"அப்போது நான் அழவில்லை; ஆனால்..." - தனிமை பற்றி மாளவிகா மோகனன்
"ஐஸ்வர்யா ராய்தான் என் உயிர்த்தோழி" - விவாகரத்து வதந்திகளுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி!
திரையுலக நட்சத்திரத் தம்பதிகளின் வாழ்க்கை எப்போதும் பொதுமக்களின் ஆர்வத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில், உலக அழகி ஐஸ்வர்யா ராய் - பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரின் திருமண வாழ்க்கை கடந்த 19 ஆண்டுகளாக இந்திய ஊடகங்களின் பேசுபொருளாக இருந்துவருகிறது. வதந்திகளும் சர்ச்சைகளும் ஒருபுறம் சூழ்ந்தாலும், முதிர்ச்சியான காதலாலும் பரஸ்பர மரியாதையாலும் ஒரு பிணைப்பை எப்படித் தக்கவைக்க முடியும் என்பதற்கு இந்தத் தம்பதியினர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சமீபத்தில் அபிஷேக் பச்சன் தனது மனைவியைப் பற்றிப் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான தகவல்கள், அவர்களின் ஆழமான காதலை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை தனது சோல்மேட் (உயிர் தோழி) என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகள் ஆராத்யாவை மிகச் சிறந்த பண்புகளுடன் வளர்த்ததற்கான முழுப் பெருமையும் ஐஸ்வர்யா ராயையே சேரும் என்று பாராட்டியுள்ள அவர், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தங்களது 20-வது திருமண நாளுக்காக மிகப் பெரிய திட்டங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காதல் பயணம்...
அபிஷேக் பச்சன் தனது பேட்டியில் தங்களது காதல் பயணம் குறித்தும் அழகாகப் பகிர்ந்துள்ளார். 2000-ம் ஆண்டு வெளியான `தாய் அக்ஷர் பிரேம் கே' திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் இவர்கள் முதன்முதலில் சந்தித்தனர். அப்போது அவர்கள் நல்ல நண்பர்களாக மட்டுமே இருந்தனர். "அப்போது அவள்தான் என் வாழ்க்கைத்துணை என்று நான் சிறிதும் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

பின்னர் 2006-ல் வெளியான `உம்ராவ் ஜான்' படப்பிடிப்பின் போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து `குரு' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களின் பிணைப்பு மேலும் வலுவானது. `குரு' திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்காக நியூயார்க் சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த ஹோட்டலின் பால்கனியில் வைத்து ஐஸ்வர்யாவிடம் தனது காதலை வெளிப்படுத்தி திருமணத்திற்குச் சம்மதம் கேட்டுள்ளார் அபிஷேக். எந்த ஒரு பகட்டும் இன்றி, மிகவும் இயல்பான அந்த ப்ரொபோசலை ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ஏப்ரல் 2007-ல் இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
விவாகரத்து வதந்திகள்...
சமீப காலமாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து பெறப் போவதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பல வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு இந்தத் தம்பதியினர் தங்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் மூலம் சவுக்கடி கொடுத்துள்ளனர்.
ஐஸ்வர்யாவின் பதிவு: 19-வது திருமண நாளான ஏப்ரல் 20-ம் தேதி, தனது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யாவுடன் சிரித்த முகத்துடன் இருக்கும் அழகான புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இது அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற வதந்திகளுக்கு நேரடி முற்றுப்புள்ளியாக அமைந்தது.

அபிஷேக்கின் பதிலடி:
ஒரு போட்காஸ்ட் பேட்டியில் விவாகரத்து வதந்திகள் குறித்துப் பேசிய அபிஷேக் பச்சன், "இந்தச் செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறான நோக்கத்துடன் பரப்பப்படுபவை. எங்களுக்குத் திருமணமாவதற்கு முன்பிருந்தே எப்போது திருமணம் நடக்கும் என்றும், திருமணம் முடிந்தவுடன் எப்போது விவாகரத்து நடக்கும் என்றும் அவர்கள் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவளுக்கு (ஐஸ்வர்யா) என்னைப் பற்றித் தெரியும், எனக்கு அவளைப் பற்றித் தெரியும். நாங்கள் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குடும்பமாக வாழ்கிறோம்; அதுதான் எங்களுக்கு முக்கியம். இதைப் போன்ற வதந்திகள் எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது" என்று மிகக் கடுமையாகப் பதிலளித்திருந்தார்.
எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்காமல், 19 ஆண்டுகளைக் கடந்து, ஒருவரையொருவர் ஆழமாக நேசித்து வாழ்ந்து வருவதை இவர்களது சமீபத்திய செயல்கள் நிரூபிக்கின்றன. பொதுவாழ்க்கையில் வரும் விமர்சனங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அபிஷேக், "தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் மனைவியிடம் மூன்று முறை `SORRY' கேட்டுவிடுங்கள், வாழ்க்கை சீராக இருக்கும்" என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

வாழ்க்கை என்பது பூக்களால் மட்டுமே ஆன பாதை அல்ல; அதில் விமர்சனங்களும் வதந்திகளும் முட்களாகக் குறுக்கிடுவது இயல்பே. ஆனால், `வெளிச்சம் எப்போதுமே இருளை வெல்லும்’ என்பதற்கு ஏற்ப, அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களுக்கு எதிரான எதிர்மறைச் செய்திகளைத் தங்களின் மௌனத்தாலும், மாறாத புன்னகையாலும் கடந்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் பக்கபலமாக நிற்பதுடன், மகள் ஆராத்யாவை ஒரு சிறந்த மனுஷியாக வளர்ப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு இவர்களின் உறவை மேலும் அழகாக்குகிறது.















