புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்; களைகட்டிய நிகழ்ச்சிகள் -...
பொங்கல் பண்டிகை: இந்த ஆண்டு சிறப்பு என்ன? - பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது?
பொங்கல் பண்டிகை நாளை (15.1.26) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபடுவது சிறப்பான ஒன்று.
அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளே உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. எனவே இந்த நாள் புண்ணியகாலமாகக் கருதப்படுகிறது. பொதுவாகப் புண்ணிய காலங்கள் அனைத்துமே இறைவழிபாட்டுக்கானவை. இந்த நாளில் செய்யும் இறைவழிபாடுகள் பன்மடங்கு நன்மையைக் கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல நாளாக இந்தத் தைத் திருநாள் பிறக்கிறது.
நாடு முழுவதுமே இந்த நாள் முக்கியமான புண்ணிய தினமாகப் போற்றப்படுகிறது. சூரியன் மகர ராசியில் சஞ்சாரம் செய்யும் இந்த நாளை மகர சங்கராந்தி என்றும் போற்றுவர். மகர சங்கராந்தி நாளில் புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷம். காசி போன்ற கங்கைக் கரைத் தலங்களில் இந்த நாளில் தொடங்கி 48 நாள்கள் நீராடுவது மிகுந்த புண்ணிய பலனைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

மகிமை நிறைந்த மகர சங்கராந்தி
இந்த ஆண்டு மகர சங்கராந்தியின் போது மகரராசியில் நான்கு கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் மகரத்தில் சஞ்சரிக்கும் போது பிறக்கும் இந்த மகர சங்கராந்தி உலகுக்கு பலவிதமான சுபிட்சங்களை அள்ளித் தரும் என்கிறார்கள்.
முற்காலத்தில் மகரசங்கராந்தியை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் சொல்லும் வழக்கமும் உண்டு. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மழையும் வெயிலும் முன் எப்போதையும் விட அதிகமாக இருக்கும். புதிய நோய்த்தொற்றுகள் தோன்றும் என்கிறார்கள்.
மேலும் ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு மகர சங்கராந்தி புருஷன் மந்தன் என்னும் திருநாமத்தோடு ஆண்புலி மீது வருவதால் வன விலங்குகளுக்கு சேதம் ஏற்படும் ஆண்டாக அமையும். நோய்த் தொற்றுகள் பரவும் என்றும் பலன் சொல்கிறார்கள். மகர ராசியில் செவ்வாய் உச்சமடைந்திருப்பதால் இந்தத் தைத் திருநாளுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கிறார்கள்.
இப்படி ஜோதிட, ஆன்மிக, சமூக முக்கியத் துவம் கொண்ட இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடுவோம். போகியில் தொடங்கி காணும் பொங்கல்வரை நான்கு நாள்கள் திருவிழாக் காலமாக அமையும். அதிலும் பொங்கல் திருநாள் அன்று சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடுவது விசேஷம்.
தை முதல் நாளன்று அதிகாலையில், பொங்கலிட்டுப் படைத்துச் சூரியனை வணங்கி வழிபடுவது விசேஷம். ‘இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி’ என்று சூரியனைப் பூஜிக்க வேண்டும். சூரியனுக்கு உரிய காயத்ரீ மந்திர விழாவே பொங்கல் திருநாள் என்பது பீஷ்மர் வாக்கு.
அன்றைய தினம் சூரிய நாராயணராகக் கருதி திருமாலை வழிபடுவதால் சகல போகங்களும் உண்டாகும். அதேபோல் அன்று சிவபெருமானையும் ஆராதிக்க வேண்டும். இந்த நாளில் நெய்யில் வறுத்த எள்ளால் தீபமேற்றி, சிவபெருமானை வழிபட்டு ‘மகா தீப விரதம்’ மேற்கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
பொங்கல்பானை வைக்க நல்ல நேரம்
இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய பொங்கல் பண்டிகை நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம். இந்த ஆண்டு, ஜனவரி 15 - ம் தேதி வியாழக்கிழமை என்பதால் இந்த நாளில் ராகு காலம் எம கண்டம் இல்லாமல் நம் வசதிக்குட்பட்ட நேரத்தில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடலாம்.
என்றாலும் காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் சுக்ர ஹோரையில் பொங்கல் வைப்பது சிறப்பு என்கிறார்கள். இந்த நேரத்தில் பால் பொங்கினால் வீட்டில் மங்கலங்களும் பொங்கும் என்கிறார்கள். மேலும் அந்த நேரம் குளிகை நேரமாகவும் அமைகிறது என்பதால் வீட்டில் சுபகாரியங்கள் களை கட்டும். அதேபோன்று 11 முதல் 12 மணிக்குள் மீன லக்னத்தில் சந்திர ஹோரையில் வைப்பதும் சிறப்பே.
இந்த நாள் துவாதசியாகவும் அமைகிறது. முன் தினம் (ஜன 14) ஏகாதசியாக வருவதால் அன்று விரதம் இருப்பவர்கள் துவாதசி பாரனை முடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் காலை 7.30 மணி முதல் 8.15 மணிக்குள் பொங்கல் பானை வைப்பது விசேஷம் என்கிறார்கள். பாரனை வழக்கமாகக் கடைப்பிடிப்பதைப்போல் அமைய வேண்டும். பொங்கல் பானை வைப்பது தனியாகச் செய்ய வேண்டும் என்பது ஆன்மிக அன்பர்களின் வழிகாட்டலாக அமைந்துள்ளது.
பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுவது கணுப் பண்டிகை. இது பெண்களுக்கு உரியது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டிவைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள். இதனால் மங்கல வாழ்க்கை அமையும், மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் கணுப்பிடி வைத்து வழிபடுவது உண்டு.
கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு!
இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள்.
கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும்.
வெற்றிலை - பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டுகள், மஞ்சள் அட்சதை, பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள்.
பூஜையின்போது கணுப்பிடியாக வைத்த சாத வகைகள் இருக்கும் இடத்தில் அட்சதையையும் பூக்களையும் இட்டு, ‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’ என்று சொல்லி வணங்குவார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள்.
கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும். கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட்டார்கள் என்பது மரபு.
இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப் படுகிறது. ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்னும் பழமொழி விளக்கும்.



















