'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
கள்ளக்குறிச்சி: உதவாத `உலர்களங்கள்' - விலை போகாத பயிர்கள்... குமுறும் விவசாயிகள்!
உலர்களம்
உலர்களம் என்பது ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் தங்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காக இருக்கிறது.
ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் உலர்களத்தின் பரவலான வெளியை சார்ந்துதான், அந்த கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் உழைப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அந்த பத்து ‘சென்ட்’ நிலப்பரப்பின் சுற்றுவட்ட கட்டடத்தின் மோசமான நிலையால், பல விவசாயிகளின் உழைப்பு இன்று வீணாய் கரைகிறது.

ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு மோசமான உலர்களத்தால் இன்றும் பல விவசாயிகள் தங்களின் சாகுபடி பயிர்களை பக்கத்து கிராமத்து உலர்களத்திற்கு எடுத்துச் சென்று, கால்கடுக்க காத்திருந்து உலரவைத்து, பயிர் காய்ந்தும் காயாமலும் வரிசையில் நிற்கும் அடுத்த விவசாயிக்காக பயிர்களை மூட்டை பிடித்து உரிய விலைக்கு விற்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.
உலர்களம் என்பது என்ன? அதற்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்ன சம்பந்தம்?
அறுவடை எல்லாம் செய்த பின் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னையே, இந்த களம்! ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒன்றோ, இரண்டோ இந்த உலர்களங்கள் இருக்கவேண்டும் என்பது அவசியம். ஒரு விவசாயி தன் மொத்த உழைப்பையும் நிலத்தில் போட்டு பொன்னாக விளைவிக்கிறார்.
ஆனால் அந்த பொன்னுக்கான விலை அவரால் இதுதான், இவ்வளவுதான் என்று இன்னமும் சரியாகச் சொல்ல முடிவதில்லை. இந்த நிர்ணய விலைக்குப் பின் ஒளிந்திருக்கும் ரகசியமே இந்த உலர்களம்.
ஆம்! கிராமப்புறங்களில் விளையும் நெல், கம்பு, எள், மக்காச்சோளம், சோளம் போன்ற தானிய வகைகளும், உளுந்து, பச்சை, மொச்சை போன்ற பயிர் வகைகளும் அறுவடைக்கு பின் உலர வைக்கவே இந்த உலர்களம் பயன்படுகிறது. விவசாயிகளின் இந்த அறுவடை பயிர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு காய்ந்து உலர்த்தப்பட்டு சாகுபடி ஆகிறதோ அதை வைத்தே அவற்றின் விலை நிர்ணயம் ஆகிறது என்பதே உண்மையின் உச்சம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசராம்பட்டு எனும் கிராமத்தின் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து தகவலறிந்து நேரில் சென்று விசாரித்தோம்.
இங்கு மட்டும்தான் இந்தப் பிரச்னை என்று கருதினால் அது தவறு. கிராமபுரங்கள் என்றாலே இந்த பிரச்னையில் வாழ்ந்து பழகிப்போன விவசாயிகள், வெளியில் இதைச் சொல்லி என்ன நடக்கப்போகிறது என்று கைவிட்ட இடங்களும் எத்தனையோ இருக்கின்றன.

இந்த உலர்களமானது, பரவலான வெளியையும், தரமான சுற்றுச்சுவர் கட்டமைப்பும் எல்லாவற்றிற்கும் மேல் சமதள மைதானம் போல் இருக்க வேண்டும். ஆனால் ஆண்டுகளின் ஓட்டத்தில் சிக்கி தரமற்ற பரவலான வெளியாய் இப்போது கிடக்கிறது. இதில் கம்போ, உளுந்தோ, எள்ளோ, சோளமோ ஏன், நம் அத்தியாவசிய உணவான நெற்பயிர் முதற்கொண்டு எதையுமே இதில் காயவைக்க முடிவதில்லை. இந்த உலர்களத்தின் நிலையே இதற்கெல்லாம் காரணமாக அமைகிறது.
பயிர் காஞ்சா என்ன? காயலனா என்ன?
`அது எப்படி இருந்தாலும் விற்பனை ஆகப் போகிறது. இதில் என்ன பிரச்னை?' என்ற கேள்விக்கு விடை கொடுத்து நம்மிடம் பேசிய தொடங்கியவர்கள், ``அப்படியில்லை தம்பி, இப்பல்லாம் எல்லாமே மாறிடிச்சி. ஒரு விவசாயி தான் கிட்ட இருக்க மொத்த காசையும் நிலத்துல போட்டு ஐஞ்சாறு மாசம் அதுக்கு என்னன்ன வேணும்னு பாத்து பாத்து செய்றான்! ஏக்கருக்கு குறைஞ்சபட்சம் இருபதுல இருந்து இருபத்தி ஐந்து ஆயிரம் செலவு செஞ்சு பயிரு வளத்து அறுவடை பண்ணா நீங்க நினைக்குற மாதிரிலாம் லாபம் ஒன்னும் எங்களுக்கு வந்துடுறது இல்லைங்க.
அறுவடை பண்ண பயிர நல்லா காயவச்சி, தரம் பிரிச்சி கம்டிக்கு எடுத்துட்டுப் போனா ஏதோ நாளு காசு பாக்க முடியும்.
ஆனா, இங்க எங்களுக்கு பயிர காயவைக்கவோ, அத நல்லா உலரவிட்டு மூட்ட புடிக்கவோ தரமான உலர்களம் இல்லாதது பெரும் பிரச்னையா இருக்குங்க.
அதனாலேயே அறுவடையானதுமே நேரா கம்டிக்கு கொண்டுபோயி பயிர வந்தவிலைக்குன்னு வித்துடுறோம். இதனாலயே எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுதுங்க. நாங்க போடுற அதே பயிருதா இன்னொருத்தரும் அங்க போடுறாரு. ஆனா எங்க பயிரு இருநூறு ரூவான்னா அவுங்க பயிரு நானூறு ரூவா! காரணம் பயிரு சரியா காயாம இருக்குறது.

ஏக்கருக்கு நாப்பது மூட்ட பயிரு வருதுன்னா, மூனு ஏக்கர் பயிர காயவைக்குற அளவுக்கு எங்க வீட்டு மாடி ஒன்னும் அவ்வளவு பெருசு இல்லைங்க. இப்போலாம் ரோட்டில் தான் தினம் தினம் பயிர்களை காயவைக்கிறோம். சாலையோரமும் தார்பாய்கள் வீச்சும் ஏதோ சில சமயங்கள்ல காயவைக்க முடியுது. ஆனா எல்லா நேரத்துலயும் அது சாத்தியப்படுறது இல்ல.
சிறுதானியங்கள் முதல் பயிர் வகைகள் வரை நிலத்தில் விளையும் எல்லாத்தையும் இதுலதான் காயவைப்போம்.
நெல், கம்பு, சோளம், எள்ளு போன்ற தானியங்களும் உளுந்து, பச்சை, தட்டை, வேர்கடலை போன்ற பயிர்களும் தான் இங்கு அறுவடையாகும், நிலபயிர்கள்.
இப்படி இருக்க... இந்த உலர்களமானது சமதளமாகவும், ஒழுங்கான பரப்பளவும் இல்லாததால அளவில் கொஞ்சம் பெரிதா இருக்கும் சோளம் மட்டுமே இப்போது இங்கு உலர வைக்கிறோம். அதையும் கொஞ்சம் சிரமமாகவே மீண்டும் மூட்டை பிடிக்கிறோம்.
உலர்களத்தில் இருக்கும் பெரிய பெரிய விரிசல்களும், தளத்தின் குழிகளுமே இதுக்குக் காரணம். இந்த ஊர்ல ரெண்டு களங்கள் இருந்தும், விவசாயிங்க பயன்படுத்துறதுக்கு உகந்ததா இல்ல.
கிட்டத்தட்ட 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் களம், இப்போ பயன்படுத்த முடியாத நிலையில இருக்கு. ரெண்டாவது உலர்களம் ஒன்னு அமைச்சாங்க... ஆனா குடியிருப்பை ஒட்டி கட்டியிருக்குறதால, மதியம் மூணு மணிக்கு மேல வீட்டு நிழல் வந்துரும்.

இப்படி ஒண்ணுக்கு ரெண்டா கட்டப்பட்டு இருக்கும் இந்த களங்கள் ஊருக்குள் இருந்தும் வீணாய் கெடக்குது. இதே பிரச்னைதான் சுற்றுவட்ட கிராமங்களிலும் நிலவுது.
ரெண்டு வருஷமா இந்தப் பிரச்னையைப் பத்தி, அதிகாரிங்க கிட்ட சொல்ல்லிக்கிட்டே தான் இருக்குறோம். `பாத்துக்கலாம், செஞ்சுடலாம், அடுத்து அந்த வேல தான்'.... இப்படி சொல்லி சமாளிக்குறாங்களே தவிர, தேவையான விஷயங்கள் எதுவுமே செய்யல" என்றனர் விரக்தியுடன்.
விவசாயிகளின் இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு வேண்டும் என்பது அந்த ஊர்மக்களின் கோரிக்கையாக இருக்கிறது!

















