உன்னாவ் வழக்கு: ``நீதிபதி முன்பே இறந்திருப்பேன்" - குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து...
உன்னாவ் வழக்கு: ``நீதிபதி முன்பே இறந்திருப்பேன்" - குற்றவாளிக்கு ஜாமீன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாப் பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இவரை எதிர்த்து சிறுமியின் குடும்பம் காவல் நிலையத்தை நாடியது. அந்த எஃப்.ஐ.ஆர்-ல் குற்றவாளியின் பெயர் சேர்க்கவில்லை. அதைத் தொடர்ந்து நீதி கேட்டுச் சென்ற சிறுமியின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டார்.
மேலும், ஆயுதம் வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் சித்தப்பா, 9 வருடத்துக்கு முன்னால் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவை எல்லாவற்றையும் கடந்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுதர வேண்டும் என வாக்குமூலம் கொடுக்க சிறுமியும், சிறுமியின் சித்திகள் இருவர், வழக்கறிஞர்கள் இருவர் சென்ற கார் மீது, நம்பர் பிளேட்டில் கருப்பு மை பூசப்பட்ட லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமியின் சித்திகள் உயிரிழந்தனர்.
நீதிமன்றப் பாதுகாப்பு வேண்டி அனுப்பப்பட்ட கடிதம் நீதிமன்றத்துக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வது தடுக்கப்பட்டது. இத்தனை துயரத்தையும் கடந்து போராடி உன்னாவ் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 2019-ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுதந்தார்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்டவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், குல்தீப் சிங் செங்கருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
இந்த ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் தாயும் இந்தியா கேட் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி காவல்துறை பிடிவாதமாக அங்கிருந்து அகற்றியது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அதில், ``பா.ஜ.க தலைவர் குல்தீப் சிங் செங்கரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனது குடும்பத்திற்கு மரண ஓசை போன்றது. எனக்குத் திருமணமாகி குழந்தைகள் மட்டும் இல்லையென்றால், நீதிபதி முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன். நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இப்போது குல்தீப் சிங் செங்கர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்றால், எனக்கு சிறையில்தான் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். என்னைத் துன்புறுத்தியவரின் சிறைத் தண்டனையை நானே அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன்.
எனக்கு நீதி கிடைக்க பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரும் உதவி செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பெண் என்பதால், எனது வலியைப் புரிந்துகொள்வார் என்பதால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கக் அனுமதி கோரினேன். ஆனால் இருவரும் எனது கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை.
இதுபோன்ற வழக்கில் குற்றவாளிக்கு பிணை கிடைத்தால், இந்த நாட்டின் மகள்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பார்கள்? எங்களைப் பொறுத்தவரை, இந்த பிணை முடிவு மரணத்திற்குச் சமமானது. பணம் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள், பணம் இல்லாதவர்கள் தோற்கிறார்கள்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி, ``நாடு ஒரு செயலிழந்த பொருளாதாரமாக மட்டுமல்லாமல், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு செயலிழந்த சமூகமாகவும் மாறி வருகிறது. குல்தீப் சிங் செங்கருக்கு பிணை வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயமாகும்.
இந்த நாள்களில் பாலியல் குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு, பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும் நிலையில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. இது என்ன வகையான நீதி?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
















