கள்ளக்குறிச்சி: `என் ஊர்ல நீ எப்படி வேலை செய்யலாம்?’ - பெண் VAO மீது சாணத்தை ஊற்றி தாக்கிய உதவியாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் சங்கீதா என்பவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சங்கீதா அதே ஊர் என்பதாலும், ஆளும் கட்சியின் பின்னணியைக் கொண்டவர் என்பதாலும் அலுவலகத்துக்கு சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. வி.ஏ.ஓ என்ற முறையில் தமிழரசி அது குறித்து சங்கீதாவிடம் கேட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்திருக்கிறது. இந்த நிலையில்தான் 2024 டிசம்பர் 16-ம் தேதி மாலை, வி.ஏ.ஓ தமிழரசி அலுவலகத்துக்குள் இருக்கும்போதே அவரை உள்ளே வைத்துப் பூட்டினார் சங்கீதா.
அப்போது அலுவலகத்திற்குள் இருந்த வி.ஏ.ஓ தமிழரசி, சங்கீதா புறப்பட்டுச் செல்வதை எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. வி.ஏ.ஓ தமிழரசி எடுத்த அந்த வீடியோவில், அலுவலகத்துக்கு வெளியே தனது வண்டியை நோக்கி வருகிறார் சங்கீதா. அதை ஜன்னல் வழியாக பார்த்து வீடியோ எடுக்கும் தமிழரசி, `ஆபீசை பூட்டிட்டு எங்கம்மா போற…? ஒரு ஆபீசரை உள்ள வச்சி பூட்டிட்டு போறது எந்த விதத்தில் நியாயம்மா ? இந்த வீடியோவை தாசில்தாருக்கே அனுப்பி வச்சி, உன்மேல சிவியரா ஆக்ஷன் எடுக்கச் சொல்வேன்மா. தேவையில்லாத வேலையை பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஆபீசை திறங்க. என்னது மூடுடி வாயையா…?’ என்று கேட்கிறார்.
ஆனால் இவை எதையும் கண்டுகொள்ளாத சங்கீதா, தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு நிதானமாக அங்கிருந்து சென்றுவிட்டார். சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் சங்கீதா. அந்த நடவடிக்கையால் வி.ஏ.ஓ தமிழரசி மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் சங்கீதா. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்த தமிழரசி, அலுவலகப் பணியில் இருந்திருக்கிறார். அப்போது அலுவலகத்துக்குள் நுழைந்த சங்கீதா, தமிழரசியைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டியிருக்கிரார். தொடர்ந்து, தமிழரசி மீது கரைத்து வைத்த மாட்டு சாணத்தை ஊற்றிய சங்கீதா, ``இது என்னோட ஊர். எவ்ளோ தைரியம் இருந்தா என் மேலையே புகார் குடுப்ப?
என்னை பகைச்சிக்கிட்டு என் ஊர்லயே நீ வேலை செய்வியா?” என்று ஆபாச வார்த்தைகளுடன் திட்டித் தீர்த்திருக்கிறார். அத்துடன் நிற்காமல் தமிழரசியின் தலை முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, கடுமையாக தாக்கியிருக்கிறார். அதைப் பார்த்து அங்கு ஓடி பொதுமக்கள், சங்கீதாவிடம் இருந்து தமிழரசியை மீட்டிருக்கின்றனர். அதையடுத்து கிராம மக்களின் உதவியுடன் கச்சிராப்பாளையம் காவல் நிலையம் சென்ற தமிழரசி, தன் மீது சாணத்தை ஊற்றி ஆபாசமாக திட்டிய கிராம உதவியாளர் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தார். தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழரசி, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.