செய்திகள் :

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி... தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

post image

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

இந்திய தேர்தல் ஆணையம் தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகள் இப்போது திடீரென்று முளைத்தவை அல்ல.  இந்த மோசமான போக்கு, 2017-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.

மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அரசின் கீழ் இயங்கும் விசாரணை அமைப்புகளும், அரசியல் சாசன அமைப்புகளும் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல்  ஆணையமும் அதில் ஒன்று.

தேர்தல் ஆணையத்தின் சரிவு!

சுதந்திரமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில், தலைமைத் தேர்தல் ஆணையர்களாகவும், தேர்தல் ஆணையர்களாகவும் நியமிக்கப்படுபவர்கள் மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதற்கு ஏராளமான உதாரணங்களை என்னால் அடுக்க முடியும்.

தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ஒரு நேர்மையான அதிகாரி. நான், அரியானா மாநில ஐ.ஏ.எஸ் கேடராகப் பணியாற்றியவன். பணிக்காலத்தில் எனக்கு அவர் ஜூனியர்.  சிறந்த அதிகாரி. தலைமைத் தேர்தல் ஆணையராக வர வேண்டியவர் அவர்.

ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரதமர் மோடியின் பிரசாரம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ச்சியாக மீறிவந்தார். தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாகக் கருதிய விஷயங்களை லவாசா கண்டுகொள்ளாமல் இருந்துவிடவில்லை. அவற்றுக்கு எதிராக அவர் தொடர்ந்து குறிப்புகளைப் பதிவு செய்தார். நான்கு, ஐந்து முறை அவர் தனது எதிர்ப்பை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.

“பிரதமருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் சமமாகப் பொருந்த வேண்டும்” என்றும், “விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். அவர் மோடிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எதையும் செய்யவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தனது கருத்தை லவாசா பதிவு செய்தார்.

அந்த நேரத்தில், லவாசாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கின. அவருடைய மனைவி பணியாற்றிய வங்கி தொடர்பாகவும், அவருடைய மகன் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் வதந்திகளும் திடீரென்று கிளம்பின. அது தொடர்பான பிரசாரம் பெரியளவில் நடைபெற்றது. பணம் தொடர்பான பல விஷயங்கள் பேசப்பட்டன. லவாசாவுக்கு நிறைய இன்னல்கள் இழைக்கப்பட்டன. இறுதியில், தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்யும் நிலையை ஏற்படுத்தினார்கள்.

“நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வாருங்கள். உங்களுக்கு ஒரு முக்கியமான பதவி வழங்கப்படும்” என்ற வகையில் அவரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு, ஆசியன் டெவலப்மென்ட் வங்கியில் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக வர வேண்டிய ஒருவர், இறுதியில் ஒரு சர்வதேச வங்கியின் துணைத் தலைவராகச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதையும் அவர் ஏற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிடவில்லை. வேறு பாதையை அவர் தேர்ந்தெடுத்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்


ஞானேஷ் குமாரின் பின்னணி

அதன் பிறகு, தேர்தல் ஆணையர்களாக வந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் குப்தா இருக்கும் காலத்தில்தான், மிகப்பெரிய பிரச்னைகள் வெடித்திருக்கின்றன. இவர், ஒரு கேரளா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. கேரளாவில் பணியாற்றியபோது, இவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிறகு, அவர் டெல்லிக்குச் சென்றார். அங்கு இணைச் செயலாளராகவும், கூடுதல் செயலாளராகவும், செயலாளராகவும் அடுத்தடுத்து உயர்ந்தார்.

மத்திய அரசு, கூட்டுறவுத்கு என்று தனியாக அமைச்சகத்தை உருவாக்கியது. அதன் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் ஞானேஷ்குமார். உள்துறை அமைச்சரான அமித் ஷா தான், கூட்டுறவுக்கும் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. அமித் ஷாவுக்கும், ஞானேஷ்குமாருக்கும் நெருக்கம் அதிகரித்தது. ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம் தொடர்பான நடவடிக்கையில், அதற்கான திட்டமிடலில் ஞானேஷ் குமாருக்கு முக்கியப் பங்கு இருந்தது.

அந்த நடவடிக்கைக்கான வரைவு திட்டத்தைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு இவர்தான் தலைவராக இருந்தார். அப்போது அவர் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றினார். அதன்பிறகு, உள்துறை அமைச்சகத்திலும், கூட்டுறவு அமைச்சகத்திலும் முக்கியமான பொறுப்புகளை வகித்த அவர், பின்னர் தேலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றது என்பது நான் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு. அதற்கு பல ஆதாரங்களையும் நான் வெளியிட்டிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற சில மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் அதேபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது.

உதாரணமாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.



SIR ஏன்?

கொரோனா பெருந்தொற்று வருவதற்கு முன்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவை தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அந்த நேரத்தில்தான் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் CAA, NRC நடவடிக்கைகளை முழுமையாக அமல்படுத்த முடியாத சூழல் உருவானது.

சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் CAA, NRC பயன்படுத்தப்படலாம் என்ற விமர்சனங்கள் அப்போது எழுந்தன. குறிப்பாக, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை குடியுரிமை தொடர்பான சிக்கலுக்குள் கொண்டு வரக்கூடும் என்ற அச்சமும் வெளிப்பட்டது.

SIR
SIR


அதை நேரடியாகச் செய்ய முடியாத நிலையில், தேர்தல் கமிஷனைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் வழியாக இதே நோக்கத்தை அடைய முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அந்தப் பின்னணியில்தான் SIR நடவடிக்கையை நான் பார்க்கிறேன். பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் SIR நடைமுறையைத் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இவ்வளவு பெரிய அளவிலான ஒரு நடவடிக்கையை தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் தொடங்குவார்களா?

இதற்கு முறையான கோப்புகள் தேர்தல் கமிஷனில் இல்லை,  கமிஷனின் முழுமையான ஒப்புதல் பெறப்படவில்லை. வாட்ஸ்அப் வழியாகவே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு, அப்போதே தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக குடியுரிமை தொடர்பான அம்சங்களை இதில் கொண்டுவரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த அம்சங்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டன.



முறையான விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. வழிகாட்டுதல்கள் முழுமையாக வகுக்கப்படவில்லை. பணியாற்ற வேண்டிய ஊழியர்களுக்கு போதுமான பயிற்சியும் வழங்கப்படவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கீழ்நிலைப் பிரிவு ஊழியர்கள் என ஏற்கெனவே தங்களுடைய வழக்கமான பணிகளைச் செய்து கொண்டிருப்பவர்களிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்கும்போது, அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டியது அவசியம். போதுமான பயிற்சியின்றி இத்தகைய மிகப்பெரிய பணியை அவர்கள் மீது திணித்தால், இயல்பாகவே நிச்சயம் தவறுகள் ஏற்படும்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம்...

SIR நடவடிக்கைக்கு எதிராக பிகார் மக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த நிலையில், இந்த நடைமுறை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைபெற்றது. இப்போது மூன்றாவது கட்டத்தில் இதைவிடப் பெரிய அளவில் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

பெங்களூரில் 50 சதவிகிதம் வரை வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கான திட்டம் இருப்பதாக செய்திகள் வருகின்றன. நான் பெங்களூரில்தான் இருக்கிறேன். நகரத்தின் உள்ளேயே இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதை நேரடியாகப் பார்க்கிறேன்.

இந்தியத் தேர்தல் ஆணையம்



எஸ்.ஐ.ஆர் தொடர்பான பல நடவடிக்கைகள், இரண்டு தேர்தல் கமிஷனர்களுக்குத் தெரியாமலேயே அல்லது அவர்களுடைய ஒப்புதலைப் பெறாமலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. Form-6-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் குடியுரிமையை நிரூபிப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுவரக் கூடாது என்று எதிர்ப்பு இருந்தபோதும், அந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ‘Logical Discrepancy’ தொடர்பான நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும். பிகாரில் நடைபெற்ற SIR-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரண்டு தேர்தல் ஆணையர்களும் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல்கள் வந்திருக்கின்றன.

தேர்தல் கமிஷனுக்குள் தனியான தகவல் தொழில்நுட்பப் பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவையும், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும் பயன்படுத்தித்தான் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் கமிஷனின் முறையான ஒப்புதல் இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது சட்டரீதியாக ஒரு சீரியஸான பிரச்னை.

SIR தொடர்பாக நான் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். தேர்தல் கையேட்டிலேயே ‘Public Audit’ என்ற அம்சம் இடம்பெற்றிருக்கிறது. அதாவது, வாக்காளர் பட்டியலை அரசு ஊழியர்கள் மட்டும் சரிபார்ப்பது போதாது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். மக்களுடைய வாக்குகளால்தான் அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பிலும் மக்களுக்கு நேரடி பங்கு இருக்க வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், அதை குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாகவே பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். அதன்பிறகு கிராம சபைகளிலும், நகரங்களில் வார்டு வாரியாகவும் பொதுமக்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். அந்தப் பட்டியலை மக்கள் முன்னிலையில் உரக்க வாசிக்க வேண்டும்.

யார் அந்தப் பகுதியில் வசிக்கிறார்கள்? யார் இறந்துவிட்டார்கள்? யார் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார்கள்? யார் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்? யாருடைய பெயர் விடுபட்டிருக்கிறது? என்பதையெல்லாம் அந்தப் பகுதி மக்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். அவர்கள்தான் உடனடியாகச் சொல்ல முடியும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் பெண்கள்



‘இந்தப் பெயரை நீக்கியது தவறு’, ‘இவர் இங்கேதான் வசிக்கிறார்; ஆனால் பெயர் இல்லை’, ‘இவர் இறந்துவிட்டார்’ என்று மக்கள் நேரடியாகச் சொல்ல முடியும். அந்தத் தகவல்கள் அனைத்தையும் வெளிப்படையாகப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பும் பொதுமக்களும் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். இதுதான் உண்மையான மக்கள் பங்கேற்புடன் கூடிய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முறையாக இருக்கும்.

இதில் முக்கியமான கேள்வி ஒன்றுதான்: தேர்தல் கமிஷனில் யார் ஒப்புதல் அளித்தார்கள்? யார் ஒப்புதல் அளிக்கவில்லை? இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் அமர்ந்து முடிவெடுப்பது போதாது. அந்த முடிவுகளின் சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான விளைவுகளைப் பற்றி சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெறாமல், தேர்தல் கமிஷன் அளிக்கும் தகவல்களை மட்டுமே நம்பி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தால், அது சரியான அணுகுமுறை அல்ல.

எனவே, நீதித்துறையையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்த சட்டப் போராட்டத்தையும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். இந்த விவகாரங்களின் ஒட்டுமொத்த தாக்கத்தைப் பார்க்கும்போது, ஜனநாயகத்தின் அடிப்படையே கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகியிருக்கிறது.

வாக்காளர் பட்டியல் என்பது தேர்தலின் அடிப்படை. அந்தப் பட்டியலே வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் இல்லாவிட்டால் தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கையே பாதிக்கப்படும். அதனால் இது வெறும் தேர்தல் கமிஷன் தொடர்பான ஒரு நிர்வாகப் பிரச்னை அல்ல. ஜனநாயகத்தின் அடிப்படையையே பாதிக்கக்கூடிய பிரச்னை.

விசித்திரமான சூழல்!


SIR காரணமாக சட்ட ரீதியில் ஒரு விசித்திரமான சூழல் உருவாகியிருப்பதாகக் கருதுகிறேன். ஒரு காலகட்டத்தில் இருந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டுதான் 2024 நாடாளுமன்றத் தேர்தலும், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. அதன்பிறகு SIR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புதிய வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டது.

இதனால் இரண்டு வெவ்வேறு வாக்காளர் பட்டியல்கள் என்ற நிலை உருவாகிறது. இரண்டு பட்டியல்களும் ஒரே நேரத்தில் அரசமைப்புச் சட்டரீதியாக சரியாக இருக்க முடியுமா? 2024-ல் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சரியானது என்று நாம் ஏற்றுக்கொண்டால், தற்போது இருக்கும் பட்டியல் எப்படி சரியானதாக இருக்க முடியும்? தற்போது இருக்கும் பட்டியல்தான் சரியானது என்றால், 2024-ல் பயன்படுத்தப்பட்ட பட்டியலின் நிலை என்ன? 2024 தேர்தலில் வாக்களிக்கத் தகுதியற்ற ஒருவர் வாக்களித்திருந்தால், அந்தத் தேர்தலின் சட்டப்பூர்வத்தன்மை என்னவாகும்? அதேபோல், இப்போது 15 சதவிகித வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், அந்த 15 சதவிகித வாக்காளர்கள் இல்லாமல் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் என்னவாகும்?

SIR | Decode
SIR | Decode



பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 3, 5 அல்லது 8 சதவிகிதம் போன்ற அளவில்தான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது 15 சதவிகித வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், அந்தத் தேர்தல்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுவது இயல்புதானே? இந்தக் கேள்வி நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பொருந்தும். மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். அதேபோல தமிழ்நாடு, பிகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் இதன் தாக்கம் குறித்து கேள்வி எழுகிறது. இது குறித்து நாடு முழுமைக்குமான சட்ட ரீதியான பிரச்னைகளை ‘சிவில் சொசைட்டி’ அமைப்புகள் சார்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

‘Citizen‘s Commission on Elections’, ‘Vote for Democracy’, ‘Forum for Electoral Intergrity’ உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தத்துக்காக செயல்பட்டுவரும் அமைப்புகள் சார்பில் இத்தகைய பணிகளை மேற்கொண்டுவருகிறோம். எங்களுடைய நிலைப்பாடு தெளிவானது: தற்போதைய SIR பட்டியலை மட்டும் வைத்துக்கொண்டு இனிமேல் தேர்தல்களை நடத்துவது குறித்து தீவிரமான கேள்விகள் இருக்கின்றன. ஏற்கெனவே இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற தேர்தல்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கேள்வி இருக்கிறது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் நிலை உருவாகலாம். அப்படி ஒரு சூழல் உருவானால், தமிழக சட்டமன்றத் தேர்தலும் அந்த சட்டரீதியான கேள்விக்குள் வரும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் சட்டரீதியாக இந்தப் பிரச்னையை முன்னெடுத்து வருகிறோம்.

இது குறித்து வரும் அக்டோபர் 3-ம் தேதி தேசிய அளவிலான இணையவழிக் கருத்தரங்கையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க இருக்கிறோம். அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் திட்டமிட்டு வருகிறோம். எந்த வடிவத்தில், எந்த வழியில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது என்பதை அதற்கான நேரத்தில் அறிவிப்போம்.!

"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் பு... மேலும் பார்க்க

"நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் வேளாண் அமைச்சர் ஆக்குகிறோம் என்றார்" - யாரைச் சொல்கிறார் சீமான்?

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (செப்.23) தேர்தல் பிரசாரம் செய்திருந்தார் சீமான்.அப்போது பேசிய அவர், "என்ன நடக்குது இப்போ?... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருக்கிறது. அங்கே அமெரிக்க அதிகாரிகளுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சு... மேலும் பார்க்க

``ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" - அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei)கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச... மேலும் பார்க்க

"ரஷ்யாவில் சீன அதிபருக்குத்தான்... ரஷ்யப் போரில் இந்திய மக்களும்..!"- ஐ.நாவில் ஜெலன்ஸ்கி பேச்சு

தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.அந்தக் கூட்டத்தில் நேற்று ஜெலன்ஸ்கி பேசினார்.தற்போது உலகத்தில் நடந்துவரும் போர்களில் ரஷ்ய-உக்ரைன் போரும் மிக முக்கிய... மேலும் பார்க்க

`செல்வப்பெருந்தகை' வைத்த விமர்சனம் - பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன பதில்!

திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க