`ராகுல் காந்திக்காக செலவு செய்த பணமே இன்னும் வரவில்லை!’ – ஆடியோவில் வெடித்த மகளி...
கரப்பான்பூச்சி போராட்டத்தில் த.வெ.க - தி.மு.க-வின் கண்ணாமூச்சி ஆட்டம் - வெளிப்பட்ட பா.ஜ.க ‘பாசம்‘!
தலைநகர் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தை மட்டுமல்ல; தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகள் எங்கே நிற்கின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான த.வெ.க-வும், எதிர்க்கட்சியான தி.மு.க-வும், இந்தப் போராட்டத்தை எப்படி அணுகின என்பது குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளாக தி.மு.க தனது அரசியலின் மையமாக பா.ஜ.க எதிர்ப்பை நிலைநிறுத்தியிருந்தது. அந்த அரசியல்தான் மக்களவைத் தேர்தல்களிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க-வுக்கு பலன் கொடுத்தது. மேலும், கூட்டணிக் கட்சிகளை ஒரே குடையின் கீழ் பா.ஜ.க எதிர்ப்புதான் வைத்திருந்தது. ஆனால், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அந்த அரசியல் சமன்பாடுகள் மாறிவிட்டன. கூட்டணி சிதறியது. தற்போது, புதிய அரசியல் கணக்கீட்டை நோக்கி தி.மு.க நகரத் தொடங்கியிருக்கிறது.
தி.மு.க முன் இப்போது இருக்கும் சிக்கல் வேறு. மாநில த.வெ.க அரசை எதிர்ப்பதைப் போல, மத்திய பா.ஜ.க அரசையும் தீவிரமாக எதிர்த்து அரசியல் நடத்த முடியுமா என்ற கேள்வி தி.மு.க முன் இருக்கிறது. அப்படியான அரசியலை மேற்கொண்டால், தேவையற்ற பிரச்னைகள் வரும் என்று தி.மு.க யோசிக்கிறது. எனவே, மத்திய அரசுடன் நேரடி மோதலைத் தவிர்த்து, தேவையான இடங்களில் மட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் அணுகுமுறையை தற்போது தி.மு.க மேற்கொள்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

கரப்பான்பூச்சி போராட்டத்தின் தொடக்கத்தில் தி.மு.க-வின் ஆ.ராசா, டெல்லியில் போராட்டக்காரர்களைச் சந்தித்தார். பின்னர் தி.மு.க-வின் கனிமொழியும் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். ஆனால், காங்கிரஸ் தனியாக முன்னெடுத்த போராட்டங்களில், குறிப்பாக பிரதமர் இல்லம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்திலும், நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி நடவடிக்கைகளிலும் தி.மு.க விலகியே இருந்தது.
அதே நேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் முன்வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது, அந்த நோக்கம் எவ்வாறு தோல்வியடைந்தது என்பதைக் கூறி விரிவான அறிக்கையை வெளியிட்டார். அவருடைய வாதம் "நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு" என்பதுதான். ஆனால், கரப்பாம்பூச்சி போராட்டத்தின் மையக் கோரிக்கை வேறாக இருந்தது.
போராட்டத் தலைவர்கள் தொடக்கம் முதல் ஒரே கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" என்பதுதான் அந்தக் கோரிக்கை. டெல்லியிலும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் மோடி காணொளி வாயிலாக சில செய்திகளை போராட்டக்காரர்களுக்கு தெரிவித்தார். அதாவது, ‘வினாத்தாள் கசிவுக்கு எதிராக பல சீர்திருத்தங்கள் செய்வோம், குற்றவாளிகளை தண்டிப்போம்’ என்று அவர் உறுதியளித்தார்.
அதன் பிறகும், "முதலில் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; அதற்குப் பிறகுதான் பேச்சுவார்த்தை" என்ற நிலைப்பாட்டிலேயே போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர். தி.மு.க-வோ, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலுவாக முன்வைக்காமல், நீட் ஒழிப்பையே அரசியல் முழக்கமாக முன்வைத்தது. ஆனால், நீட் ரத்து என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் விவகாரம். தற்போதைய அரசியல் சூழலில் அதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. போராட்டக்காரர்களோ, இதுவரை நடந்த நிர்வாகத் தோல்விகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தினார்கள்.

ஆனால், 22 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., அந்தக் கோரிக்கையைத் தனது அரசியல் மையமாக மாற்றவில்லை. மாறாக, நீட் ஒழிப்பை மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தியது. அதேபோல, போலீஸ் அராஜகத்தைக் கண்டிப்பதில், இந்தியா கூட்டணியின் மற்ற கட்சிகள் காட்டிய தீவிரத்தை தி.மு.க காண்பிக்கவில்லை.
இதையெல்லாம் பார்க்கும்போது, 2029-ஐ நோக்கிய தனது அரசியல் பயணத்தை தி.மு.க ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலால் கிடைக்க வேண்டிய அரசியல் பலன்கள் அனைத்தும் தி.மு.க-வுக்குக் கிடைத்துவிட்டன. இனி, அடுத்த மூன்று ஆண்டுகள் மத்திய அரசுடன் மோதலைத் தவிர்த்து, கட்சியை அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் எண்ணமாக இருக்கிறது என்று தெரிகிறது.
மத்திய அரசை நேரடியாகச் சிக்கலில் ஆழ்த்தக்கூடிய பிரச்னைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் தி.மு.க அணுகுகிறது. இதன் பின்னணியில் இன்னொரு அரசியல் கணக்கும் பேசப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம். அப்போது, மத்திய அமைச்சரவையில் தி.மு.க இடம்பெறுவது தொடர்பான பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் இருக்கின்றன. ஆனால், அது தொடர்பாக அதிகாரபூர்வமான பேச்சுகள் எங்கும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1999-ல் பா.ஜ.க கூட்டணியில் இருந்த தி.மு-க., 2004-ல் அரசியல் சூழலுக்கேற்ப கூட்டணியை மாற்றியது. அதுபோல, 2029 மக்களவைத் தேர்தலையொட்டி, அதற்கேற்ற முடிவை எடுக்கலாம் என்ற அம்சமும் விவாதங்களில் இடம்பெறுகிறது. ஒருவேளை, 2029 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க-வின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம். அந்த வாக்குகள் த.வெ.க-வுக்கு நகரும் அபாயமும் இருக்கிறது.
அதே நேரம், 2029 தேர்தல் வரும் வரையில், மத்திய அரசை தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள வேண்டாம்; கட்சியையும் அமைப்பையும் பாதுகாக்க வேண்டும்; மாநிலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வராதபடி அரசியல் சமநிலையைப் பேண வேண்டும் என்பதே தி.மு.க-வின் தற்போதைய அணுகுமுறையாக விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.
அதனால்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில்கூட. பா.ஜ.க-வை நேரடியாக அரசியல் நெருக்கடிக்குள் தள்ளும் கோரிக்கைகளை விட, தன்னுடைய பழைய அரசியல் முழக்கங்களையே தி.மு.க முன்னிறுத்தியது.
கரப்பான்பூச்சி போராட்டத்தில் தி.மு.க எடுத்த அரசியல் அணுகுமுறை ஒரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது என்றால், த.வெ.க-வின் அணுகுமுறை இன்னொரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. "பா.ஜ.க எங்களின் கொள்கை எதிரி" என்று த.வெ.க ஆரம்பத்தில் அறிவித்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் வந்தபோது த.வெ.க-வின் குரல் மாறியது. "இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல; சட்டமன்றத் தேர்தல். எனவே, இங்கு பா.ஜ.க-வை முதன்மை எதிரியாகக் கருத வேண்டிய அவசியமில்லை" என்று த.வெ.க-வினர் கூறினார்கள்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் சூழல் முற்றிலுமாக மாறிவிட்டது. எதிர்பாராத வகையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகுதான், அந்த நிலைப்பாட்டின் நடைமுறைச் சிக்கல்களை த.வெ.க உணரத் தொடங்கியது. "பா.ஜ.க-வை கொள்கை எதிரி என்று அவசரப்பட்டு அறிவித்துவிட்டோமா?" என்று த.வெ.க இப்போது யோசிப்பதாகத் தெரிகிறது.
சட்டமன்றத்தில் த.வெ.க-வுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ் கட்சியை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்ட முடிவு சரியானதா, சிறிது காலம் காத்திருந்திருக்கலமோ என்று த.வெ.க பின்னர் யோசித்ததாகத் தெரிகிறது. ஏனென்றால், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு, மத்திய அரசுடன் மோதுவது சாதாரண விஷயம் அல்ல.மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு நிதி வேண்டும், புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு, நிர்வாகத்தில் தேவையற்ற சிக்கல்கள் உருவாக்கப்பட்டால் அதைச் சமாளிக்க வேண்டும். காவிரி உள்ளிட்ட மாநில உரிமைப் பிரச்னைகளில் மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவை. இந்தச் சிக்கல்களை எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு த.வெ.க உணரத் தொடங்கியது.
த.வெ.க-வைப் பொறுத்தளவில், ‘இந்தியா‘ கூட்டணியில் இடம்பெற தயங்குகிறது. பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டவும், த.வெ.க-வுக்கு தயக்கம் இருக்கிறது. த.வெ.க-வின் இந்தக் குழப்பம் கரப்பான்பூச்சி போராட்டத்தில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
மத்திய அரசின் சில திட்டங்களை ஏற்றுக்கொண்டது, சில சட்டங்களுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யாதது, ‘எங்களுக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை; சரியான நேரத்தில் எங்கள் கருத்தைச் சொல்வோம்’ என்ற பதில், துணைவேந்தர் தேர்வில் யு.ஜி.சி. பிரதிநிதிக்கு இடமளிப்பது போன்ற த.வெ.க-வின் நிலைப்பாடுகளை, பா.ஜ.க-வை தேவையில்லாமல் கோபப்படுத்த வேண்டாம் என்ற அரசியல் கணக்கின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
அதே நேரத்தில், மாநிலத்தின் நிலைமையும் ஆட்சியை எச்சரிக்கையாக நடத்த வைக்கிறது. காவிரி டெல்டாவில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. குடிநீருக்கே சிக்கல் உருவாகும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசுடன் நேரடி மோதலை உருவாக்க த.வெ.க விரும்பாது என்பதும் அரசியல் வட்டாரங்களின் கருத்தாக இருக்கிறது.

அதேபோல், தேசிய அரசியலிலும் முழுமையாக காங்கிரஸை விட்டு விலக முடியாத சூழல் இருக்கிறது. டெல்லியில் நடைபெறவுள்ள வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ள நிலையில், முதல்வர் விஜய்யும் கலந்துகொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆட்சிக்குத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கும் வரை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு த.வெ.க-வுக்கு தேவை. அதே நேரத்தில், எந்தச் சூழலிலும் பா.ஜ.க-வை நேரடியாகப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் த.வெ.க-வுக்கு இருக்கிறது. இப்படியாக, த.வெ.க-வின் அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது.
டெல்லி போராட்டத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை த.வெ.க கண்டித்தது. அது இயல்பான அரசியல் எதிர்வினை. அதே தீவிரத்துடன், சி.ஜே.பி போராட்டத்தின்போது நடைபெற்ற போலீஸ் அடக்குமுறைகளை த.வெ.க பெரிதாகக் கண்டிக்கவில்லை. போராட்டக்காரர்களின் பிரதானக் கோரிக்கையான "தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை த.வெ.க கண்டுகொள்ளவில்லை.
அதற்குப் பதிலாக, "நீட் ஒழிக்கப்பட வேண்டும்" என்ற வழக்கமான அரசியல் நிலைப்பாட்டையே மீண்டும் த.வெ.க முன்வைத்தது. இதில்தான் தி.மு.க-வுக்கும், த.வெ.க-வுக்கும் இடையே சுவாரஸ்யமான ஓர் ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது.

பா.ஜ.க-வைப் பொறுத்தளவில், த.வெ.க-வின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் அது உற்று கவனித்துக்கொண்டே இருக்கிறது. தி.மு.க-வைத் தோற்கடித்தது, கூட்டணி அரசியலைப் பலவீனப்படுத்தியது போன்ற த.வெ.க-வின் நடவடிக்கைகள் பா.ஜ.க-வை மகிழ்வூட்டலாம். ஆனால், நேரடியாக பா.ஜ.க-வை எதிர்த்து தீவிரமான அரசியல் நிலைப்பாடு எடுத்தால் மட்டுமே, மத்திய ஆட்சியின் முழு அரசியல் அழுத்தமும் வெளிப்படும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் சொற்ப செல்வாக்கே பா.ஜ.க-வுக்கு இருக்கிறது என்றாலும், மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பதாலும், மத்திய விசாரணை அமைப்புகளும், நிர்வாக அதிகாரங்களும் தன் கையில் இருப்பதாலும், த.வெ.க., தி.மு.க என்ற தமிழ்நாட்டின் இரு பெரு அரசியல் கட்சிகளின் அரசியல் நகர்வுகளில் பெரும் தாக்கத்தை அந்தக் கட்சி ஏற்படுத்துகிறது. இன்றைய இந்திய அரசியலின் விசித்திரமான முரணாக இது பார்க்கப்படுகிறது.
















