கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் ப...
கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: "தமிழக அரசு அதிகாரப்பூர்வ கண்டனம்கூட தெரிவிக்கவில்லை" - உதயநிதி
கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்டு ஷாக்யா வனப்பகுதி உள்ளது.
அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கிற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாகத் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
அதே நேரம் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ``இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்... எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ``கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.
த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின்போது, கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்குப் பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















