கேப்டனோட வேஷ்டி சட்டையை Rajini Sir போட்டுக்கிட்டார்! - Kaja Mohideen | Vijayakan...
கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராகுல் காந்தி!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகின்றன. கேரளாவில் தற்போது எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் அன்றே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் திட்டத்துடன் கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என மும்முரமாக உள்ளது காங்கிரஸ். முதற்கட்டமாக 31 வேட்பாளர்களை உள்ளடக்கிய முதல் பட்டியலுக்கு மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடிய காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் 19 சிட்டிங் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அடக்கம். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உட்பட சிட்டிங் எம்.பி-க்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று காங்கிரஸ் ஹைகமாண்ட் முடிவு செய்துள்ளது. எம்.பி-க்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு அளித்தால், அதிருப்தியில் உள்ள மற்றவர்களின் நிலைப்பாடுகள் தேர்தலில் கட்சியைப் பாதிக்கும் என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சி.வேணுகோபாலை மட்டும் போட்டியிட வைக்கலாம் என தலைமை ஆலோசித்திருந்ததாம். அப்படி செய்தால் அவர் முதலமைச்சர் வேட்பாளர் என்ற ரீதியில் கருத்து எழுந்து விவாதத்துக்கு வழிவகுக்கும் என்றும் தலைமை கருதியதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்த சிட்டிங் எம்.பி கே.சுதாகரனை சமாதானப்படுத்தும் பொறுப்பு ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பிறகு அந்த தொகுதிகளில் இடைத்தேர்தலில் நடைபெறும். இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், தேசிய அரசியலில் காங்கிரஸைப் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டியே சிட்டிங் எம்.பி-க்கள் போட்டியிட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை தலைமை எடுத்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக கூறுவது ஊகத்தின் அடிப்படையில்தான். பலமுறை எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உள்ளேன். தேர்தலில் போட்டியிட பலருக்கு விருப்பம் இருக்கும். ஆனால், கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்பவே முடிவுகள் இருக்கும்" என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடூர் பிரகாஷ், கோழிக்கோடு எம்.பி எம்.கே.ராகவன், வடகரை எம்.பி ஷாபி பறம்பில், பென்னி பெஹனான் மற்றும் கொடிக்குந்நில் சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கேரள மாநில அளவிலான அரசியலில் தீவிரமாக களம் இறங்கலாம் என நினைத்திருந்த நிலையில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை என காங்கிரஸ் தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டது.














