சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்...
கிருஷ்ணகிரி ஸ்ரீசீனிவாச பெருமாள்: திருமணம் நடக்க வழிபடுங்கள்; வியக்கும் பக்தர்கள்
நம் பாரத தேசம் முழுமையும் விஷ்ணு ஆலயங்கள் பல உள்ளன. பழைமைவாய்ந்த ஆலயங்கள் பல இருந்தாலும் பல புதிய ஆலயங்களும் தோன்றி பக்தியை வளர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, ஐகுந்தம் கொத்தப்பள்ளி கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.
இந்தக் கோயில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பதியில் நடைபெறுவதைப்போலவே இந்த ஆலயத்திலும் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எனவே சுற்றுவட்டார மக்கள் இந்தக் கோயிலை, 'கிருஷ்ணகிரியின் திருப்பதி' என்றே போற்றுகிறார்கள். ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் திருப்பதி பெருமாளை வழிபட்ட திருப்தி கிடைப்பதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

27.8.2009 ம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சிவலிங்கம், பத்மாவதி தாயார், வராஹ சுவாமி, ஆஞ்சநேயர், சனி பகவான் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டாக்கப்பட்டு வழிபாடுகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆலயத்தின் சிறப்புகள் குறித்து அறங்காவலர் எம். நாகேந்திர சிங் கூறும்போது,
"இந்த ஆலயத்தில் வழிபாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மூலவரின் திருவடிகளைத் தொட்டு வணங்கலாம்" என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து கோயிலின் கணக்கீட்டாளர் ரஞ்சித் விரிவாகப் பேசினார்.
" 2007 - ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தயானந்த்சிங் மற்றும் ராதாபாய் தம்பதி இந்தக் கோயிலைக் கட்டிமுடிக்க உதவினர். இங்கே பெருமாளை தரிசித்தாலே மனம் குளிரும். அனைத்து பக்தர்களும் கருவறைக்குள் வந்து பெருமாளை தரிசனம் செய்வதோடு திருவடிகளைத் தொட்டு வணங்கவும் செய்யலாம் என்பதுதான் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு. மேலும் பெருமாளின் திருமுன்பாகத் திருமணம் செய்ய விரும்பும் பக்தர்கள் கருவறைக்குள்ளேயே திருமணமும் செய்ய அனுமதிக்கிறோம்.

இங்கே, புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்குத் திருக்கல்யாண வைபவமும் சிறப்புடன் நடைபெறும். மார்கழி மாதம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்" என்றார்.
இங்கே வரும் பக்தர்கள் பலரும் பெருமாள் திருவடிகளைத் தொட்டு வணங்கிய அனுபவத்தை சிலாகிக்கிறார்கள். 'திருவடிகளைத் தொட்டதுமே மனம் சிலிர்க்கிறது. மனதில் பாரங்கள் எல்லாம் கரைந்துபோகின்றன' என்கிறார்கள்.
இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குவதோடு குழந்தைச் செல்வமும் உடனே கிடைக்கிறது என்கிறார்கள். இதற்காக கிருஷ்ணகிரியைச் சுற்றி உள்ள ஊர்களில் இருந்தும் பெங்களூருவில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள்.

எப்படிச் செல்வது ?: கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை பிரதான சாலையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள சுந்தரம்பள்ளியை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் தெரியும் சாலையில் 6 கி.மீ பயணித்தால் ஐகுந்தம் தொக்கபள்ளியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலை அடையலாம். ஆலயம் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

















