Gold Rate: ரூ.1 லட்சத்திற்கு கீழிறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் ...
Doctor Vikatan: நரக வேதனையைத் தரும் வறட்டு இருமல்,தொண்டைப்புண்... இருமலை நிறுத்த வழி உண்டா?
Doctor Vikatan: என் வயது 55. எனக்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான வறட்டு இருமல் இருக்கிறது. பாட்டில், பாட்டிலாக இருமல் மருந்து குடித்தும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி, தொண்டை புண்ணானதுதான் மிச்சம். இருமல் அடங்கும்வரை நரக வேதனையை அனுபவிக்கிறேன். இதற்கு என்னதான் காரணம்... இந்த இருமலை நிறுத்த என்னதான் வழி?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

இருமல் எதனால் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான சிகிச்சையை முடிவு செய்ய முடியும். வைரஸ் தொற்றால் ஏற்பட்டதா, பாக்டீரியா தொற்றால் ஏற்பட்டதா, பிற காரணங்களால் ஏற்பட்டதா என்று பார்க்க வேண்டியது அவசியம்.
வறட்டு இருமலுக்கு மிக முக்கியமான காரணம் வைரஸ் தொற்றுதான். இந்தத் தொற்றால் ஏற்படும் இருமலானது, பொதுவாக இரண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். ஒருவேளை தொற்று மிகவும் தீவிரமாக இருந்தால், வறட்டு இருமலானது நான்கு வாரங்கள் வரைகூட நீடிக்கலாம். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் வரும் இருமலுக்கு, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் 'Cough Suppressants' மருந்துகள் எடுத்தால் போதும். தொடர்ந்து இருமுவதால் தொண்டையில் எரிச்சலும், அசௌகர்யமும் ஏற்படலாம். இதைத் தவிர்க்கவே இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இருமல், பெரும்பாலும் வறட்டு இருமலை ஏற்படுத்தாது. இதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.

சில நேரங்களில் பாக்டீரியா தொற்று குணமானாலும், அதன் பிறகு ஒருவித வறட்டு இருமல் சில நாள்கள் இருக்கலாம். அதைக் குறைக்க Cough Suppressants மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் (Anti-histamines) மருந்துகள் பரிந்துரைக்கப்படும். தொண்டை எரிச்சலையும் அதனால் ஏற்படும் அவதியையும் குறைக்கவே, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
வறட்டு இருமல் ஏற்பட வேறு காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஒவ்வாமை (Allergies), மூக்கடைப்பு (Post-nasal drip), நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி (Gastritis), மற்றும் ஆஸ்துமா போன்றவையும் வறட்டு இருமலை உண்டாக்கலாம். இருமல் மருந்துகள் தற்காலிக நிவாரணமாக மட்டுமே செயல்படும். இருமல் எதனால் ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணத்தைக் (Underlying cause) கண்டறிந்து அதற்குச் சிகிச்சை அளிப்பது மிக அவசியம். எனவே, காரணம் அறியாமல் மருந்துகள் எடுத்தால் இருமல் கட்டுப்படாது. நீங்களாக மருந்து வாங்கிப் பயன்படுத்துவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம், கவனம்!
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















