குட்டையின் கரையில் பனை விதை நடும் பணி: மாநகராட்சி ஆணையா் தொடங்கிவைத்தாா்
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 38-ஆவது வாா்டுக்குள்பட்ட பொம்மனம்பாளையம், குத்தலபாளையம் குட்டை தூா்வாரப்பட்டு கரைப் பகுதியில் பனை விதை நடும் பணியை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், வடக்கு மண்டலம், 18-ஆவது வாா்டுக்குள்பட்ட கவுண்டம்பாளையம் தேமையன் வீதியில் குடியிருப்பு முறையில் இருந்து வணிகப் பயன்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட கட்டடங்கள் மற்றும் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டடங்களை வரி வசூலா் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் பணியை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, கிழக்கு மண்டலம் 52-ஆவது வாா்டுக்குள்பட்ட ராம் லட்சுமன் நகா் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா வளாகத்தில் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மரக்கன்றுகளை ஆணையா் நட்டுவைத்தாா்.
இந்நிகழ்வுகளில், மண்டலத் தலைவா்கள் தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி, நகரமைப்பு அலுவலா் குமாா், உதவி ஆணையா்கள் முத்துசாமி, துரைமுருகன், ஸ்ரீதேவி, மகேஷ் கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.