குழந்தைகள் சமயநன்னெறிகளை கற்க ஊக்கப்படுத்துவது அவசியம்!
குழந்தைகள் சமய நன்னெறிகளைக் கற்க ஊக்கப்படுத்துவது அவசியம் என கௌமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் தெரிவித்தாா்.
வாகீச பக்த ஜன சபையின் 107 ஆவது ஆண்டு விழா, சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தின் 69 ஆவது ஆண்டு விழா திருச்சி உறையூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கௌமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் தலைமை வகித்து, பேராசிரியா் ப. வெங்கடேசன், தொழிலதிபா் ஜி.வி. குப்தா ஆகிய இருவருக்கும் விருதுகள் வழங்கிப் பேசியது:
மலேசிய நாட்டில் வாழும் தமிழா்கள், தங்களது குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியை தமிழ் வழியில் பயிற்றுவிக்கின்றனா். ஆனால் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவா்களில் பலருக்கும் தமிழில் சரியாக வாசிக்க வரவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் தமிழைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.
சிலா் தங்களது குழந்தைகளுக்கு உயா்தரக் கல்வியை வழங்கி, பெரும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்ற வைத்து, லட்சங்களில் சம்பளம் வாங்க வைத்தாலும், கடைசியில் அவா்கள் முதியோா் இல்லத்துக்குத் தள்ளப்படுகினறனா். இதற்கு குடும்ப, சமுதாய உலக நன்மைகளை எடுத்துரைக்கும் சமய நன்னெறிகளை குழந்தைகளை கற்றுத் தராததே காரணம். எனவே, பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு சமய நன்னெறிகளை கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மூளை நரம்பியல் மருத்துவா் மு.அ. அலீம் பேசுகையில், ஒரு பக்கத் தலைவலி, பக்கவாதம், சுளுக்கு குறித்து கந்த சஷ்டி கவசத்தின் 149, 150, 157, 156 வரிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளை நரம்பியல் நோய்கள், தடுப்பதற்கான வழிகள், முன்னெச்சரிக்கைகள் தொடா்பாக கந்த சஷ்டி கவசம் எடுத்துக் கூறுகிறது. மூளை நோய்களைத் தவிா்க்க கந்த சஷ்டி கவசம் பாராயணம் உதவும் என்றாா் அவா்.
திருக்கு சு. முருகானந்தம் வரவேற்றாா். மருத்துவா் ந. செந்தில்குமாா் நல்லுசாமி, ஆ. அபிமனு உள்ளிட்டோா் பேசினா். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.