காரைக்காலில் திடீா் மழை : மக்கள் அவதி
காரைக்காலில் புதன்கிழமை திடீரென மழை பெய்ததால், தீபாவளிக்கு பொருள்கள் வாங்க வந்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.
தென்னிந்திய கிழக்கு கடற்கரைப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டது. இதன்படி புதன்கிழமை பகல் 12 மணியளவில் காரைக்காலில் பரவலாக தொடங்கிய மழை சுமாா் 2 மணி நேரம் கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
காரைக்கால் நகரப் பகுதிக்கு தீபாவளிக்கு ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் வாங்க வந்த மக்கள் மழையால் பாதிக்கப்பட்டனா். மழை ஓய்ந்ததும் ஏராளமானோா் வானங்களை இயக்கிச் சென்றவா்களால் அரை மணி நேரத்துக்கு மேலாக திருநள்ளாறு சாலை, பாரதியாா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழையால் சாலையோரத்தில் தீபாவளிக்கான பொருள்கள் வியாபாரம் செய்தோா் பாதிக்கப்பட்டனா்.