை வெங்கடேஷ் - ட்விங்கிள் கண்ணா நடிப்பில் 'சீனு' என்ற பெயரில் தெலுங்கிலும் கோவிந்தா - ராணி முகர்ஜி நடிப்பில் 'பியார் தீவான ஹோத்தா ஹை' என்ற பெயரில் இந்தியிலும் தயாரித்து அங்கேயும் வெற்றி கண்டார். இவர் தயாரித்த ஒரே இந்தி படமும் இதுதான்.
5. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 50வது படமான 'ஆசை ஆசையாய்' தான் ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகன் ஜீவா அறிமுகமான முதல் படம். இன்று பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரவி மரியா தான் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர்.
6. 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ஷாஜகான்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' என விஜய்யை வைத்து ஆறு திரைப்படங்களை தயாரித்துள்ளார் ஆர்.பி.செளத்ரி. திருப்பாச்சி திரைப்படத்தில் தான் இயக்குநராக பேரரசு அறிமுகமானார்.

7. சூப்பர் குட் ஃபிலிம்ஸ், மெகா சூப்பர் குட் ஃபிலிம்ஸ், சூப்பர் குட் கம்பைன்ஸ் என வெவ்வேறு பெயர்களில் பல்வேறு மொழிகளில் படங்கள் தயாரித்துள்ளார்.
8. நடிகர் சரத்குமாருடன் புரியாத புதிர் தொடங்கி, சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, கேப்டன், நாட்டாமை, சூர்யவம்சம், சிம்மராசி, மாயி, விண்ணுக்கும் மண்ணுக்கும், சமுத்திரம் ஆகிய 10 படங்களைத் தயாரித்திருக்கிறார்.
9. தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தை யோகேஷ், மேக்னா ராஜ் நடிப்பில் கன்னடத்தில் தயாரித்தார்.
10. தமிழக அரசின் மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகளை வாங்கியிருக்கிறார். பல படங்களை விநியோகமும் செய்திருக்கிறார்.
11. இவர் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடித்த `மாரீசன்'. இப்போது, 'மகுடம்' படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.
12. 99 படங்களைத் தயாரித்தவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் கதாநாயகனாக வைத்துப் படத்தை இயக்கியதில்லை. ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய `அடுத்த வாரிசு' படத்தை விநியோகம் செய்திருக்கிறார்.

13. நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் `மகுடம்' திரைப்படம் தற்போது தயாரிப்பில் இருக்கிறது.
14. Super Good Films நிறுவனத்தின் 100 வது படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இந்நிலையில் விஜய் நடிப்பிலிருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தியதால் அது நடக்கவில்லை.
தமிழ் சினிமாவின் பல்வேறு ஹிட் கமர்ஷியல் படங்களை தயாரித்தவர்தான், இன்று பல தயாரிப்பாளர்களுக்கும் இன்ஸ்பிரேஷன். இந்நிலையில் தான் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். அவருக்கு இந்தியத் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.




















