Nvidia: களமிறங்கிய வெள்ளை மாளிகை; அமெரிக்க நலனா... ட்ரம்ப் நலனா? Jensen Huang Co...
கள்ளக்குறிச்சி: "புகாரே வரலன்னு சொன்னீங்களே, 116 நாளா என்ன செஞ்சீங்க?" - வெடிக்கும் அரசியல் கட்சிகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், 'இதுநாள்வரை எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த முதல்வர், அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாயவேண்டும்; சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என அடுத்தடுத்த அதிரடி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அம்மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பகீர் புகார் எழுந்தது. ஆனால், இப்புகாரை தொடர்ந்து மறுத்துவந்த த.வெ.க அமைச்சர்கள், 'இது சமூக ஊடகங்களில் பரவும் பொய்ப் புகார்', 'மாவட்ட ஆட்சியரே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றெல்லாம் சமாளித்து வந்தனர். த.வெ.க கூட்டணிக் கட்சியினரோ, இன்னும் ஒருபடி மேலேபோய் 'எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்' என்று முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஜூலை மாதமே பெண் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இத்தனை நாட்களாக த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காததோடு, அவரைப் பாதுகாக்கும் விதமாக செயல்பட்டு வந்த த.வெ.க அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து பா.ஜ.க மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் நம்மிடம் பேசும்போது,
''அருள் விக்னேஷ் மீதான புகார்கள் ஏறக்குறைய ஒரு மாதமாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால், த.வெ.க அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று கூறி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். புகாரின் உண்மைத்தன்மையை விசாரிக்காமல், மக்களை முட்டாளாக்கும் வகையில் பேசியதுடன், சமூக வலைதளங்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரையும் தரக்குறைவாக விமர்சிக்கச் செய்தனர்.
நீதிமன்றத்தில்கூட அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்தியன், புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்திருக்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பொதுமேடையில் பேசிய பிறகுதான், மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்த விவகாரம் தெரிய வந்தது. தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தபோதுகூட அரசு உரிய அக்கறை காட்டவில்லை. இப்போதும் இந்த அரசு நேர்மையாக விசாரணை நடத்துமா என்ற சந்தேகம் இருக்கிறது.
ஏற்கெனவே பெரும்பான்மை இல்லாத அரசு என்பதால், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கலாம். எனவே, இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசியும், தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விமர்சித்தும் ஆட்சிக்கு வந்த முதலமைச்சரின் ஆட்சியில், கட்சியினரைத் தாண்டி சட்டமன்ற உறுப்பினர்களே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது வெட்கக்கேடானது. தி.மு.க ஆட்சியைவிட ஒருபடி மேலே சென்று, 'நாங்கள் தி.மு.க 2.0 அல்ல; அதைவிட மோசமானவர்கள்' என்பதைப் போல இந்த ஆட்சி இருக்கிறது.

முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தன்னைத் திருத்திக்கொள்ள ஒரே வழி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவதும்தான். ஒரு குற்றவாளியைக் காப்பாற்ற நினைப்பவர்களும் குற்றவாளிகள்தான். எனவே, அவரைக் காப்பாற்ற முயன்ற அமைச்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்'' என்றார் காட்டமாக.
இதையடுத்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவிடம் இவ்விவகாரம் குறித்து பேசியபோது,
''ஒரு மாவட்ட ஆட்சியரே தனக்குக் கீழே பணியாற்றும் எஸ்.பி-யிடம் புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது இந்த ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் காட்டுகிறது.

அருள் விக்னேஷ் மீது தற்போது பி.என்.எஸ் சட்டத்தின் 75(1), 75(4), 78(2), 132 ஆகிய பிரிவுகள் மற்றும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 4-வது பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், நேற்றுவரை நீதிமன்றத்தில், 'புகாரே வரவில்லை; புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?' என்றெல்லாம் அரசு தரப்பில் கூறப்பட்டது. அமைச்சர் நிர்மல் குமார், ராஜ்மோகன், அருண்ராஜ் உள்ளிட்டோர் சம்பவமே நடக்கவில்லை என்று கூறி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு வக்காலத்து வாங்கினார்கள்.
இன்றைய விசாரணையில்தான் ஜூலை மாதமே புகார் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஜூலை மாதம் முதல் கடந்த 116 நாள்களாக நடந்த சம்பவங்கள் முதலமைச்சருக்கும் தலைமைச் செயலாளருக்கும் தெரிந்திருந்தும், தங்களது எம்.எல்.ஏ-வைக் காப்பாற்றுவதற்காக ஒரு மாவட்ட ஆட்சியரையே பலிகொடுக்க நினைத்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் படுகொலை செய்வதற்குச் சமம்.
இந்த வழக்கை எஸ்.பி அளவிலான அதிகாரி விசாரிக்கக் கூடாது என்றும், ஐ.ஜி அளவிலான அதிகாரி விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஏற்கெனவே புகாரை மூடி மறைத்ததாகக் குற்றம்சாட்டப்படும் இந்த அரசின் கீழ் விசாரணை எப்படி நியாயமாக நடைபெறும்? எனவே, வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலோ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ விசாரணை நடைபெற வேண்டும்.
இது தனிப்பட்ட ஒரு சம்பவம் மட்டுமல்ல. த.வெ.க-வைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், சேலம் மணிகண்டன் உள்ளிட்டோர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இவற்றில் த.வெ.க அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற நினைக்கும் தலைமையே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவதுடன், குற்றம்சாட்டப்பட்டவரைக் காப்பாற்ற முயன்ற அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்றார் அழுத்தமாக.

இவ்விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க பிரமுகர் தொடுத்த வழக்கையடுத்தே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரையிடம் பேசியபோது, "கடந்த ஜூலை மாதமே புகார் கொடுக்கப்பட்டிருந்தும் ஆட்சியாளர்கள் அனைவரும் புகார் எதுவும் வரவில்லை என இதுநாள் வரை கூறிவந்துள்ளனர். இந்திய அரசியலமைப்பின் கீழ் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் சிலரே, இப்படி உண்மைக்கு மாறான தகவலைக் கூறிவந்திருப்பது தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியையே மீறிய செயல். அடுத்ததாக, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வை முதல்வர் அண்மையில்கூட நேரில் சந்தித்திருக்கிறார். இப்படி ஆட்சியாளர்கள் அனைவருமே சட்டத்தை மீறி செயல்பட்டிருப்பதால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
'புகாரே வரவில்லை' என்று உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறிவந்த ஆட்சியாளர்களின் கீழ் நியாயமான விசாரணை நடைபெறுமா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி. எனவே வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். தற்போது இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், விரைவில் நல்லதொரு தீர்வு கிடைத்து பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.













