கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராக...
"கேரளாவில் திருமணம் செய்துகொண்டது ஏன்?" கும்பமேளா மோனலிசா சொன்னது என்ன?
பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மோனலிசா போஸ்லே புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். மோனலிசா போஸ்லே மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவராவார். கும்பமேளாவுக்குப் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வாய்த்தன. நாகம்மா என்ற சினிமா மூலம் மலையாளத்தில் அறிமுகம் ஆனார். இதற்கிடையே சினிமாவில் நடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மானை காதலித்து வந்தார் மோனலிசா போஸ்லே. கேரளம் மாநில திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம், பூவாறு உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புக்காக மோனலிசா போஸ்லே வந்திருந்தார். நேற்று திடீரென திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்துக்குச் சென்ற அவர் தனது காதலன் முஹம்மது ஃபர்மானை திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், வேறொரு நபரை திருமணம் செய்யும்படி தந்தை வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
தனது 10 வயதிலேயே தந்தையின் சகோதரி மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இப்போது படபிடிப்பு தளத்தில் இருந்து ஊருக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் எடுத்துவருவதாகவும் மோனலிசா தெரிவித்தார். மோனலிசாவின் தந்தை ஜெய்சிங் போஸ்லேவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் போலீஸார். அதே சமயம் தங்கள் குல வழக்கப்படி பெண்களை வேறு கிராமத்துக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை என ஜெய்சிங் போஸ்லே தெரிவித்தார். அவருக்கு விபரங்களை எடுத்துக்கூறி புரியவைத்தனர் தம்பானூர் போலீஸார். அதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தை அடுத்த அருமானூர் நயினார் கோவிலில் வைத்து மோனலிசா போஸ்லே - முஹம்மது ஃபர்மானுக்கும் நேற்று மாலை திருமணம் நடந்தது. மோனலிசா போஸ்லே சிவப்பு நிற சேலையிலும், முஹம்மது ஃபர்மான் வெள்ளை வேட்டி, சட்டையும் அணிந்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்த பிறகு மோனலிசா போஸ்லே கூறுகையில், "இந்தத் திருமணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்கள் காதலுக்கு என் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. என் தந்தை நான் விரும்பாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார். பாதுகாப்பிற்காக நாங்கள் கேரளத்துக்கு வந்தோம். கேரளம் எங்களுக்கு மிகவும் பிடித்த மாநிலம். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள், ஆதரவானவர்கள். அதனால்தான் இங்கேயே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்" என்றார். மோனலிசாவை திருமணம் செய்த முஹம்மது ஃபர்மானும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். திருமணத்தில் கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கூறுகையில், "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அந்த சொர்க்கம்தான் கேரளம். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவரையும் திருமணம் செய்துகொள்ளலாம் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் அதுபோன்ற திருமணங்கள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் சாத்தியமாகவில்லை. கேரளத்தில் மட்டுமே அதுபோன்று நடக்க முடியும். சி.பி.எம் அவர்களை வாழ்த்த வந்திருக்கிறது" என்றார். கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், "உண்மையான கேரளா ஸ்டோரி இதுதான். கேரள மக்கள் உலகத்தின் முன்பு பெருமை கொள்ளலாம். மத சார்பற்ற தன்மைக்கும், மனித அன்புக்கும் பெயர்பெற்ற மாநிலம் கேரளம்" என்றார்.











