பொங்கல் பண்டிகை: இந்த ஆண்டு சிறப்பு என்ன? - பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது?
குடும்பத்தைவிட்டு பிரிந்த தேஜ் பிரதாப் தந்தை லாலு, சகோதரன் தேஜஸ்வியுடன் சந்திப்பு! - என்ன காரணம்?
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனது சகோதரனுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றார். அதோடு தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
மேலும் தனது சகோதரனுடன் ஒருபோதும் சமரசமாக செல்ல மாட்டேன் என்றும் தேஜ் பிரதாப் குறிப்பிட்டு இருந்தார். இதனால் தேஜ் பிரதாப் தனது பெற்றோரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.
தேர்தலுக்கு பின்னர், லாலு பிரசாத் மகள் ரோஹினி தன்னை தனது சகோதரர் தேஜஸ்வியும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக குற்றம் சாட்டியபோது ரோஹினிக்கு தேஜ் பிரதாப் ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்.
சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேஜ் பிரதாப் தனது பெற்றோரை பார்க்க அவர்களது வீட்டிற்கு வந்தார்.

அவர் சென்றவுடன் தனது தந்தை மற்றும் தாயார் காலில் விழுந்து வணங்கி அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு தனது இளைய சகோதரனையும் சந்தித்து பேசினார். மேலும் இளைய சகோதரன் தேஜஸ்வி மகளை தனது கையில் எடுத்து கொஞ்சினார். தேஜ் பிரதாப் மீண்டும் குடும்பத்தோடு வந்து சந்தித்தது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
மகர சங்கராந்தியையொட்டி தயிர்-அவல் விருந்துக்கு, பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பெற்றோர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோரை தேஜ் பிரதாப் முறைப்படி அழைப்பு விடுத்தார். தேஜ் பிரதாப் தனது தம்பிக்கு அழைப்புக் கடிதத்தை நேரில் வழங்கினார்.
இது சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் குடும்ப ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி ஆகியோர் மீடியா முன்பு மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். இச்சந்திப்பு குறித்து தேஜ் பிரதாப் அளித்த பேட்டியில், இந்தத் தருணம் ஒரு அற்புதமான அனுபவம் என்று விவரித்தார். குழந்தையுடன் தேஜ் பிரதாப் புன்னகைக்கும் புகைப்படங்கள் வைரலாகப் பரவின.
இதற்கிடையே பீகார் தோல்விக்கான காரணம் குறித்து தேஜஸ்வியிடம் கட்சி சில ஆலோசனைகள் வழங்கியுள்ளது. அவற்றில் முக்கியமானது தந்தை லாலு யாதவ் செய்தது போல, இனிமேல் தேஜஸ்வியும் தனது கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசவேண்டும். இதற்காக அவரது கதவு திறந்தே இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேஜஸ்வி யாதவ் முடிந்தவரை பலரைச் சந்திக்க முயற்சிக்க வேண்டும் என்று அவரது ஆலோசகர்கள் கூறியுள்ளனர். இதை அவரது தந்தை செய்தது போல வீட்டில் மட்டுமல்லாமல், கட்சி அலுவலகத்திலும் செய்யலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், தேஜஸ்வி யாதவ் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஒரு "பீகார் உரையாடல் யாத்திரையை" மேற்கொண்டு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, அவர் வட்டார அளவிலான கட்சித் தொண்டர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர் கட்சியில் அமைப்பு ரீதியான சில மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்றும், மாவட்ட அளவில் கட்சியைப் புனரமைக்க வேண்டும் என்றும், யாதவர்களைத் தவிர மற்ற சாதியினரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் கூறப்படுகின்றன. மேலும், கட்சியில் உள்ள அனைத்து சமூக இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
















