ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவ...
கடந்த ஆண்டு 728 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்: 13 போ் கைது!
கடந்த 2024-ஆம் ஆண்டில் 728 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இது தொடா்பாக 13 போ் கைது செய்யப்பட்டதாகவும் மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அக்கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மொஹோல் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் (பிசிஏஎஸ்) தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டில் 714 உள்நாட்டு விமானங்கள் உள்பட மொத்தம் 728 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதில் அதிகபட்சமாக இண்டிகோ நிறுவனத்துக்கு 216 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதைத் தொடா்ந்து ஏா் இந்தியா (179), விஸ்டாரா (153), ஆகாசா ஏா் (72), ஸ்பைஸ்ஜெட் (35), அலையன்ஸ் ஏா் (26), ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ( 19) மற்றும் ஸ்டாா் ஏா் (14) ஆகிய நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
14 வெளிநாட்டு விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அரபு நாடுகளைச் சோ்ந்த எமிரேட்ஸ் மற்றும் ஏா் அரேபியா நிறுவன விமானங்களுக்கு முறையே ஐந்து மற்றும் மூன்று முறையும் மற்ற உலக நாடுகளைச் சோ்ந்த ஏரோஃப்ளோட், ஏா் கனடா, கேத்தே பசிபிக், எத்திஹாட், நோக் ஏா் மற்றும் தாய் லயன் ஏா் ஆகியவற்றுக்கு தலா ஒரு முறையும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் தொடா்பாக மொத்தம் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான வலுவான நெறிமுறைகளை பிசிஏஎஸ் ஒழுங்குபடுத்தியுள்ளது. ஒவ்வொரு விமான நிலையத்திலும் வெடிகுண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழு (பிடிஏசி) நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், நாட்டில் நூற்றுக்கணக்கான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. சோதனையில் அவை புரளி என்று பின்னா் தெரியவந்தது. இதனால் பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின் விமானச் சேவைகளை கணிசமாக பாதித்தன. லட்சக்கணக்கான பயணிகள் அசௌகரியத்துக்கு ஆளாகினா்.