Nvidia: உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தொழில்நுட்ப அரசன்; Jensen Huang-ன் எழுச்...
கந்த சஷ்டி விரதம்: சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்... | திருச்செந்தூரின் கடலோரத்தில் - 7
முருகப்பெருமானுக்கு சக்திதரன் என்கிற திருநாமம் உண்டு. அக்னியால் அந்தக் கந்தனை உண்டாக்கியவன் ஆதி சிவன் என்றால் அவருக்கு வேலாகத் தன் சக்தியைக்கொடுத்து அசுர சம்ஹாரமூர்த்தி ஆக்கியவள் ஆதி சக்தி.
சூரசம்ஹாரத்துக்கு முன் பார்வதி முருகப்பெருமானும் வேல் கொடுத்து அருளினார். அந்த வேல்கொண்டே முருகனும் சூரனை வதம் செய்தார்.
உண்மையில் சூரபத்மனை முருகப்பெருமான் வதமா செய்தார்... இல்லையே தடுத்தாட்கொண்டு அல்லவா அருளினார். இருகூறாகப் பிளந்து சேவலும் மயிலுமாக்கித் தன்னோடே சேர்ந்துக்கொண்டார். இதைவிட பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். இதற்குக் காரணம் அன்னையே. அது எப்படி என்கிறீர்களா...
அன்னை சகல உயிர்களின் தாய்... யமன் தன் கடமையைச் செய்யவந்தான். மார்க்கண்டேயனுக்கு 16 வயதுதான் ஆயுள். அவன் அபயம் வேண்டி ஈசனிடம் தஞ்சம்புகுந்தான். திருக்கடவூர் திருத்தலத்தில் லிங்கரூபமாக விளங்கிய ஈசனைக் கட்டிக்கொண்டான்.
அப்போது அங்குவந்த யமன் கடமை உணர்வில் தன் பாசக்கயிற்றை வீச அது லிங்கத்தையும் சேர்த்துப் பிணைத்தது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான தன்னையே காலபாசத்தால் கட்டமுனைந்த தண்டிக்க ஈசன் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளினார். யமன் நடுங்கினான்.

ஒரு குடும்பத்தில் அப்பாவின் தண்டனை கடுமையானதாக இருக்கும். அம்மா குழந்தைகளைக் காப்பாற்ற முயல்வாள். தந்தையின் கோபம் பிள்ளைகளைத் தாக்கும் முன் தான் கோபப்படுபவள்போல் நடித்து அந்தக் குழந்தையைக் காத்தருள்வாள். அப்படித்தான் திருக்கடவூரில் ஈசனின் தாக்குதலால் காலன் சம்ஹாரம் செய்யப்பட்டுவிட்டால் பின் யார் இந்த உலகில் அந்தப்பணியைச் செய்வது? ஈசனின் இடபாகத்தில் அமர்ந்திருப்பவள் அம்பிகை. ஈசன் காலன் மீது கோபம் கொள்ள நினைப்பதற்கு முன்பாகத் தனக்குரியதான இடபாகத்தால் யமனை எட்டி உதைத்தாள் அம்பிகை.
வலதுகாலால் ஈசன் யமனைத் தாக்கியிருந்தால் என்ன வாகியிருக்கும்... நடமாடும் பெருமானின் திருவடிகளில் அகப்பட்ட முயலகன் அவர் திருவடியிலேயே இருக்கும் பேறு பெற்றாலும் மீண்டெழ இயவில்லை அல்லவா... அசுர சக்திகளுக்கு அது சக்தி. ஆனால் அன்றாடம் ஈசனையும் அம்பிகையையும் வழிபடும் யமனுக்கு அது சரியாக வருமா... மேலும் அவன் கால தேவன் அல்லவா... அவன் தன் கடமையைச் சரியாகச் எய்யவில்லை என்றால் மூவுலகும் சமனநிலையோடு வாழ்வது எப்படி? அதனால்தான் அம்பிகை இடபாகம் கொண்டு ஈசன் யமனை உதைக்கச் செய்தாள். அந்த நேரத்தில் தண்டனையை அடைந்தாலும் தன் தவற்றை உணர்ந்த யமனுக்கு மீண்டும் வாழ்வை அருளினார் ஈசன்.
அப்படித்தான் அன்னையின் வேலும் சூரனுக்கு அருள்பாலிக்கவே முருகப்பெருமானை வந்தடைந்தது. முருகன் இதை அறியாதவரா என்ன... அவரே சகலமும். தன்னை நிந்திப்பவரையும் தடுத்து ஆட்கொண்டு அருள்பவர். அவரைச் சரணடைந்தால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். திருச்செந்தூரில் முருகருக்கு சத்ரு சம்ஹார மூர்த்தி என்கிற திருநாமம் உண்டு.
மனித வாழ்வில் நமக்குள்ளும் புறமும் எதிரிகள் குவிந்துகிடக்கிறார்கள். வெளியே இருக்கும் எதிர்களாவது நம் கண்ணுக்குத் தெரிவார்கள். அடையாளம் கண்டு விலகிவிடலாம். அல்லது சண்டையிடலாம். ஆனால் நமக்குள்ளேயே இருக்கும் புலன்கள் என்னும் எதிரிகளைக் கட்டுப்படுத்துவதுதான் கடினம். அதிலும் மனம் அதுதான் உடலின் பஞ்ச இந்திரியங்களையும் இயக்குவது. தன் இஷ்டத்துக்கு ஆட்டிவைப்பத்து. அப்படிப்பட்ட மனதை அடக்க வல்லவர் முருகப்பெருமான்.

முருகா முருகா என்று சொல்பவர்களுக்கு மனம் அடங்கும். மனம் அடங்கிவிட்டால் பயம் விலகும். சகல ஸித்திகளும் கைகூடும். நிரந்தரமான மகிழ்ச்சி நிறைந்திருக்கும். துன்பம் என்பதே வாராது. வினைப்பயன் விலகிவிடும். அதன்பின் மனத்தில் முருகன் நிரந்தரமாக எழுந்தருளி அருள்பாலிப்பார். அப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்துவதுதான் சூரசம்ஹாரம்.
முருகன் புராணக் கதை அல்ல. அவன் வாழும் தெய்வம். வேல் கொண்டு வந்து சூரனை வதைப்பது உலோகச் சிலை அல்ல. அதில் முருகப்பெருமானின் சாந்நித்தியம் கூடிவந்தே விளையாடல் நடத்துகிறது. அதற்கு உதாரணம் இன்றும் சிக்கலில் நடக்கும் அதிசயம்.
நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் உள்ள நவநீதேசுவரர் ஆலயம் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றது. இந்த தேவாரப்பதிகம் பெற்ற சிவ ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிப்பவர் தான் சிங்காரவேலர். வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தரும் சிங்காரவேலர் கந்த சஷ்டி எனும் ஆறு நாள் திருவிழாவில் சூரசம்ஹாரத்தின் முக்கிய நாயகனாக விளங்குகிறார்.
கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் சிக்கலில்தான் அன்னை சக்தி தேவியிடம் வேல் வாங்கி ஆசி பெற்று மறுநாள் சூரனை சம்ஹாரம் செய்கிறார். இந்தப் புகழ் பெற்ற வேல் வாங்கும் விழா இன்று சிக்கலில் நடைபெற உள்ளது.
இங்குள்ள வேல்நெடுங்கன்னி என்னும் அன்னை பராசக்தியிடம் சிங்காரவேலர் இன்று வணங்கி வேல் பெறுகிறார். அன்னை பராசக்தி தனது அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டி வேலாக உருமாற்றி சூரனை சம்ஹரிக்க மகனிடம் தருவாள். அந்த வேலை பெரும் தருணத்தில் சிங்காரவேலவரின் நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பி பெருகத்தொடங்கும். இது பேரதிசயமாக, முருகப்பெருமானின் அற்புதமாக எண்ணி பக்தர்கள் பரவசம் கொள்வார்கள். வேல் வாங்குவதற்கு முன்பு வியர்ப்பது இல்லை என்பது குறிப்பிடத்தகக்து.

இன்று கந்த சஷ்டியின் ஆறாம் நாள். முருகப்பெருமான் ஜயந்திநாதராக எழுந்தருள்வார். அவரைக் கண்டாலே நம் வினைகள் தீரும். மனம் தெளிவாகும். கந்த சஷ்டிவிரதம் இருப்பவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாள். கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்குக் காரியம் கைகூடுமே என்கிற பாடல் வரிகளைக் கேட்டிருப்போம். அப்படிக் கந்தனை எண்ணி வழிபட வேண்டிய அற்புதத் திருநாள் இன்று.
திருச்செந்தூரின் கடலோரத்தில் மட்டுமல்ல... எங்கெல்லாம் முருகன் கோயில்கொண்டு அருள்கிறானோ (திருத்தணி தவிர) அங்கெல்லாம் இன்று சூரசம்ஹாரம் நடைபெறும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் அதைத் தரிசனம் செய்யுங்கள். முருகன் அருள் முன்னின்று உங்களைக் காக்கும்.




















