Doctor Vikatan: நகங்களைப் பாதிக்குமா நெயில் ஆர்ட்?
Doctor Vikatan: சமீபகாலமாக இளம் பெண்கள் மத்தியில் நெயில் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமாகி வருகிறது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. நெயில் ஆர்ட் செய்துகொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

நெயில் ஆர்ட், ஜெல் நெயில் பாலிஷ் போல இன்று பலவிதமான நக அலங்காரங்கள் டிரெண்டாக உள்ளன. சராசரியாக 10 பேரில் 8 பேருக்கு இதுபோன்று நகங்களை அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் உள்ளதையும் பார்க்கிறோம்.
அதிலும் பலர் ஜெல் நெயில் பாலிஷை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், சாதாரணமான நெயில் பாலிஷ் விரைவில் உரிந்து வந்துவிடும். மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஜெல் நெயில் பாலிஷ், மாதக்கணக்கில் அப்படியே இருக்கும். இதனால்தான் பலருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் பிடித்தமானதாக உள்ளது.
இன்று அதிகமானோர் நெயில் ஆர்ட்டை விரும்பி செய்துகொள்வதால், அதை முற்றிலும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், முடிந்தவரை இதில் பாதுகாப்பு நடவடிக்கையாக சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.
நகங்களின் மீது பல அடுக்குகளாக இந்த அலங்காரங்கள் செய்யப்படும். பிறகு மின் விளக்கின் கீழ் காயவைத்து, அந்த டிசைனை திடமானதாக மாற்ற வேண்டும். இதற்காக புற ஊதாக்கதிர் விளக்குகளை பார்லர்களில் பயன்படுத்துவார்கள்.
அப்போதுதான் அந்த ஆர்ட்டானது நீண்ட நாள்களுக்கு நகங்களில் அப்படியே இருக்கும். இந்த முறை நகங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்தால் புற்றுநோய் வரை வரும் ஆபத்து இருக்கிறது.
இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, அடிக்கடி நெயில் ஆர்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்துக்குப் பதிலாக, எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்துகிற பார்லர்களில் நக அலங்காரம் செய்துகொள்ளலாம். அலங்காரத்துக்கான பாலிஷ் தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தினசரி வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளாமல் ஏதாவது பண்டிகைகள், சுப நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றின்போது நெயில் ஆர்ட் செய்துகொள்ளலாம். நெயில் ஆர்ட் செய்துகொள்வதைப் போலவே, அதை முறையாக அகற்றுவதும் முக்கியம்.
நகமானது சேதமடைவது, காகிதம் போல கிழிவது போன்ற சிக்கல்களும் இருக்கும். அதனால் நெயில் ஆர்ட் செய்துகொண்டவர்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை, குறிப்பாக... புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது முக்கியம்.
பயோட்டின் ஊட்டச்சத்து கூந்தலுக்கு உதவாது. ஆனால், நகங்களுக்குப் பெரிய ஆதாரமாக அமையும்.
அதேபோல நெயில் ஆர்ட் செய்யும்போது நகக்கண்ணான கியூட்டிக்கிளைக் குத்தி, குடைந்து சேதப்படுத்திவிடக் கூடாது.
நகத்தின் பாதுகாப்புக்காகவே நகக்கண்கள் இருக்கின்றன. அதை வடிவமைக்கிறேன் என்று பிரச்னையை உருவாக்கிவிடக் கூடாது. இந்த கியூட்டிக்கிளை சேதப்படுத்துவதால்தான் பூஞ்சைத்தொற்று உருவாகிறது.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், கவனமாக நெயில் ஆர்ட் செய்துகொண்டால் நகங்கள் அழகாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















