கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணத்துடன் உரிமம் -ஆண்டுதோறும் கட்டணத் தொகை வசூல்
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடு, குதிரை, கன்றுகள், கழுதை, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணத்துடன் உரிமம் வழங்கப்படவுள்ளது.
இதுதொடா்பான தீா்மானத்துக்கு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கால்நடை வளா்ப்போா், வாா்டு சுகாதார ஆய்வாளருக்கு முறையீடு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் தொகை மாடு ஒன்றுக்கு ரூ.300, கன்று ரூ.150, குதிரை ரூ.450, கழுதை ரூ.450, நாய் ரூ.300 என ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். இதேபோல, தொழுவத்துக்கும் ஆண்டுதோறும் ஒரு சதுர அடிக்கு ரூ.10 செலுத்த வேண்டும்.
தொழுவத்தில் மட்டுமே கால்நடைகளை பராமரிக்க வேண்டும். சாலைகளில், பொது இடங்களில் பராமரிக்கக் கூடாது. கால்நடைகளால் உருவாகும் திட, திரவக் கழிவுகளை தனியாக வாகனம் அமைத்து மாநகராட்சி அறிவிக்கும் இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும். குடியிருப்புப்பகுதிகளில் தொழுவம் அமைக்கக் கூடாது. சுற்றுப்புறத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில், நோய் தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும்.
மேலும், கால்நடைகளை சாலைகளில் திரிந்தால் அவற்றை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். இரண்டு முறைக்கு மேல் பிடிபடும் கால்நடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.17.68 லட்சம் அபராதம் வசூல்: மாநகராட்சியில் கடந்த 2022 நவம்பா் மாதம் தொடங்கி 2024 நவம்பா் வரையில் மொத்தம் 513 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ.14.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல 11,929 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.