"'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புர...
'காலியாக இருக்கும் 43% இடங்கள்'- தனியார் லாபத்திற்காக அரசு கலை கல்லூரிகள் அழிக்கப்படுகிறதா?
தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மே 7-ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவுடன் தொடங்கியது.
ஜூன் 5 முதல் ஜூன் 18 வரை முதற்கட்டக் கலந்தாய்வு திட்டமிடப்பட்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு இடங்கள் நிரம்பாததால் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இடங்கள் நிரம்பாமல் போவதற்கானக் காரணம் என்ன?
தற்போது வரை 43,970 மாணவிகள், 27,514 மாணவர்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 57 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ள நிலையில், மீதமுள்ள 43 சதவிகித இடங்கள் இன்னும் காலியாகவே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தனியார் கல்லூரிகளை விட அரசு கல்லூரிகளில் சேர்க்கை தாமதமாவதுடன், இடங்களும் முழுமையாக நிரம்பாமல் போவதற்கான காரணம் என்ன? அரசு கல்லூரி சேர்க்கை நடைமுறைகளை மேம்படுத்த அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவை தொடர்புகொண்டு கேட்டோம்.
அரசு ஏன் முன்வர மறுக்கிறது?
நம்மிடம் விரிவாக பேசிய அவர், " அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு என்பது வெறும் நிலப்பரப்பும் கட்டடங்களும் மட்டுமல்ல; அங்கு போதுமான அளவில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கௌரவ அல்லது ஒப்பந்த விரிவுரையாளர்களாக நியமிக்கும்போது, அவர்களுக்குப் பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறது.
இதனால் அவர்களால் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற முடிவதில்லை. மாணவர்களுக்கும் அவர்கள் மீது நிலையான பிணைப்பு ஏற்படுவதில்லை. தகுதியுள்ள இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற அரசு ஏன் முன்வர மறுக்கிறது?

பராமரிப்பு வேண்டும்...
இதேபோல், ஆய்வக உதவியாளர்கள், நூலகர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இல்லாததால் கல்லூரியின் ஒட்டுமொத்தப் பராமரிப்பும் முடங்குகிறது.
உடற்கல்வி இயக்குநர்கள் இல்லாததால், மாணவர்களின் ஆற்றலை நல்வழியில் செலுத்த முடியாமல், அவர்கள் பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும், அனைத்து மாணவர்களுக்கும், மாற்றுப் பாலினத்தவருக்கும் தனித்தனியாகச் செயல்படக்கூடிய தூய்மையான கழிப்பறை வசதிகளும், கட்டிடப் பராமரிப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
திசை திருப்பும் AI பாடங்கள்
கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற அடிப்படை அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்று மாணவர்களிடம் ஏற்படுத்தப்படுவதில்லை.
போதிய பாடநூல்களோ, ஆய்வகங்களோ இல்லாத செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற சிறப்புப் பாடங்களை நோக்கி, வேலைவாய்ப்பு என்ற பெயரில் கல்வியியல் வழிகாட்டிகள் மாணவர்களைத் திசைதிருப்புகின்றனர்.
ஆனால், அடிப்படை கணிதம் இல்லாமல் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த முடியாது என்பதையும், உலகளாவிய முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பலர் தமிழகத்தின் சாதாரணக் கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் படித்தவர்களே என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

விளம்பரம் செய்ய வேண்டும்
தனியார் கல்லூரிகள் தங்களின் வலைதளங்களில் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் செய்யும்போது, அரசு கல்லூரிகள் தங்களிடம் உள்ள உண்மையான வசதிகளைக்கூட இணையதளங்களில் முறையாகத் தெரியப்படுத்துவதில்லை.
பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றே அரசு கல்லூரிகளுக்கான சேர்க்கை முறையையும், இணையதள விண்ணப்பப் பதிவையும் தொடங்க வேண்டியது அவசியமாகும்.
இன்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தக் கல்லூரிகளில் 35 சதவீதமே அரசு கல்லூரிகள். 30 சதவீதம் அரசு உதவிபெறும் கல்லூரிகள். ஆனால், இவற்றைவிட இருமடங்கு அதிகமாகத் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் பெருகிவிட்டன.
இதனால் தான் மாணவர்களின் சேர்க்கை குறைகிறது!
தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அரசு செயல்படுவதால்தான், அரசு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை குறைகிறது.
முன்பு அரசுப் பள்ளிகளின் அருகிலேயே தனியார் பள்ளிகளை அனுமதித்து, போதிய ஆசிரியர்களை நியமிக்காமல் அரசுப் பள்ளிகளை மூடிய அதே அழிவுச் செயல்திட்டத்தைத் தற்போது அரசு கல்லூரிகளிலும் கல்வித்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அவல நிலை உருவாகிவிடும்!
புதிய உயர்கல்வி அமைச்சர் பொறுப்பேற்றவுடன் அரசு கல்லூரிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள சவால்களையும் தேவைகளையும் கேட்டறிந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிர்வாகக் குறைபாடுகளையும் உள்கட்டமைப்புச் சிக்கல்களையும் உடனடியாகச் சீரமைக்கத் தவறினால், இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் அரசிடம் கல்லூரிகளே இல்லாத அவல நிலை உருவாகிவிடும்" என்று விரிவாக விளக்கினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
புதிய அரசு, பள்ளி கல்லூரிகளின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.!













